For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

பாகிஸ்தானின் புதிய பிரதமர் வேட்பாளர்- ஷெபாஸ் ஷெரீப்!

04:49 PM Feb 14, 2024 IST | admin
பாகிஸ்தானின் புதிய பிரதமர் வேட்பாளர்  ஷெபாஸ் ஷெரீப்
Advertisement

பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் சிறையில் அடைக்கப்பட்டு, அவரது பாகிஸ்தான் தெஹ்ரீக்–இ–இன்சாப் கட்சி தேர்தலில் போட்டியிட பல தடைகள் விதிக்கப்பட்ட போதிலும், அக்கட்சியின் ஆதரவுடன் சுயேச்சையாக போட்டியிட்ட 101 வேட்பாளர்கள் தேர்தலில் வெற்றிப்பெற்றனர். 3 முறை பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சி 75 இடங்களில் வெற்றிப்பெற்று 2-வது இடத்தை பிடித்திருக்கிறது. அக்கட்சி பாகிஸ்தானின் சக்தி வாய்ந்த ராணுவத்தின் ஆதரவை கொண்டுள்ளது. பிலாவல் பூட்டோ சர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சி 54 இடங்களிலும் வெற்றி பெற்று 3-வது இடத்தில் உள்ளது. எஞ்சிய இடங்களை சிறிய கட்சிகள் கைப்பற்றியுள்ளன. ஆட்சி அமைப்பதற்கு 133 இடங்கள் தேவை என்கிற நிலையில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் கூட்டணி அரசை அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அரசியல் கட்சிகளிடையே ஒருமித்த கருத்து ஏற்படாததால் புதிய அரசை அமைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. பொதுத்தேர்தல் நடந்து முடிந்து 5 நாட்களுக்கு பிறகும், அங்கு எந்த கட்சி ஆட்சி அமைக்க போகிறது என்பது இன்னும் முடிவாகாமல் இருந்தது.

Advertisement

அரசியல் கட்சிகள் தேர்தல் நடந்த நாளில் இருந்து 3 வாரங்களுக்குள் ஆட்சி அமைக்க வேண்டும் என்று பாகிஸ்தானின் அரசியல் சாசனம் கூறுகிறது. எனவே நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சியும், பிலாவல் பூட்டோ சர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சியும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்தனர். மேலும் சில கட்சிகளை தங்களது கூட்டணியில் சேர்க்கவும் முடிவு செய்யப்பட்டது.எனினும் பிரதமர் பதவி யாருக்கு என்பதில் இருக்கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவியது. 4-வது முறையாக பிரதமராக வேண்டும் என்பதில் நவாஸ் ஷெரீப் உறுதியாக உள்ளதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் பிலாவல் பூட்டோ மற்றும் அவரது தந்தை சர்தாரி ஆகியோர் பிரதமர் பதவிக்கு போட்டியிடவில்லை.மந்திரி சபையிலும் இடம் பெற போவதில்லை. வெளியில் இருந்து நவாஸ் ஷெரீப் கட்சிக்கு ஆதரவு கொடுப்பதாக தெரிவித்தனர்.இதை தொடர்ந்து பாகிஸ்தானின் புதிய பிரதமர் வேட்பாளராக தனது சகோதரர் ஷெபாஸ் ஷெரீப்பையும், பஞ்சாப் மாகாண முதலமைச்சராக தனது மகளான மரியம் நவாசையும் நியமனம் செய்வதாக நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

Advertisement

இதை கூட்டணி கட்சிகள் ஏற்றுக்கொண்டால், பாகிஸ்தான் நாட்டின் அடுத்த பிரதமாக ஷெபாஸ் ஷெரீப் பதவி ஏற்பார். கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த கட்சிகளுக்கு பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சி நன்றி தெரிவித்துள்ளது. இதனிடையே பிலாவல் தனது தந்தை ஆசிப் அலி சர்தாரியை மீண்டும் ஜனாதிபதியாக பார்க்க விருப்பம் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த சூழலில் பாகிஸ்தானில் எந்த முக்கிய அரசியல் கட்சிகளுடனும் கூட்டணி ஆட்சி அமைக்கும் யோசனையை இம்ரான்கான் நிராகரித்தார். மேலும் சிறிய கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கும் இம்ரான்கானின் கட்சி, பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால் எதிர்க்கட்சியாக இருப்போம் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதனிடையே தேர்தலில் தோல்வியடைந்த சுயேச்சை வேட்பாளர்கள் வாக்கு மோசடி குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோர்ட்டை நாடியுள்ளனர். அதன்படி இம்ரான்கானின் கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வியுற்ற சுயேச்சை வேட்பாளர்கள் பலர் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது மகள் மரியம் நவாஸ் உள்பட பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சி தலைவர்களின் வெற்றியை செல்லாது என அறிவிக்கக்கோரி பல கோர்ட்டுகளிலும் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

அப்படி சுயேச்சை வேட்பாளர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட 30-க்கும் மேற்பட்ட மனுக்களை லாகூர் கோர்ட் நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Tags :
Advertisement