For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

பனகல் அரசர் என்று அழைக்கப்பட்ட பனங்கன்டி ராமராய நிங்கார் - சில குறிப்புகள்!

07:02 AM Dec 16, 2023 IST | admin
பனகல் அரசர் என்று அழைக்கப்பட்ட பனங்கன்டி ராமராய நிங்கார்   சில குறிப்புகள்
Advertisement

1866 ஜூலை 9 இல் பிறந்தவரிவர். நீதிக்கட்சியின் சார்பில் இரண்டு முறை சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த (தமிழ்நாடு) பனகல் அரசர் என்ற பெயருடன் அழைக்கப்பட்டவரின் இயற்பெயர், ராமராய நிங்கார். பிறப்பு, ஆந்திராவின் காளஹஸ்தி அருகே ஜமீன் பண்ணை வீட்டில் 1866-ம் ஆண்டு, ஜூலை 9 அன்று. இறப்பு, டிசம்பர்-16, 1928-ம் ஆண்டில்.

Advertisement

இந்தியாவின் மத்திய நாடாளுமன்றத்தில் நிலச்சுவான்தார்கள், ஜமீன்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் பொருட்டு 1912 முதல் 1915 வரை உறுப்பினராக பதவி வகித்தார். நடேசமுதலியார் இதே காலகட்டத்தில் தொடங்கிய சென்னை திராவிடர் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு பணியைத் தொடர்ந்தார் பனகல். டாக்டர் டி.எம்.நாயர், பிட்டி. தியாகராயர் செட்டியார் ஆகியோர் தொடங்கிய தென்னிந்திய நல உரிமை சங்கத்தை (அட, நீதிக் கட்சிதாங்க...)1917-ல் தொடங்கினர். கருத்து ஒற்றுமையின் அடிப்படையில் அதில் தன்னை இணைத்துக் கொண்டார் பனகல்.இரட்டை ஆட்சி முறையின் கீழ் சென்னை மாகாணத்துக்கு 1920-ல் நடைபெற்ற முதல் தேர்தலில் வென்று சட்டமன்ற உறுப்பினரானார். முதல்வர் சுப்பராயலு ரெட்டி தலைமையிலான அமைச்சரவையில் அதே கால கட்டத்தில் உள்ளாட்சித்துறை மந்திரியாகவும் பதவி வகித்தார்.உடல் நலம் காரணமாக சுப்பராயலு ரெட்டி அடுத்த ஆண்டே பெருந்தன்மையாக பதவியை விட்டு விலகிக் கொண்டார்.இதனையடுத்து 'பனகல்' முதல்வராக பொறுப்புக்கு வந்தார். இரண்டாம் முறையாக தேர்தலை சந்தித்து 1923-ல் மீண்டும் பனகலே முதல்வரானார்.

Advertisement

வேலை வாய்ப்புகளில் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை உறுதி செய்து முதல் ஆணை பிறப்பித்தவர் இந்த பனகல் அரசர். ஆனால் பார்ப்பன அதிகார வர்க்கம் அதை அமல்படுத்தாமல் முடக்கியது. பிறகு கல்வியில் பார்ப்பனரல்லாத மாணவர்களுக்கு இடம் கிடைக்காத நிலையில் அவர்களுக்கு இடம் கிடைக்க வேண்டும் என்பதற்காக கல்லூரியில் மாணவர் சேர்க்கைக் காண குழு ஒன்றை அமைத்து பார்ப்பனரல்லாத மாணவர்களுக்கு கல்லூரியில் இடம் கிடைக்க வழிவகை செய்தார்.தாழ்த்தப்பட்ட பிள்ளைகளுக்கு பள்ளியில் இலவசமாக மதிய உணவு அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

அறநிலையத் துறையை முதன் முதலில் உருவாக்கியவர் அவர்தான், அதுவரை கோயில்கள் சில குறிப்பிட்ட ஆட்களின் சொந்த பராமரிப்பில் கொள்ளையடிக்கப்பட்டு வந்தது. அறநிலையத்துறையை பனகல் அரசர் உருவாக்கிய காலத்தில் பெரியார் காங்கிரஸ் கட்சி இருந்தார். காங்கிரஸ் கட்சியும் நீதி கட்சியும் எதிரும் புதிரும் ஆக இருந்த காலகட்டம், ஆனாலும் பெரியார் பனகல் அரசரின் அறநிலையத்துறை திட்டத்தை ஆதரித்து கடற்கரையில் கூட்டம் போட்டு பேசியது ஒரு வரலாற்றுக் குறிப்பு.

அரசு பதிவேடுகளில் பறையர், பஞ்சமர் என்றுதான் அன்றைக்கு குறிப்பிடப்பட்டு வந்தது, இதற்கு பதிலாக ஆதி திராவிடர் என்ற சொல்லைத்தான் பயன்படுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தவர் பனகல் அரசர். ஒரு மாணவன் மருத்துவம் படிக்க வேண்டும் என்று சொன்னால் அவருக்கு சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்ற ஒரு நிலை இருந்தது, பார்ப்பனர்கள் மட்டும்தான் மருத்துவத்தில் சேர முடியும் என்ற நிலையை மாற்றி சமஸ்கிருதம் ஒரு அடிப்படை தகுதி அல்ல என்பதை உறுதி செய்தவர் பனகல் அரசராவார்.

1924-ஆம் ஆண்டில் ஆந்திரப் பல்கலைக் கழகச் சட்டம் நிறைவேறியது. அதனடிப்படையில் ஆந்திராவில் பல்கலைக் கழகம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, தமிழ்ப் பகுதிகளுக்கும் ஒரு பல்கலைக் கழகம் தேவை என்று உணரப்பட்டது. இதைப் பற்றி ஆராய்வதற்கு இராமநாதபுரம் ராஜாவின் தலைமையில் ஒரு குழுவை அமைத்தார் பனகல் அரசர். பி.டி.இராசன் இக்குழுவின் செயலாளராகச் செயல்பட்டார்.இக்குழுவின் பரிந்துரைப்படி அண்ணாமலைப் பல்கலைக் கழகம் உருவாயிற்று. இப்பணி பனகல் அரசர் ஆட்சிக்காலத்தில் தொடங்கி, பி.சுப்பராயன் ஆட்சிக்காலத்தில் 1929-1930 கல்வியாண்டில் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் தோற்றம் பெற்றது.

யுனானி, ஆயுர்வேதம், சித்தா போன்ற மருத்துவ முறைகளுக்கு உயிர் கொடுத்தவரும் அவர்தான். கிராமங்களில் இலவச மருத்துவத்தை ஊக்கப்படுத்துவதற்காக ஊரக மருத்துவ திட்டத்தை அவர்தான் முதன்முதலில் கொண்டு வந்தார். சென்னையை விரிவுபடுத்த முடிவெடுத்த பனகல் அரசர் அவருக்கும், பிட்டி. தியாகராய செட்டியாருக்கும் மிகவும் பிடித்தமான பகுதியாக இருந்த நீர்ப்பிடிப்புப் பகுதியான பரந்த பூமியை தூர்த்து, மக்கள் போக்குவரத்து மிகுதியான ஒரு இடமாக ஆக்கிக் காட்டினார். அதுதான் இன்றைய தியாகராயர் நகர். முன்னர் செங்கல்பட்டு மாவட்டம், சைதாப்பேட்டை வட்டத்தில்தான் இந்த இடமே இருந்ததாம்.

சென்னை மாகாண மருத்துவத் துறை ஆங்கிலேயர் ஆளுமையின் கீழ் இருந்தது. இந்தியர்கள் எவரும் நுழைந்திட வாய்ப்பில்லை என்ற நிலையில் பனகல் அரசர் ஒரு சட்டத்தை இயற்றி ஆங்கிலேயர் ஆதிக்கத்தை அகற்றி, இந்தியர்களை மருத்துவத்துறையில் பங்குபெறச் செய்தார். இதற்கான மசோதாவைச் சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். அப்போது ஐரோப்பியர்களும் மற்ற எதிர்க்கட்சியினரும் எதிர்ப்புகளை வெளிப்படுத்தினர். “எதிர்ப்பு எங்கிருந்து வந்தாலும் அது இந்த நாட்டிற்கு நன்மை பயக்குமானால் எதிர்ப்பை வரவேற்கத் தயாராயுள் ளேன், தீமை விளைவிக்குமானால் அந்த எதிர்ப்பினை எதிர்த்து முறியடிப்பேன்”, என்று பனகல் அரசர் மசோதாவின் மீது பேசினார். மருத்துவத் துறைக்கான மறுமலர்ச்சி மசோதா சட்டமாகியது.

அவர் மறைவின்போது பெரியார் எழுதிய எழுத்துகள் மிகவும் குறிப்பிடத்தக்கதாகும், “ஒரு யுத்தம் முடிந்து வெற்றிக் குறியோடு நடந்து கொண்டிருக்கும் சமயத்தில் போர் வீரர்கள் சேனாதிபதியின் உத்தரவை எதிர்பார்த்து இருந்த போது சேனாதிபதி இறந்து விட்டார் என்று செய்தி கிடைக்குமானால், அந்த சமயத்தில் போர் வீரர்களின் மனம் எப்படி துடிக்குமோ, அதுபோல் நம் தமிழ் மக்கள் துடித்திருப்பார்கள்” என்று பனகல் அரசரின் மரணம் குறித்து பெரியார் ஒரு இரங்கல் செய்தியை எழுதினார்.

அப்பேர்பட்ட பனகல் அரசர் நினைவு நாளின்று

அகஸ்தீஸ்வரன்

Tags :
Advertisement