பாம்பன் பாலம்- உருவான வரலாறு!
வரலாற்றுப் பெருமையும்,பாரம்பரியமும் மிக்க பாம்பன் ரயில் பாலத்தின் நூற்றாண்டு விழாவை முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இன்று துவக்கி வைக்கிறார். நாட்டின் பெரும் நிலப்பரப்பையும், ராமேஸ்வரம் தீவையும் இணைக்கும் வகையில் மண்டபத்திற்கும், பாம்பனுக்கும் இடையில் பாம்பன் வாராவதியில் புதிய பாலம் கட்டப்படும் என கடந்த 1902ம் ஆண்டு ஆங்கிலேயே அரசு அறிவித்தது. கீழே கப்பலும், மேலே ரயிலும் செல்லும் வகையில் பாலம் கட்ட திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த கட்டுமான பணி 1913ம் ஆண்டு டிசம்பரில் முடிந்தது.
1914ம் ஆண்டு ஜனவரியில் பாம்பன் பாலத்தில் ரயிலை இயக்கி வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது. பிப். 24ம் தேதி பாம்பன் பாலத்தில் ரயில் போக்குவரத்து துவங்கி, முதல் பயணிகள் ரயிலும் இயக்கப்பட்டது. பின்னர் டிசம்பரில் சரக்கு ரயில் போக்குவரத்து துவக்கப்பட்டது. இந்த பாலத்தில் ரயில் போக்குவரத்து துவங்கி 2014 பிப். 24ம் தேதியுடன் நூறு ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி இந்திய ரயில்வே துறையால் நூற்றாண்டு விழா கொண்டாடப்படவுள்ளது. இதன் துவக்க விழா பாம்பனில் இன்று நடைபெற்றது. நிறைவு விழா பிப். 24ம் தேதி மண்டபத்தில் நடைபெற்றது.
பாக்ஜலசந்தி கடலையும், மன்னார் வளைகுடா கடலையும் இணைக்கிறது பாம்பன் கடல். இதன் நடுவில் ராமேஸ்வரம் தீவை இணைக்கும் வகையில் பாம்பன் பாலம் அமைந்துள்ளது. பாம்பனில் இயற்கையாக கால்வாய் அமைந்துள்ளது. இதன் வழியாக கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பு வரை ராமேஸ்வரம், பாம்பன் துறைமுகங்களில் இருந்து உள்நாட்டு துறைமுகங்கள் மற்றும் இலங்கைக்கு போக்குவரத்து நடந்தது. ஆங்கிலேயர்களால் 1854ல் 80 அடி அகலம், 14 அடி ஆழம், 4,400 அடி நீளத்திற்கு கால்வாய் வெட்டப்பட்டது. இந்த வழியாக 200 டன் எடையுள்ள கப்பல்கள், சிறிய ரக போர்க் கப்பல்கள் சென்று வந்தன.
கடந்த 1876ல் ஆங்கிலேயர்கள் இந்தியா இலங்கை இடையே போக்குவரத்திற்கான இணைப்பை ஏற்படுத்த முடிவு செய்தனர். பாம்பன் கடலிலும், தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையில் ஆடம்ஸ் பிரிட்ஜ் பகுதியில் பாலம் அமைத்து ரயில் போக்குவரத்தை ஏற்படுத்த திட்டமிட்டனர். இதற்காக ஜெனரல் மன்றோ என்பவரால் ஆய்வு நடத்தப்பட்டது. இத்திட்டம் ஆய்வு நிலையிலே கைவிடப்பட்டது. சென்னை டெபுடி ஜெனரல் ரைட்சன் என்பவரால் ''டுவின்ஸ் ரயில் பெர்க்கி சர்வீஸ்'' என்ற திட்டம் தயாரிக்கப்பட்டது.
அப்போது 229 லட்சம் செலவில் திட்டத்தை செயல்படுத்த இங்கிலாந்து அரசின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அதிகத்தொகை என்பதால் இத்திட்டமும் கைவிடப்பட்டது.
இறுதியாக கீழே கப்பலும், மேலே ரயிலும் செல்லும் வகையில் 1899 ல் ''டபுள் லீப் கேண்டிலிவர் பிரிட்ஜ்'' பாலம் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டது. இதற்காக 1902ல் ஆங்கிலேய அரசால் முறையான அறிவிப்பும் செய்யப்பட்டது. வர்த்தக போக்குவரத்திற்காகவே பாம்பன் கடலில் பாலம் கட்ட பிரிட்டிஷ் அரசு முடிவு செய்தது. இத்திட்டப்படி பாம்பன் கடலில் தூக்கு பாலம் மற்றும் தனுஷ்கோடி வரை ரயில் பாதை அமைக்க வேண்டும். அங்கிருந்து கப்பலில் செல்வதற்கு தனுஷ்கோடி மற்றும் தலைமன்னாரில் துறைமுகம் அமைக்க வேண்டும். இதற்காக ஸீ70 லட்சம் ஒதுக்கீடு செய்து பணிகளை துவங்கியது.
கடந்த 1902 முதல் பாலம் கட்டுவதற்கான அனைத்து பொருட்களும் இங்கிலாந்தில் இருந்து கப்பல்கள் மூலம் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டது. குஜராத்தை சேர்ந்த கட்ஜ்கரோலி குடும்பத்தினர் பாலம் கட்டும் பணியில் ஈடுபட்டனர். இவர்களால் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு தடைகளை கடந்து கடலுக்குள் 144 தூண்களுடன் பாம்பன் பாலம் 1913ல் கட்டி முடிக்கப்பட்டது.
தொடர்ந்து ஜெர்மனியைச் சேர்ந்த ''ஜெர்ஷர் லேடிங் கம்பெனி'' பொறியாளர் ஜெர்ஷர் என்பவரின் தலைமையில் 1913 ஜூலை மாதம் கப்பல் செல்லும் கால்வாயில் 124 அடி ஆழத்திற்கு இரண்டு தூண்கள் கட்டப்பட்டன. இதன் மேல் இரும்பினாலான இரண்டு லீப்கள் பொருத்தி தூக்கு பாலம் கட்டும் பணி டிசம்பரில் முடிக்கப்பட்டது. 1914 பிப்ரவரி 24ல் பாம்பன் பாலத்தில் ரயில் போக்குவரத்தும், தனுஷ்கோடி தலைமன்னார் கப்பல் போக்குவரத்தும் துவங்கப்பட்டது. அன்று முதல் சென்னையிலிருந்து ரயிலில் வரும் பயணிகள் நேராக தனுஷ்கோடி சென்று, அங்கிருந்து கப்பல் மூலம் இலங்கை சென்று வரத்துவங்கினர்.
சரக்கு போக்குவரத்தும் இவ்வழியாகவே நடந்தது. இதன் மூலம் தனுஷ்கோடி மிகப்பெரும் துறைமுக நகராக உருவெடுத்தது. கடந்த 1964 டிசம்பர் 23ம் தேதி தனுஷ்கோடி புயலில் பாம்பன் பாலம் பலத்த சேதமடைந்தது. இதில் கப்பல் செல்வதற்கு வழிவிடும் ஜெர்ஷர் பாலத்திற்கு மட்டும் எவ்வித சேதமும் ஏற்படவில்லை. புயலுக்குப்பின் தென்னக ரயில்வே பாலங்கள் பராமரிப்புத்துறை இன்ஜினியர் ஸ்ரீதரன் தலைமையில் பாலம் சீரமைக்கும் பணிகள் நடைபெற்றது. மீண்டும் 1965 மார்ச் 1 ல் ரயில் போக்குவரத்து துவக்கப்பட்டது.
2006ம் ஆண்டு ஜூலையில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு ரயில்வே முதன்மை இன்ஜினியர் ஏ.கே.சின்ஹா தலைமையில் அகல ரயில் செல்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 2007 ஆகஸ்டு 12ல் மீண்டும் ரயில் போக்குவரத்து துவங்கியது. நடுக்கடலில் கம்பீரமாக காட்சியளித்துக் கொண்டிருக்கும் பாம்பன் பாலம் 99 ஆண்டுகளை முழுதாக கடந்தும் தனது சேவையை கம்பீரமாக தொடர்கிறது.
பிப்ரவரி 24ம் தேதி நூறாவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் பாம்பன் பாலத்தை மத்திய அரசு இந்திய புராதான சின்னமாக அறிவிக்க திட்டமிட்டுள்ளது. மேலும் நூற்றாண்டு விழாவை கொண்டாடவும் ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்திய வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட உள்ள சம்பவங்களில் பாம்பன் பாலமும் இடம்பெறும் என்பது மட்டும் உறுதி.
* 1645 மதுரையை ஆண்ட மன்னர் திருமலை நாயக்கர், ராமநாதபுரத்தை ஆட்சி செய்து வந்த இரண்டாம் சடையக்கத்தேவர் மீது போர் தொடுத்தார். அப்போது ராமேஸ்வரம் தீவில் சேதுபதியும், அவரது தளபதிகளும் தஞ்சமடைந்தனர். அவர்களை சிறைபிடிக்க நாயக்கர் மன்னரின் தளபதி தளவாய் ராமப்பையன் முதன் முதலாக பாம்பன் கடலில் கற்பாறைகளால் பாலம் கட்டியதாக வரலாறு கூறுகிறது.
* கடலுக்குள் 146 தூண்களுக்கு மேல் அமைந்துள்ள பாலத்தை கட்டுவதற்கு 4 ஆயிரம் டன் சிமென்ட், 1 லட்சத்து 36 ஆயிரம் கனசதுர அடி களிமண், 18 ஆயிரம் கனசதுர அடி கற்கள், 1 லட்சத்து 3 ஆயிரம் கனசதுர அடி மணல், 80 ஆயிரம் கனசதுர அடி பெரிய பாறைகள், 2,200 டன் எஃகு ஆகியவை பயன்படுத்தப்பட்டுள்ளது.
* கப்பல் செல்லுவதற்கு பாம்பன் துறைமுக அலுவலர், மண்டபம், பாம்பன் ரயில் நிலைய அதிகாரிகள் இணைந்து இசைவு தெரிவித்தால் பாலம் திறக்கப்படும். 58 கி.மீ வேகத்திற்கு மேல் காற்றடித்தால் தானியங்கி சிக்னல் செயல்பட்டு பாலத்தில் ரயில் செல்வதற்கான அனுமதி கிடைக்காது.
* அகல ரயில் பாதையாக மாற்றும் பணிகளில் இந்திய ரயில்வே இன்ஜினியர்கள் 50 பேர் உட்பட 600க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டனர். கப்பல் செல்லும் ஜெர்ஷர் பாலத்திற்கு மட்டும் வலுகூட்டுவதற்காக புதிதாக 700 கிலோ எடை 10 மீட்டர் நீளமுள்ள 95 இரும்பு பிளேட்டுகள், 32 ஆயிரம் ரிவிட்டுகள் பயன்படுத்தப்பட்டது. அகல ரயில் செல்லும் பாலமாக மாற்றுவதற்கு மொத்த செலவு ஸி50 கோடி.
* 1964ல் பாம்பன் பாலங்கள் பராமரிப்பு செக்ஷன் இன்ஜினியராக பணியாற்றிய குமார சாமி புயல் அடித்தநாளில் தனுஷ்கோடிக்கு சென்ற ரயிலுக்கு பைலட்டாக சென்றார். அப்போது புயலில் சிக்கி ரயிலுடன் கடலுக்குள் அடித்து செல்லப்பட்டு பலியானார். தற்போது பாலங்கள் பராமரிப்பு பணியில் பொறியாளர்கள் உட்பட 20 பேர் பணியாற்றி வருகின்றனர். பால பராமரிப்பு செலவு ஆண்டிற்கு ஸி2 கோடி ஆகிறது.