பாராலிம்பிக் 2024: இந்திய அணி 29 பதக்கங்களை வென்று சாதனை!
பாரிஸில் கடந்த ஆகஸ்ட் 29 ம் தேதி கோலாகலமாக தொடங்கியது பாராலிம்பிக் தொடர். மாற்றுத்திறனாளிகளுக்காகவே நடத்தப்பட்ட இந்த தொடர் 17-வது பாரா ஒலிம்பிக் தொடராகும். இதில் பல உலக நாட்டு வீரர்கள் கலந்து கொண்டு விளையாடி அவர்களது திறமையை வெளிக்காட்டி வந்தனர்.கடந்த 11 நாட்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த அனைத்து போட்டிகளும் நேற்று நிறைவடைந்து. இந்த நிலையில், நேற்று இரவு நிறைவு விழா கோலாகலமாக வாணவேடிக்கைகளுடன் நடைபெற்றது. இந்த விழாவின் நிறைவில் பாராலிம்பிக் தீபம் அடுத்த 2028-ம் ஆண்டு பாராலிம்பிக் நடைபெற உள்ள அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் விளையாட்டு கமிட்டியிடம் ஒப்படைக்கப்பட்டது.
மேலும், அந்த விழாவில் வண்ணமயமான வானவேடிக்கைகளும், கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. ஒவ்வொரு நாட்டைச் சேர்ந்த வீரர் மற்றும் வீராங்கனைகள் தேசியக் கொடியை ஏந்தி தங்களது நன்றியை தெரிவித்தனர். அதன்படி, இந்தியாவின் வில்வித்தை வீரரான ஹவிந்தரும், தடகள வீராங்கனையான ப்ரீத்தியும் இந்திய தேசியக் கொடியை ஏந்தி நன்றியை தெரிவித்தனர்.
இந்திய அணியின் சாதனை :
கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்ற பாராலிம்பிக் தொடரில் கலந்து கொண்டு விளையாடிய இந்திய அணி மொத்தம் 19 பதக்கங்களை வென்றிருந்தனர். ஆனால், இந்த ஆண்டு நடைபெற்ற பாராலிம்பிக் தொடரில் இந்திய அணி 7 தங்கம், 9 வெள்ளி மற்றும் 13 வெண்கலம் என மொத்தம் 29 பதக்கங்களை வென்று, பதக்கபட்டியலில் 18-வது இடம் பிடித்து நிறைவு செய்து புதிய சாதனை படைத்துள்ளது.
தமிழக வீரரான மாரியப்பன் தங்கவேலு உயரம் தாண்டுதல் போட்டியில் ஹாட்ரிக் பதக்கம் வென்று புதிய மைல் கல் சாதனையை படைத்தார். ரியோ பாராலிம்பிக்கில் தங்கம், டோக்யோவில் வெள்ளியும், தற்போது பாரிஸ் பாராலிம்பிக்கில் வெண்கலமும் வென்று அசத்தியுள்ளார். இதே போல பல எண்ணற்ற சாதனைகளை இந்த முறை இந்தியா அணி படைத்துள்ளது. மேலும், ஒட்டுமொத்தமாக பாராலிம்பிக்கில் இந்தியாவின் பதக்கங்களின் எண்ணிக்கை 50-ஐ தாண்டி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி திரெளபதி முர்மு வாழ்த்து..!
பாரிஸ் பாராலிம்பிக் 2024தொடரில் இந்திய அணியின் இந்த அபாரமான சாதனைகளால் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். பாரிஸ் தொடரில் மட்டும் 29 பதக்கங்கள் வென்றுள்ளது. இந்தியா இதுவரை 13 பாரா விளையாட்டுகளில் வென்ற 60 பதக்கங்களில் இது கிட்டத்தட்ட பாதியாகும். கடந்த 2016 ஆண்டு வரை 11 பாராலிமிக்ஸ் போட்டிகளில் இந்தியா 12 பதக்கங்களை மட்டுமே வென்றுள்ளது. கடந்த 2020-ல் டோக்கியோவில் நடைபெற்ற பாராலிம்பிக்ஸ் தொடரில் இந்தியாவின் செயல்திறனால் 19 பதக்கங்களுடன் ஒரு சாதனை படைத்தது. தற்போது இந்த பாரிஸ் தொடரில் அதிலிருந்து மேலும் 10 ஆக பதக்கங்கள் உயர்ந்துள்ளது.இந்த சிறப்புப் பெருமையின் தருணத்தில், குடும்பங்கள், பயிற்சியாளர்கள், ஊட்டச்சத்து நிபுணர்கள் மற்றும் எங்கள் பாராலிம்பிக் பங்கேற்பாளர்களுக்கு ஆதரவாக நின்ற அனைத்து நபர்களுக்கும் மற்றும் நிறுவனங்களுடன் நானும் இணைந்து கொள்கிறேன். ஒவ்வொரு பதக்கம் வென்ற வீரர்களும் சரி, டீம் இந்தியாவில் இருக்கும் மற்ற வீரர்களும் சரி, இவர்கள் செய்த இந்த சாதனைகளை அழியாத மனதில் கொண்டாடி அதனை கதைகளாகவும் சொல்லப்பட வேண்டும். இது நமது தேசத்தை, குறிப்பாக இளைஞர்களை ஊக்குவிக்கும்”, என பதிவிட்டிருந்தார்.