பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற மாரியப்பன் & ஷீத்தலுக்கு சென்னையில் வரவேற்பு!
சென்னை வானகரத்தில் உள்ள தனியார் பள்ளியான வேலம்மாள் பள்ளி பாரா ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் வெண்கலம் மற்றும் வெள்ளிப் பதக்கங்கள் வென்ற ஷீத்தல் தேவி மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் ஆகியோருக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.அத்துடன் அப்பள்ளியைச் சேர்ந்த இளம் விளையாட்டு வீரர்களை எதிர்கால ஒலிம்பிக் போட்டிக்கு தயார் செய்யும் வகையில் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த விழாவில் 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்று ஒலிம்பிக் பதக்க வீரர்களை உற்சாகமாக வரவேற்றனர்.
நிகழ்ச்சியின் போது பள்ளி மாணவர்களுடன் இணைந்து மாரியப்பன் மற்றும் ஷீத்தல் உற்சாக நடனம் ஆடினர். முன்னதாக ஷீத்தல் தேவி மாணவர்கள் முன்னிலையில் அடுத்தடுத்து 3 அம்புகளை சாரியாக அம்பு எய்தி அசத்தினார். இதனை பிரம்மிப்போடு பார்த்த மாணவர்கள் கைகளைத் தட்டி ஆரவாரம் செய்து கொண்டாடினர்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் சந்தித்த மாரியப்பன் கூறியதாவது, "பயிற்சியின் போது நான் நன்றாக இருந்தேன்.195 சென்டிமீட்டர் வரை உயரம் தாண்டினேன். ஆனால் ஒலிம்பிக் போட்டிக்கு செல்வதற்கு முந்தைய நாள் எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது. அதனால் பயிற்சியில் தாண்டிய உயரம் கூட என்னால் ஒலிம்பிக் போட்டியில் தாண்ட முடியவில்லை. ஆனால் அடுத்த முறை கண்டிப்பாக ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வெல்வேன். எனக்கு பக்கபலமாக எனது பயிற்சியாளர் இருக்கிறார். பருவநிலை மாற்றம் காரணமாக ஏற்பட்ட உடல்நிலை குறைவால் தவறு நிகழ்ந்துவிட்டது. இதனால் தங்கப் பதக்கத்தைத் தவற விட்டு விட்டேன்.
இதனை நினைத்தால் வருத்தமாகத்தான் இருக்கிறது. ஆனால் அடுத்த முறை இந்த தவறு நடக்காதவாறு பயிற்சியை திட்டமிட்டுள்ளோம். போட்டியில் பங்கேற்பதற்கு முன்னதாக ஒரு மணி நேரம் பயிற்சி எடுப்போம். அப்படி பயிற்சி எடுக்கும் போது 185 சென்டிமீட்டர் தான் தாண்ட முடிந்தது. அப்போதே எனது உடல் ஒத்துழைக்கவில்லை என்பதும் தெரிந்து விட்டது. நான் தங்கப்பதக்கம் அடித்து விடுவேன் என இந்தியாவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் பருவ நிலையும் உடல் நிலையும் ஒத்துழைக்காததால் என்னால் தங்கப்பதக்கம் வெல்ல முடியாமல் போனது. இளம் தலைமுறை நான் சொல்லிக் கொள்வது என்னவென்றால் விளையாட்டில் ஒருமுறை தோற்று விட்டால் அதை நினைத்து கவலைப்படக் கூடாது. அதை மறந்துவிட்டுக் கவலைப்படும் நேரத்தில் அவர்கள் செய்த தவறுகளை அவர்கள் செய்யும் தவறுகளை திருத்திக் கொண்டால் அடுத்த முறை கண்டிப்பாக வெற்றி பெறலாம்" என தெரிவித்தார்.