தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

"உறங்காப் புலி" மூக்கையாத் தேவர் நினைவு நாள்!

06:48 AM Sep 06, 2024 IST | admin
Advertisement

ரசியலிலும், பொதுச் சேவை புரிவதிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவரும், நாடாளுமன்ற உறுப்பினராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் மக்களுக்கு அருந்தொண்டு ஆற்றியவரும், கல்விப் பணிகளில் அதிக நாட்டம் கொண்ட, போற்றுதலுக்குரியவர் பி.கே. மூக்கையாத் தேவர்.‘நியாயத்திற்கு ஒரு மூக்கையா; நியாயத்தைத் தவிர வேறு எதற்கும் தலைவணங்க மாட்டார்’ என்று அறிஞர் அண்ணாவால் போற்றப்பட்டவரிவர். விரிவாகச் சொல்வதானால் தேவர் இன மக்கள் அதிகம் இருப்பது தென் தமிழகத்தில்தான். இதில் மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டிக்கு அருகிலுள்ள பாப்பாப்பட்டி எனும் கிராமத்தில் 1923 ஏப்ரல் 4-ல் கட்டமுத்து ஒச்ச தேவருக்கும், சேவனம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தவர் மூக்கையா தேவர். இவர்களுக்கு இதற்கு முன்னால் பிறந்த குழந்தைகள் அனைவரும் இறந்து விட்டதால் இந்தக் குழந்தையும் இறந்து விடுமோ என்ற அச்சம் இந்த தம்பதியினருக்கு இருந்தது. எனவே இக் குழந்தையைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அந்தப் பகுதியில் தொன்று தொட்டு நிலவி வந்த பழக்கத்தின் அடிப்படையில் ஊராரிடம் பிச்சையாகப் பணம் பெற்று மூக்குத்தி வாங்கி, விழா நடத்தி பிறந்த குழந்தைக்கு மூக்கு குத்தி மூக்கையா எனப் பெயரிட்டனர். இந்தக் குழந்தை மூக்கையா தான் பின்னாளில் தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத தலைவராக உருவெடுத்த அய்யா பி.கே. மூக்கையாத்தேவர் ஆவார்.

Advertisement

மாணவப் பருவத்திலேயே பொதுக் காரியங்களில் ஈடுபட்டு நியாயத்துக்காகப் போராடியவர் மூக்கையா தேவர். முக்குலத்தோர் எனப்படும் இப்பிரிவினரில் கள்ளர் இனத்தின் மேம்பாட்டுக்காக ஒரு அமைப்பினை ஏற்படுத்தி பிறமலைக் கள்ளர் இனம் மேம்படுவதற்காக பல முயற்சிகளை மேற்கொண்டார். தேவர் இனத்தில் பிறமலைக் கள்ளர் இனம் பெரும்பான்மையானது. வீர பரம்பரையினரான இப்பிரிவினரை பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் குற்றப் பிரிவினராக அறிவித்து இழிவு படுத்தியிருந்தனர். சுதந்திரத்துக்குப் பிறகு இவர்களுடைய பாரம்பரிய பெருமைகளை வெளிக் கொணர்ந்து இவர்களுக்கு உரிய இடத்தைப் பெற தேசபக்தர்கள் பல முயற்சிகளை மேற்கொண்டனர். அந்த வகையில் மூக்கையா தேவரின் முயற்சியும் இந்த இன மக்களின் உயர்வுக்கு வழிவகுத்தது.

Advertisement

1949ம் ஆண்டு இராணி அம்மாள் என்ற மறவர்குல மங்கையை மணந்தார். இந்தத் திருமணம் பெற்றோருக்குப் பிடிக்கவில்லை. தனது மனைவி ஆசிரியையாகப் பணிபுரிந்த தெக்கூர் கிராமத்தில் வசிக்கலானார். தனது நண்பர் வி.கே.சி. நடராஜனை சந்தித்து தனது குடும்பச் சிக்கல்கள் குறித்து ஆலோசித்தார். தனது நண்பருடன் மதுரை வந்த பொழுது பார்வர்ட் பிளாக்கின் தலைவர்களான இரகுபதித் தேவரும், காமணத் தேவரும் மூக்கையாத்தேவரை பசும்பொன் தேவர் அவர்களிடம் அறிமுகம் செய்து வைத்தனர். அவரைப் பார்த்தவுடன் இவர்தான் பெரியகுளம் சட்டமன்றத் தொகுதிக்கு பொருத்தமான வேட்பாளர் என்று தேவர் முடிவு செய்துவிட்டார். அவ்வாறு அரசியல் களத்திற்கு வந்தவர் தான் அய்யா மூக்கையாத்தேவர்.

அதையடுத்து இளம் வயதில் இவர் பார்வார்டு பிளாக் கட்சியில் உறுப்பினரானார். காங்கிரஸ் கட்சியைப் போலவே இந்திய தேசியத்தை உயர்த்திப் பிடிக்கவும், ஆன்மிகமும், அரசியலும் கடவுளுக்கு நிகர் எனும் கோட்பாட்டை வலியுறுத்தவும் இந்தக் கட்சி நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தலைமையிலும், தமிழகத்தில் உ.முத்துராமலிங்கத் தேவர் தலைமையிலும் வளர்ந்து வந்தது. 1952-ல் நடந்த சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத் தேர்தலில் இவர் பெரியகுளம் தொகுதியிலிருந்து சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1957-ல் இவர் உசிலம்பட்டி தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டு, தொடர்ந்து அடுத்தடுத்த தேர்தல்களிலும் 1962, 1967, 1971, 1977 ஆகிய தேர்தல்களிலும் நின்று வெற்றி பெற்றார். தேர்தலில் தோல்வியே காணாதவர். இவருடைய கட்சியின் பெருந்தலைவர் உ.முத்துராமலிங்கத் தேவர் ஒரே நேரத்தில் நாடாளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட சாதனையை மூக்கையா தேவரும் சாதித்தார். இராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதில் இவர் 1971-ல் வெற்றி பெற்றார்.

முத்துராமலிங்கத் தேவரை கைது செய்து அவருக்கு கலங்கத்தை உண்டு பண்ணிய தமிழக காங்கிரஸ் ஆட்சி மேல் மிகுந்த வெறுப்பில் இருந்தார். ஒரு கட்டத்தில் காங்கிரஸை தோற்கடிக்க அண்ணாவுடன் கூட்டு சேர்ந்தார். அந்த காலகட்டத்தில் தென் தமிழகத்தில் செல்வாக்கு படைத்த மூக்கையாத்தேவரின் ஆதரவு திமுகவுக்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது. 1967-ல் அண்ணா தலைமையிலான திமுக வெற்றியும் பெற்றது. தேர்தல் முடிந்து சட்டசபை கூடி சபாநாயகரைத் தேர்ந்தெடுக்கும் முன்பு உறுப்பினர்கள் பதவி ஏற்புக்காக இடைக்கால சபாநாயகர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். அவர் சபையின் மூத்த உறுப்பினராக இருத்தல் வேண்டும். அப்படிப்பட்ட பெருமை மூக்கையா தேவருக்கும் கிடைத்தது. அந்த மூக்கையாத் தேவர் தான் அண்ணாவுக்கு பதவிப் பிரமாணமும் செய்து வைத்தார்.

ஒரு கட்டத்தில் எம்ஜிஆரின் அதிமுக கட்சி சார்பில் தேர்தலில் இவரை எதிர்த்து வேட்புமனு செய்ய. மூக்கையாத்தேவர் அ.இ.பா.பி கட்சி சார்பில் அங்கே போட்டியிடுகிறார் என அறிந்த எம்ஜிஆர், "நீண்ட காலம் பொது வாழ்வில் இருக்கும் ஐயா மூக்கையாத் தேவர் அண்ணாவிற்கே பதவிப் பிரமாணம் செய்து வைத்தவர். அப்பேற்பட்ட பெருந்தலைவரை எதிர்த்து என் கட்சி போட்டியிட விரும்பவில்லை" என்று தனது கட்சியின் வேட்பாளரை வாபஸ் பெறச் செய்தார்.

1963இல் இவர் அகில இந்திய பார்வார்டு பிளாக் கட்சியின் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1971இல் இவர் அகில இந்திய பார்வார்டு பிளாக் கட்சியின் தலைவரானார். ஒரு அகில இந்தியக் கட்சியின் தலைமையை இவர் பெற்றது இவருக்கு மட்டுமல்ல, தென் தமிழ் நாட்டின் மக்கள் அனைவருக்குமே பெருமை சேர்த்த நிகழ்ச்சியாகும். 1971இல் இவர் நாடாளுமன்றத்தில் கச்சத்தீவு பற்றிய விவரங்களை எடுத்துக் கூறி பேசிய பேச்சு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும். கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்ப்பதை எதிர்த்து இவர் கொடுத்த குரல் என்றென்றும் மறக்க முடியாத ஒன்று. அவரது வலுவான வாதங்களையும் மீறி அந்தக் கச்சத்தீவு இலங்கைக்குக் கொடுக்கப்பட்டதன் விளைவாக இன்று வரை தமிழக மீனவர்கள் படும் இன்னல்களை நாடு அறியும்.

கல்விப் பணியிலும் இவர் அதிகம் நாட்டம் செலுத்தினார். உசிலம்பட்டி, நீலித்தினல்லூர், கமுதி-கோட்டைமேடு ஆகிய இடங்களில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரிகளை நிறுவினார். இங்கெல்லாம் ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி மட்டுமல்லாமல், தங்க இடம், உணவு ஆகியவற்றுக்கும் ஏற்பாடு செய்தார். இந்த சலுகை எல்லா இன, ஜாதி மக்களுக்கும் அளிக்கப்பட்டது என்பதுதான் குறிப்பிடத்தக்கது.

மதுரையில் கோரிப்பாளையத்தில் வைகைக் கரையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு ஒரு சிலை அமைக்க இவர் ஏற்பாடுகளைச் செய்து இன்றும் மிகவும் கம்பீரமாக அங்கு நாம் பார்க்கும் சிலையை நிறுவினார். இவர் "உறங்காப் புலி", அதாவது தூங்காத புலி எனப் பெருமைப்படுத்தி அழைக்கப்பட்டார். தலைவர்கள் போற்றும் பெரும் தலைவர் மூக்கையாத்தேவர் இறுதிக்காலம் வரை மதுரையில் வாடகை வீட்டில் தான் வசித்தார். இறக்கும் போது 60000 கடன் சுமையோடு தான் இறந்தார். (கடன் வாங்கியாவது மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று வாங்கிய பணம் தான்). வீரம் மிகுந்த மண்ணின் மைந்தரான மூக்கையாத் தேவர் 1979 இதே செப்டம்பர் 6-ல் காலமானார். யார் யாரையோ போற்றும் இவ்வுலகம் இவரை மறந்தது, இவரது புகழை மறைத்தது ஏனோ தெரியவில்லை.

நிலவளம் ரெங்கராஜன்

Tags :
Forward BlocP. K. Mookiah Thevarpoliticianstudent leaderகள்ளர்மூக்கையா தேவர்.
Advertisement
Next Article