சிறுவர்கள் வாகனங்களை ஓட்டினால் அபராதத்துடன் ஒருவருடம் பதிவு சான்று ரத்து!
தமிழ்நாட்டில் வாகன விபத்தில் உயிர் இழப்போரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. சாலை விபத்துகளும் அதிகளவில் நடப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து அரசு பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும் கூட விபத்து குறையவில்லை. சமீப காலமாக 18 வயதுக்கு குறைந்த மைனர்கள் வாகனம் ஓட்டுவதால் அதிக விபத்து ஏற்படுகிறது. இத்தனைக்கும் சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு ரூ. 25 ஆயிரம் அபராதமும், 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்படும் என்றெல்லாம் எச்சரிக்கை வந்தும் பிரயோஜமில்லை.
விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் காயமடைந்தாலோ அல்லது இறந்தாலோ வாகனத்தை மைனர் அல்லது யாரேனும் இயக்கினால் மட்டுமே வாகன உரிமையாளர்களிடம் இருந்து இழப்பீடு பெற முடியும் என்ற மத்திய மோட்டார் வாகன சட்டம் 2019-ஐ திருத்தம் செய்ததையடுத்து தமிழகத்தில் 18 வயதுக்குட்பட்டோர் வாகனம் ஓட்டினால் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதே சமயம் இப்போதெல்லாம் பெற்றோர்கள் பெருமைக்காக சிறுவர், சிறுமியர்களிடம் வாகனத்தை கொடுத்து ஓட்டவிடுகிறார்கள். அவர்கள் அதிக வேகத்தில் வாகனத்தை கட்டுபாடு இல்லாமல் ஓட்டிச்செல்கிறார்கள். மேலும் ஒரே வாகனத்தில் இரண்டு அல்லது மூன்று பேரை அமர்த்திக்கொண்டு வேகமாக செல்கிறார்கள் இதன் காரணமாக பின்னால் வருபவர்கள் விபத்தில் சிக்குகிறார்கள்.
ஏற்கெனவே சிறுவர்கள் கார், மோட்டார் சைக்கிள் ஓட்டி பிடிப்பட்டால் வாகனத்தின் உரிமையாளருக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும். மேலும் வாகனத்தின் பதிவு சான்று (ஆர்.சி) தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதால் வாகனத்தை ஒரு வருடத்துக்கு ஓட்ட முடியாமல் போய்விடும் என்ற சட்டம் தற்போது அமலில் உள்ளது. காரைக்குடி மாஜிஸ்திரேட் கோர்ட்டு சமீபத்தில் சிறுவன் ஓட்டிய மோட்டார் சைக்கிளின் பதிவு சான்றிதழை 12 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்யவும், சிறுவனுக்கு ரூ.26 ஆயிரம் அபராதம் விதிக்கவும் வட்டார போக்குவரத்து அலுவலருக்கு உத்தரவிட்டது.
சிறுவனின் பெற்றோர் அபராதம் செலுத்திய நிலையில் மோட்டார் சைக்கிள் ஒரு வருடமாக ஓட்ட முடியாமல் போனது. 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு பைக்குகளை வழங்குவது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் குற்றம். ஆனாலும் மீறுபவர்கள் பொதுவாக அபராதத்துடன் விடுவிக்கப்பட்டனர். இனிமேல் அப்படி இல்லாமல் அபராதத்துடன் வாகனத்தை இயக்குவதற்கு தடையும் விதிக்கப்படுகிறது.