யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் குழுவின் தலைமை பொறுப்பேற்கிறது நம்ம இந்தியா!
உலகின் கலாச்சார மற்றும் இயற்கை பாரம்பரியத்தின் பாதுகாப்பை ஊக்குவிக்கும் ஒரு சர்வதேச அமைப்பே யுனெஸ்கோ ஆகும். இது சரவ்தேசமெங்கும் உள்ள இயற்கை அதிசயங்கள் மற்றும் கட்டிடக்கலை அதிசயங்களை அவற்றின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக உலக பாரம்பரிய தளங்களாக குறிப்பிடுகிறது. இந்த தளங்கள் ஒவ்வொன்றும் உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை உறுதிசெய்த பிறகு கவனமாக தேர்ந்தெடுக்கப்படுகின்றன.இப்படி தேர்ந்தெடுக்கும் குழுவின் வின் 46 வது அமர்வுக்கு இந்தியா தலைமை தாங்கி தொகுத்து வழங்கும் என யுனெஸ்கோவுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி விஷால் வி ஷர்மா தெரிவித்தார். இந்த அமர்வை இந்தியா நடத்துவதும், தலைமை தாங்குவதும் இதுவே முதல் முறை ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியப் பட்டியலில் இடம்பெறுவது எளிதான விஷயம் கிடையாது. ஒவ்வோர் ஆண்டும் யுனெஸ்கோ உலகப் பாரம்பரியக் கமிட்டியானது ஒரு முறையாவது கூடுவது வழக்கம். அப்படிக் கூடும்போது பட்டியலில் புதிய இடங்களைப் பாரம்பரியச் சின்னமாக அறிவிப்பது, நீக்குவது, அல்லது மாற்றம் செய்வது ஆகியவற்றை மேற்கொள்ளும். ? யுனெஸ்கோவால் பட்டியலில் சேர்க்கப்படும் இடம் ‘உலகின் சிறந்த மதிப்பீடு’ என்ற பொருளில் குறிப்பிடப்படுகிறது. உலகப் பாரம்பரிய அமைப்பின் வழிகாட்டுதல்படி, உலகின் சிறந்த மதிப்பீடு என்பது கலாச்சாரம் / இயற்கைப் பின்னணி கொண்ட இடங்களைக் குறிக்கிறது. இதில் 3 பிரிவுகளை யுனெஸ்கோ வைத்துள்ளது. அதன் அடிப்படையில்தான் உலகப் பாரம்பரிய இடங்கள் / சின்னங்களை அறிவிக்கிறது. கலாச்சாரப் பாரம்பரியம், இயற்கைப் பாரம்பரியம், கலாச்சாரமும் இயற்கையும் கலந்த பாரம்பரியம் என 3 பிரிவுகளில் யுனெஸ்கோ இடங்களைத் தேர்வு செய்கிறது.
இதில் கலாச்சாரப் பாரம்பரியப் பிரிவில் வரலாறு, கலை, அறிவியல், நினைவுச் சின்னங்கள், கட்டிடங்கள், இயற்கையாகவும் மனிதர்களாலும் அமைக்கப்பட்ட வேலைப்பாடுகள் ஆகியவை வருகின்றன. இதற்கு உதாரணமாக தாஜ்மஹால், அமெரிக்காவின் சுதந்திரா தேவி சிலை போன்றவற்றைக் குறிப்பிடலாம். இயற்கைப் பாரம்பரியப் பிரிவில் அறிவியல், பாதுகாக்கப்பட்ட பகுதி அல்லது அழகிய இயற்கைப் பகுதிகள் வருகின்றன. இதற்கு உதாரணமாக விக்டோரியா நீர்வீழ்ச்சி, மேற்கு வங்கத்தில் உள்ள சுந்தரவனம் உயிர்கோளக் காப்பகம் ஆகிய இடங்களைக் குறிப்பிடலாம். தற்போது ஜெய்ப்பூர் நகரம் கலாச்சாரப் பிரிவில் தேர்வுசெய்யப்பட்டிருக்கிறது.
தேர்வு முறை
யுனெஸ்கோவால் உலகில் அறிவிக்கப்பட்ட 1,121 உலகப் பாரம்பரிய இடங்களில் 869 இடங்கள் கலாச்சாரப் பிரிவில் இடம்பெற்றுள்ளன. 213 இயற்கை சார்ந்த இடங்கள், 39 இடங்கள் கலப்பு இடங்களாகவும் இடம்பெற்றுள்ளன. ஒரு குறிப்பிட்ட இடத்தை யுனெஸ்கோ பாரம்பரியச் சின்னமாக எப்படி அறிவிக்கிறது? யுனெஸ்கோவின் பாரம்பரியப் பட்டியலில் இடம்பிடிக்க ஒவ்வொரு நாடும் உத்தேசப் பட்டியலைத் தயார் செய்து அதற்கான ஆவணங்களை யுனெஸ்கோ கமிட்டிக்கு அனுப்புவார்கள். இந்த ஆவணங்களை கமிட்டி ஆய்வுசெய்யும்.
இப்படி ஆய்வு செய்யும் யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் குழு ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும். மேலும், உலக பாரம்பரிய மாநாட்டை செயல்படுத்துவது இந்த குழுவின் பொறுப்பாகும். இந்த மாநாடு உலக பாரம்பரிய நிதியின் பயன்பாட்டை வரையறுத்து மாநிலக் கட்சிகளுக்கு அவர்களின் கோரிக்கையின் பேரில் நிதி உதவியை வழங்கிட வழிவகுக்கும். அபாயகரமான நிலையில் அல்லது அழிவின் விளிம்பில் உள்ள உலகப் பாரம்பரியச் சின்னங்களின் பட்டியலில் இருந்து சொத்துகளைச் சேர்ப்பது அல்லது நீக்குவது தொடர்பான முடிவெடுப்பது குறித்தும், உலகப் பாரம்பரியப் பட்டியலில் புதிய சின்னம் சேர்க்கப்படுமா என்பது குறித்தும் இறுதிக் கருத்தை இந்த ஆணையம் வெளியிடும்.
தலைமை தாங்கும் இந்தியா
உலக பாரம்பரியக் கமிட்டியானது 21 மாநிலக் கட்சிகளைக் கொண்டுள்ளது. ஆறு வருடத்திற்கு ஒரு முறை பொது தேர்தல் மூலம் இவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இருப்பினும், பெரும்பாலான மாநிலக் கட்சிகள் தானாக முன்வந்து நான்கு ஆண்டுகளுக்கு மட்டுமே குழுவின் உறுப்பினர்களாக இருக்க விரும்புவார்கள். மற்ற மாநிலக் கட்சிகள் குழுவில் இருக்க வாய்ப்பளிக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. தற்போதைய உலக பாரம்பரியக் குழுவின் 21 மாநிலக் கட்சிகள் உள்ளன. அதன்படி, அர்ஜென்டினா, பெல்ஜியம், பல்கேரியா, கிரீஸ், இந்தியா, இத்தாலி, ஜமைக்கா, ஜப்பான், கஜகஸ்தான், கென்யா, லெபனான், மெக்ஸிகோ, கத்தார், தென் கொரியா, ருவாண்டா, செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ், செனகல் , துருக்கி, உக்ரைன், வியட்நாம் மற்றும் ஜாம்பியா இருக்கின்றன. யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் குழு ஆண்டுதோறும் 7 மாநிலக் கட்சிப் பணியகத்தைத் தேர்ந்தெடுக்கிறது. இது குழுவின் பணியை ஒருங்கிணைக்க, கூட்டம் நடைபெறும் தேதி, நேரம் ஆகியவற்றை நிர்ணயிக்க உதவுகிறது.
யுனெஸ்கோவின் இந்த அமைப்புக்கு ஒரு தலைவர், ஐந்து துணைத் தலைவர்கள் மற்றும் ஒரு அறிக்கையாளர் ஆகியோர் உள்ளனர். இந்த ஆண்டு நடைபெறும் 46 வது அமர்விற்கு, பணியகத்தின் தலைவராக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. பெல்ஜியம் அறிக்கையாளராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பல்கேரியா, கிரீஸ், கென்யா, கத்தார், செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ் ஆகிய 5 மாநிலக் கட்சிகள் துணைத் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
வாத்தி அகஸ்தீஸ்வரன்