நம்ம விஞ்ஞானி ஜெகதீஷ் சந்திர போஸ்!
ஒரு சராசரி இந்தியக் குடும்பத்தில் பிறந்த 'ஜெகதீஸ் சந்திர போஸ்' விஞ்ஞானி .போஸ் ஆக உதவியது பெரும்பாலும் பிரிட்டிஷார்கள். படிப்பில் இவருக்குள்ள அக்கறையைப் பார்த்து வியந்து அவரை இங்கிலாந்து அனுப்பி அங்கு நாலைந்து பட்ட படிப்புகளை படிக்க உதவி செய்தார்கள்அப்படி அங்குப் படித்துக் கொண்டிருக்கும் போதே கண்டுப் பிடித்த அரிய டெக்னாலஜிதான் இன்றைய இந்திய ஊழலுக்கு அச்சாரமாகும்! என்ன புரிய வில்லையா?
உலகம் முழுவதுமுள்ள விஞ்ஞானிகள் பலர் மனித இனத்திற்கு நன்மை பயக்கக் கூடிய வகையில் கண்டு பிடித்த வானொலி,தொலைக்காட்சி, தொலைக் காட்சிக்குத் தேவையான அலைவாங்கி(Antenna), தொலைபேசி, கம்பியில்லாமல் தந்தி அனுப்பும் முறை, விமான நிலையக் கட்டுப்பாடு அறையில் செயற் படுத்தப்படும் 'ராடார்' தொழில் நுட்பங்கள் போன்ற அனைத்திற்கும் தேவையான அடிப்படை மின்னோட்ட, 'மின்னியல்'கண்டுபிடிப்புகளை நம்ம .போஸ் தான் கண்டு பிடித்தார்.ஆனால் அந்தோ பரிதாபம், இவர் தனது கண்டு பிடிப்புகளை 'ஏனைய விஞ்ஞானிகள்' போல் இரகசியமாக வைத்துக் கொள்ளாமல், இங்கிலாந்திலும், பிரிட்டிஷ் இந்தியாவிலும் தன்னோடு உடன் படித்த மாணவர்கள், மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பகிரங்கமாக வெளியிட்டார்.இவரது கண்டுபிடிப்புகளை அடிப்படையாக வைத்தே விஞ்ஞானி 'மார்க்கோனி' வானொலிப் பெட்டியையும்', கிரஹாம் பெல் தொலைபேசியையும் கண்டுபிடிக்க முடிந்தது.
சாதாரணமாக நமது வீடுகளில் ஒலிக்கும் 'அழைப்பு மணி'கூட(Calling bell) யாரால் கண்டு பிடிக்கப் பட்டது? என்று வரலாற்றின் பக்கங்களில் தேடினால் 'ஜோசப் ஹென்றி' என்ற பெயரே நமக்கு விடையாகக் கிடைக்கும் அவர்தான் இதைக் கண்டு பிடித்தார் என்பது உண்மையே, ஆனால் மிகவும் கடினமான செயற் பாடுகளின் மூலம் இயக்கக் கூடிய அந்தத் தொழில் நுட்பத்தை இலகுபடுத்திய/நவீனப் படுத்திய பெருமை போஸ்ஸையே சாரும்.இந்த போஸ் கண்டு பிடித்த டெக்னாலஜிபடிதான் இப்போது அலைபேசி கூட சாத்தியமாகி இருக்கிறது. அதாவது இந்த 2ஜி - 3 ஜி- 4ஜி க்கெல்லாம் வித்திட்டவர் போஸ்தானாம்!
இதற்கிடையில் போஸ் தனது கண்டு பிடிப்புகள் எவற்றிற்குமே காப்புரிமை வாங்காமல் இருந்துவிட்டார். இது வரலாற்றில் அவர் விட்ட மாபெரும் தவறு என்று பல அறிவியல் நிபுணர்களாலும் இன்றும் கருதப் படுகிறது.இத்தகைய விமர்சனங்களுக்கு .போஸ் பதில்தான் என்ன? "நான் எனது கண்டுபிடிப்புகளை மனித இனத்திற்கு நன்மை பயப்பதற்காகவே கண்டுபிடித்தேன், இதன்மூலம் 'கோடி ரூபாய்கள்' கிடைக்கும் என எதிர்பார்த்து நான் ஆராய்ச்சிகளில் இறங்கியதில்லை.இந்த மனித இனத்திற்கு எனது கண்டுபிடிப்புகளால் நன்மை கிடைக்குமானால் அதுவே நான் இம்மண்ணில் பிறப்பெடுத்தமைக்கான பயனாகும்" எனக் கூறினாராம். ஹும். இப்படியும் சில மனிதர்!
சந்திர போஸ் ஒரு சிறந்த அறிவியல் மேதை மட்டுமல்ல; கலை, இலக்கியங்களைப் பெரிதும் நேசித்தவர். நோபல் பரிசு பெற்ற இந்திய இலக்கியச் சிற்பி இரவீந்திரநாத் தாகூருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார்.சர் ஜகதீஷ் சந்திர போஸ் (Jagadish Chandra Bose) (1858-1937) தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்ற உண்மையை உலகுக்கு வெளிப்படுத்திய இந்திய அறிவியலாளர்.
இதே போஸ் வானொலி அறிவியலின் முன்னோடிகளில் ஒருவர் என IEEE அதிகாரப்பூர்வமாக நூறு வருடங்கள் கழித்து அறிவித்தது
போஸ் மிகச் சிறந்த இரு நூல்களை இயற்றி உலகப்புகழ் பெற்றார். உயிரினங்களின் மற்றும் உயிரற்றவைகளின் துலங்கல் தன்மை (Response in the Living and Non-Living) என்பது ஒரு நூல்; தாவரங்களின் நரம்புச் செயலமைவு (The Nervous Mechanism of Plants) என்பது மற்றொரு நூல். இவ்விரு நூல்களின் வாயிலாக வெப்பம், குளிர், ஒலி, ஒளி ஆகிய புறத்தூண்டுதல்கள் மனிதர்களையும், பிற விலங்கினங்களையும் எவ்வாறு பாதிக்கின்றனவோ அவ்வாறே தாவரங்களையும் பாதிக்கின்றன என்பதை நிரூபித்தார்.
மேலும் பரிசோதனை ஒன்றையும் போஸ் செய்து காட்டினார். புரோமைட் (Bromide) என்ற நச்சுத் தனிமத்தை எலி ஒன்றுக்கு ஊசி மூலம் செலுத்தப்பட்டது; தாவரம் ஒன்றுக்கும் ஊசி மூலம் செலுத்தப்பட்டது; எலி, தாவரம் ஆகிய இரண்டும் சாவின் விளிம்பில் போராடியதைக் கண்டு அறிவியல் உலகம் போஸ் அவர்களின் ஆராய்ச்சியை ஆரவாரத்துடன் கைதட்டிப் பாராட்டியது.
தாவரங்களும் நம்மைப் போன்றே உணவு உண்டு செறிக்கின்றன; அவைகளும் மனிதர்களைப்போல் இரவில் உறங்கி, காலையில் விழிக்கின்றன; அவையும் பிறக்கின்றன, இறக்கின்றன; அவைகட்கும் நம்மைப் போன்றே மகிழ்ச்சி, துன்பம் ஆகிய உணர்ச்சிகள் உண்டு என்ற உண்மைகளைக் கண்டறிந்தார்.
இத்தகு சிறப்பு வாய்ந்த போஸ் அவர்கள் 1937ஆம் ஆண்டு இதே நவம்பர் 23ஆம் நாள் இயற்கையுடன் இணைந்தார்.
மனவுறுதி, துணிச்சல், நாட்டுப்பற்று, தன்னம்பிக்கை, பொறுமை ஆகியவைகட்கு உறைவிடமாய் விளங்கிய ஜகதீஷ் சந்திர போஸ் தாம் மேற்கொண்ட அனைத்து அறிவியல் ஆராய்ச்சிகளிலும் பெரு வெற்றியும், பெரும் புகழும் ஈட்டியதன் வாயிலாக இந்தியாவின் புகழை உலகில் மிளிரச் செய்தார் எனில் அதில் மிகையேதுமில்லை.
நிலவளம் ரெங்கராஜன்