திருப்பதி கோயிலில் அன்னபிரசாதம் விநியோக வாய்ப்பு: தேவஸ்தானம் அறிவிப்பு!
திருமலை திருப்பதி என்பது அன்றாடம் பக்தர்களின் கூட்டத்தால் நிரம்பி வழியும் இடம். அந்த ஏழுமலையில் வீற்றிருக்கும் வேங்கடவனின் அருள் பெற்றால் தீராத வினைகள் எல்லாம் தீர்ந்து இன்பம் பொங்கும் என்பது நம்பிக்கை. இதனால் நாளுக்கு நாள் கூட்டம் பெருகிக் கொண்டே செல்கிறது. திருப்பதி என்றால் வேங்கடவன், வராகஸ்வாமி, அழகிய மலைப் பயணம், லட்டு என்று ஞாபகம் வருவதைப்போல அங்கு போடப்படும் அன்னதானமும் அனைவருக்கும் நினைவு வரும். 2023-ம் ஆண்டின் கணக்கின்படி திருப்பதியில் நாளொன்றுக்கு சராசரியாக 70 ஆயிரம் முதல் ஒரு லட்சம் பக்தர்கள் அன்னதானம் உண்டு வருகின்றனர் என்கிறது தேவஸ்தானம். தரிசனத்துக்குக் காத்திருக்கும் இடத்திலும் சிற்றுண்டி, சித்ரான்னங்கள், பால், காபி போன்றவையும் வழங்கப்படுகின்றன. திருமலைக்கு வருவோர் யாரும் ஏழுமலையானைப் பசியோடு தரிசிக்கவோ, பசியோடு மலை இறங்கவோ இங்கு அனுமதிப்பதில்லை என்பதே உண்மை. அதனபடி திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க நாடு முழுவதிலுமிருந்து வரும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு சுவையான மற்றும் சுத்தமான அன்னப்பிரசாதத்தை வழங்கும் ஒரு நாள் நன்கொடை திட்டத்தை திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின்ஸ்ரீ வெங்கடேஸ்வரா நித்ய அன்னப்பிரசாதம் அறக்கட்டளை தொடங்கியுள்ளது. தற்போது இந்த அன்னபிரசாத விநியோகத்திற்காக நன்கொடைகள் ஒரு நாள் முழுவதும் அன்னபிரசாதம் வழங்க ரூ.44 லட்சம் செலுத்த வேண்டும்.
அதேபோல், நன்கொடையாளர்கள் காலை உணவுக்கு ரூ.10 லட்சமும், மதிய உணவுக்கு ரூ.17 லட்சமும், இரவு உணவிற்கு ரூ.17 லட்சமும் வழங்கி பக்தர்களுக்கு அன்னபிரசாதம் வழங்கலாம். நன்கொடையாளரின் பெயர் வெங்கமாம்பா அன்னப்பிரசாத கட்டிடத்தில் காட்சிக்கு டிஸ்ப்ளே செய்யப்படும். அதேபோல், நன்கொடையாளர்கள் தங்கள் விருப்பப்படி ஒரு நாள் இங்கு அன்னப்பிரசாதம் பக்தர்களுக்கு பரிமாறும் வாய்ப்பைப் பெறலாம். திருமலை மட்டுமின்றி திருப்பதி பகுதிகளில் தற்போது அன்னபிரசாதம் வழங்கப்படுகிறது.
அவ்வாறு திருமலையில் உள்ள மாத்ரு தரிகொண்டா வெங்கமாம்பா அன்னபிரசாத வளாகம், வைகுண்டம் கியூ வளாகம்-1, 2ல் உள்ள அறைகள், வெளியே உள்ள தரிசன வரிசைகள், பிஏசி-4 (பழைய அன்னபிரசாதம்), பிஏசி-2, திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோயில், சீனிவாசம், விஷ்ணுநிவாசம் காம்பளக்ஸ், ரூயா மருத்துவமனை, சுவிம்ஸ், மகப்பேறு மருத்துவமனை, பர்டு, எஸ்.வி.ஆயுர்வேதா மருத்துவமனை, திருச்சானூரில் உள்ள அன்னபிரசாத பவனில் பக்தர்களுக்கு இலவச அன்னபிரசாதம் வழங்கப்படுகிறது.
திருமலையில் உள்ள உணவுக் கூடங்களில் அன்னப்பிரசாதம் வழங்கப்படுகிறது. வைகுந்தம் கியூகாம்ப்ளக்ஸ்-1, 2ல் உள்ள அறைகள், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு வளாகம், ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன வளாகம், கல்யாணகட்டா பகுதியில் டீ, காபி, குழந்தைகளுக்கான பால் வழங்கப்படுகிறது. எனவே பக்தர்கள் ஒரு நாள் அன்னப்பிரசாத சேவையில் நன்கொடை அளித்து சுவாமி தரிசனத்திற்கு வரக்கூடிய பக்தர்களுக்கு அன்னபிரசாதம் வழங்கும் சேவையில் பங்கேற்று ஏழுமலையானின் அருள் பெறும்படி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், நீங்கள் அன்னதானத்திற்கு நிதியளிக்க விரும்பினால் 38 லட்சம் செலுத்தினால் தான் அன்னதானம் செய்ய முடியும் என்று அர்த்தமில்லை. உங்களால் முடிந்தவற்றை ஒரு அரிசி மூட்டையாக, காய்கறிகளாக, மளிகை பொருட்களாக, ரூ.1000 நிதியாக கூட நன்கொடை செய்யலாம். தானத்திலே சிறந்த தானம் அன்னதானம் என்பார்கள்! அதில் நாமும் பங்கேற்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது!