பகலறியான் - விமர்சனம்!
புதுமுக டைரக்டர் முருகனின் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் பகலறியான். ஆக்டர் வெற்றி நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அக்ஷயா கந்தமுதன் , சாப்ளின் பாலு, முருகன், வினு பிரியா ஆகியோர் நடித்துள்ளனர். ரிஷிகேஷ் என்டர்டைன்மென்ட் பேனரில் லதா முருகன் இந்த படத்தை தயாரித்துள்ளார். மேலும் இப்படத்தை விவேக் சரோ இசையமைக்க அபிலாஷ் ஒளிப்பதிவு செய்ய,குரு பிரதீப் எடிட்டிங் செய்துள்ளார். குறைந்த பட்ஜெட்டில், ஒரு சுவாரஸ்யமான சஸ்பென்ஸ் திரில்லர் ஜானர் படத்தை கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் எக்கச்சக்க வன்முன்றையுடன் பட தொடங்கியதில் இருக்கும் யாருக்கும் எதுவும் புரிந்து விடக்கூடாது என நினைத்து வழங்கி இருப்பதே பகலறியான் படம்
கதை என்னவென்றால் ஏற்கனவே ஜெயிலுக்கு சென்ற குற்றவாளி வெற்றி காதலியை ஒர் இரவில் கடத்திக்கொண்டு திருமணம் செய்ய போகிறார் . இன்னொரு புறம் தன் தங்கையை காணவில்லை என சென்னையில் பிரபல ரௌடி தேட ஆரம்பிக்கிறான். வெற்றியையும், ரௌடியையும் கொலை செய்யும் நோக்கத்தில் சில குழுக்கள் அலைகின்றனர், இந்த மூன்று சம்பவங்களுக்குமான தொடர்பு என்ன? இறுதியில் நடக்கிறது என்பது தான் பகலறியான்.
செலக்டிவ் ஸ்டோரி நாயகன் என்ற பெயரெடுத்த வெற்றி இந்த பகலறியான் உள்பட எல்லாப் படத்திலும் ஒரே மாதிரி உம்மென்ற முகத்துடன் வருவது சலிப்பை ஏற்படுத்துகிறது. அவர் நடிப்பு என்பதையும் யாரிடமாவது கற்று முன்னேற வழி காண வேண்டும் அதற்கு முன்னதாக இதுபோன்ற உம்மானாமுஞ்சி ரோல்களில் நடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
சைலண்ட் என்ற கதாபாத்திரத்தில் படம் முழுவதும் வசனம் பேசாமல் நடித்திருக்கும் மற்றொரு நாயகன் முருகன், நாயகன் வெற்றிக்கு சேலஞ்ச் விடும் அளவுக்கு இறுக்கமான முகத்துடன் நடித்திருக்கிறார். முதல் படம் என்ற அடையாளம் தெரியாதவாறு கதாபாத்திரத்திற்கு ஏற்ப நடித்திருப்பவர், கிளைமாக்ஸ் காட்சியில் தங்கை செண்டிமெண்ட் சீன் மூலம் ஆக்டிங்கில் பாஸ் மார்க் வாங்கிவிடும் சான்ஸையும் தவற விட்டுவிடுகிறார். ஹீரோயில் ரோலில் வரும் அக்ஷயா கந்தமுதன், கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார் மற்றொரு நாயகியாக நடித்திருக்கும் வினு பிரியா திரைக்கதையின் திருப்பமாக பயணப்பட்டிருக்கிறார்.
காமெடி வேடங்களில் நடித்து வந்த சாப்ளின் பாலு கொஞ்சம் முன்னிலையான வேடத்தில் அமர்க்களப்படுத்த முயன்று இருக்கிறார். ஆனால், அவர் உடம்பு தான் அதிகமாக அதிர்கிறது. போலீஸாக நடித்திருக்கும் தீனாவின் ரோல் கதைக்கு தொடர்பில்லாமல் பயணித்தாலும், காட்சிகளின் இறுக்கத்தில் இருந்து ரசிகர்களை டேக் டைவர்ஷன் செய்ய உதவியிருக்கிறது. கேமராமேன் அபிலாஷ் பி.எம்.ஒய்=யின் நைட் எஃபெக்ட் ஒளியுணர்வாலும், ட்ரோன் ஷாட்களாலும் காட்சிப்படுத்தியிருக்கும் சீன்களே படத்தை ஒப்பேற்றி இருக்கிறது. குரு பிரதீப் எடிட்டிங் சொதப்பல் என்றே சொல்ல வேண்டும்.. விவேக் சரோவின் பின்னணி இசை பரவாயில்லை என்று சொல்ல வைக்கிறது., ஆனால் அதற்கான வலுவான காட்சிகள் இல்லாததால் வீணடிக்கப்பட்டுள்ளது. பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லை.
முன்னரே சொன்னது படம் தொடங்கியதுமே தலை முடியை கட்டிங் பிளையர் வைத்துப் பிடுங்குவது, பல்லைப் பிடுங்குவது என முகம் சுளிக்கும் வகையிலான குரூரக் காட்சிகளும், தெளிவில்லாத மற்றும் கோர்வையில்லாத திரைக்கதையும் பகலறியானை வெள்ளித்திரையில் காணச் சொல்ல முடியாமல் செய்து விடுகிறது.
மார்க் 2.25/5