பாராலிம்பிக்ஸ்: நாளை தொடங்குகிறது!- இந்திய போட்டியாளர் விபரம்!
சர்வதேச அளவில் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக்போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருவதை நாம் அறிவோம். அதன்படி 33 வது ஒலிம்பிக் போட்டி கடந்த ஜூலை 26ம் தேதி முதல் பிரமாண்டமாக தொடங்கி கடந்த ஆகஸ்ட் 11ம் தேதி நிறைவடைந்தது. இந்த நிலையில் மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் பிரம்மாண்ட விழாவுடன் நாளை (ஆக.28) தொடங்க உள்ளது
நாளை தொடங்கும் இந்த பாராலிம்பிக் ஒலிம்பிக் தொடரானது வரும் செப்.8 (ஞாற்றுக்கிழமை) வரை நடைபெற இருக்கிறது. மொத்தமாக 170 நாடுகள் இந்த பாராலிம்பிக் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது.அந்த வகையில் இந்த முறை இந்தியா தரப்பில் 84 வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இது இந்தியாவைப் பொறுத்தவரை ஒரு சாதனை என்றே சொல்லலாம். கடந்த 2020 ஆண்டில் நடைபெற்ற டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் 54 வீரர்கள் கலந்து கொண்டு மொத்தம் 19 பதக்கங்களை வென்று இந்தியா சாதித்தது. எனவே, 84 வீரர், வீராங்கனைகளுடன் இந்தியா இந்த முறை 12 வெவ்வேறு விளையாட்டுகளில் பங்கேற்கிறது. குறிப்பாகத் தடகளத்தில் மட்டும் 38 போட்டியாளர்கள் கலந்து கொள்கின்றனர். அதில், வில்வித்தை, பேட்மிண்டன், சைக்கிள் ஓட்டுதல், ஜூடோ. பாரா கயாக்கிங், பவர்லிஃப்டிங், ரோயிங், துப்பாக்கி சுடுதல். டேபிள் டென்னிஸ், டெக்வாண்டோ போன்ற விளையாட்டுகளில் கலந்து கொள்ள உள்ளனர்.
கடந்த டோக்கியோ பாராலிம்பிக்கில் மட்டும் 5 தங்கப் பதக்கம், 8 வெள்ளிப் பதக்கம் மற்றும் 6 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 19 பதக்கங்கள் வென்று 24-வது இடத்தைப் பிடித்து இதுவரை இல்லாத புதிய சாதனையை படைத்தது. மேலும், இந்த ஆண்டு பாராலிம்பிக்ஸ் தொடரில் இந்திய விளையாட்டு வீரர்கள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி புது சாதனைகள் படைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதிலும் குறிப்பாக 10 வீரர்/ வீராங்கனைகள் கண்டிப்பாக பதக்கம் வெல்வார்கள் என ஒட்டு மொத்த இந்தியாவும் நம்பிக்கையில் இருக்கிறது. மேலும், இவர்களை தாண்டி பல வீரர்/வீராங்கனைகள் இந்த முறை புதிதாக பதக்கப் பட்டியலில் இடம் பெறுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், கடந்த பாராலிம்பிக்ஸை விடக் கூடுதலாக இந்தியாவுக்குப் பதக்கங்கள் கிடைக்குமெனவும் கருதப்படுகிறது.
10 பதக்க வீரர்/வீராங்கனைகள்
சுமித் ஆன்டில் – (தடகளம் – ஈட்டி எறிதல்)
அவனி லேகாரா – (துப்பாக்கி சுடுதல் – 10/50 மீ ஏர் பிஸ்டல்)
மாரியப்பன் தங்கவேலு – (தடகளம் – உயரம் தாண்டுதல்)
நிஷாத் குமார் – (தடகளம் – உயரம் தாண்டுதல்)
யோகேஷ் கதுனியா – (தடகளம் – வட்டு எறிதல்)
பவினா படேல் – (டேபிள் டென்னிஸ்)
சுஹாஸ் லலினகெரே யதிராஜ் – (பாரபேட்மிண்டன்)
சிம்ரன் சர்மா – (துப்பாக்கி சுடுதல்)
ஷீத்தல் தேவி – (வில்வித்தை)
ருத்ரன்ஷ் கண்டேல்வால் – (துப்பாக்கி சுடுதல் – 50மீ. ஏர் பிஸ்டல்)