ஒரே நாடு ஒரே தேர்தல்: மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
கடந்த 1951-ம் ஆண்டு முதல் 1967-ம் ஆண்டு வரை மக்களவை, சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டது. அதன்பிறகு இந்த நடைமுறை சீர்குலைந்தது. இப்போது ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. இதன்காரணமாக தேர்தல் செலவு அதிகரித்து வருகிறது. அரசு ஊழியர்கள், பாதுகாப்பு படை வீரர்களின் அலுவல்கள் பாதிக்கப்படுகின்றன. தேர்தல் நடத்தை விதிகள் அடிக்கடி அமல் செய்யப்படுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது.தற்போதைய நிலையில் ஆந்திரா, ஒடிசா, சிக்கிம், அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல், மக்களவைத் தேர்தலுடன் சேர்ந்து நடத்தப்படுகிறது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலங்கானா, சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக நடைபெறுகிறது. தேசத்தின் நலனை கருத்தில் கொண்டு 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டம் அமல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்துள்ளது.
இந்தியாவில் தற்போது மக்களவை தேர்தல், சட்டப்பேரவை தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல் என 3 வகைகளில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 1951ம் ஆண்டு முதல் 1967ம் ஆண்டு வரை அனைத்து தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டு வந்தது. பின்னர், பதவிக்காலம் முடியும் முன்பே ஆட்சி கவிழ்ந்ததாலும், பல்வேறு விவகாரங்களாலும் பதவிக்காலங்கள் மாறின. இதற்கிடையே, ஒன்றியத்தில் பாஜ கட்சி ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, மீண்டும் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டுமென வலியுறுத்தி வருகிறது. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதால், தேர்தல் செலவுகள் குறையும் என்றும், அரசு நிர்வாகம் மேம்படும் என்றும் பாஜ கட்சி கூறி வருகிறது.
ஆனால் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டுமெனில், சில மாநிலங்களின் பதவிக் காலத்தை குறைக்க வேண்டும். அதிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை அவற்றின் பதவிக் காலத்திற்கு முன்பே கலைப்பது மக்களாட்சிக்கு எதிரானது. இது மாநிலங்களின் உரிமையை பறிக்கும் செயல், நடைமுறை சாத்தியமற்றது என பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனால் இந்த எதிர்ப்புகளை கண்டுகொள்ளாத ஒன்றிய பாஜ அரசு, கடந்த 2018ம் ஆண்டு தேசிய சட்ட ஆணையம் மூலம் அரசியல் கட்சிகளின் கருத்தை கேட்கத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து, ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்க, முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்மட்ட குழுவை கடந்த ஆண்டு அமைத்தது.
இக்குழு, 18,626 பக்கங்கள் கொண்ட அறிக்கையை கடந்த மார்ச் மாதம் ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் வழங்கியது. அதில், 2029ம் ஆண்டு ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்தும் வகையில் சட்டப்பேரவைகளின் பதவிக்காலத்தை படிப்படியாக மாற்றியமைக்கவும், இதற்காக அரசியலமைப்பு சட்டத்தில் 18 திருத்தங்கள் மற்றும் உட்பிரிவுகளை கொண்டு வர பரிந்துரை செய்தது. இப்பரிந்துரையை ஏற்றுக் கொண்ட ஒன்றிய அரசு, 3 சட்ட மசோதாக்களை கொண்டு வர திட்டமிட்டது. இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் ஒன்றிய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது.இதில், நாடு முழுவதும் ஒரே நேரத்தில் மக்களவை, சட்டப்பேரவை தேர்தல்களை நடத்தும் வகையில் அரசியலமைப்பு சட்டத்தை திருத்துவது உட்பட 2 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளுக்கு மட்டும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான வரைவு சட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. உள்ளாட்சி தேர்தலுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக அரசியலமைப்பு சட்டப்பிரிவு 82ல் திருத்தம் செய்யப்பட வேண்டும். ஆனால் இந்த திருத்த மசோதாவுக்கு 50 சதவீத மாநிலங்களின் ஒப்புதல் அவசியமில்லை. இதுதவிர, புதுச்சேரி, டெல்லி, ஜம்மு காஷ்மீர் ஆகிய சட்டப்பேரவைகளைக் கொண்ட யூனியன் பிரதேசங்களுக்கு இதர மாநில சட்டப்பேரவைகளுடன் தேர்தல் நடத்துவதற்கான 2வது சட்ட திருத்த மசோதாவுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக டெல்லியின் தேசிய தலைநகர் அரசுச் சட்டம், யூனியன் பிரதேசங்களின் அரசு சட்டம், ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம் ஆகிய சட்டங்களில் திருத்தம் செய்யப்படும். இது அரசியலமைப்பு சட்ட திருத்தமாக இல்லாமல் சாதாரண சட்ட திருத்தமாக இருக்கும்.
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே இந்த 2 மசோதாக்களும் அடுத்த வாரம் நடப்பு குளிர்கால கூட்டத் தொடரிலேயே தாக்கல் செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே இந்த மசோதாக்கள் கொண்டு வரப்பட இருப்பதால், இவை நாடாளுமன்ற குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்படலாம். எனவே உயர்மட்ட குழு மூலம் பல்வேறு மாநில சட்டப்பேரவை சபாநாயகர்களுடன் ஆலோசனை நடத்த ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே நாடாளுமன்றத்தில் அதானி லஞ்ச விவகாரம், சம்பல் வன்முறை, மணிப்பூர் விவகாரம் என கடும் அமளி நிலவி வரும் நிலையில், ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்தை கொண்டு வருவதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட இருப்பது தேசிய அரசியல் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது