For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

🦉தியாகி விஸ்வநாததாஸ்🙏🏼 மறைந்த நாளின்று:🐾😢

06:19 AM Dec 31, 2023 IST | admin
🦉தியாகி விஸ்வநாததாஸ்🙏🏼 மறைந்த நாளின்று 🐾😢
Advertisement

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் ஞானியர் தெருவில் சுப்பிரமணியம் - ஞானம்பாள் என்ற தம்பதியருக்கு 1886ம் ஆண்டு பிறந்தவர் விஸ்வநாததாஸ். இளமையிலே மதுரை மாவட்டம் திருமங்கலதிலுள்ள தாத்தா வீட்டிற்கு வந்துவிட்டார். அந்த வயதில் தன் தோழர்களுடன் விளையாடுவது, ஆற்றுக்குச் செல்வது, தோப்புகளுக்கு செல்வது என்று நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன. திருமங்கலத்தில் ஒவ்வொரு சனிக்கிழமையும் பஜனை கோஷ்டி தெருவில் நடனம் ஆடிக்கொண்டும், பாடிக்கொண்டும் செல்வார்கள். தாசரிக்கு, இனம் புரியாமல் ஒரு ஈர்ப்பு வருகிறது. கொஞ்சம் கொஞ்சமாக பஜனை கோஷ்டியுடன் ஐக்கியமாகிறான். சனிக் கிழமைகளில் காலில் சலங்கையுடன், கையில் சப்ளாக் கட்டையுடன் தாசரி வந்துவிடுவான். அந்த கோஷ்டியில் மத்தளம் அடித்துக்கொண்டுவர தாளமும் தட்டிக்கொண்டு பலர் வர தாசரியின் ஆட்டம் உச்சஸ்தாயில் ஆரம்பிக்கும். அந்த ஆட்டத்தைக் கண்டு மயங்காதவர்கள் இல்லை. அந்த ஊர் பெரியவர்கள் மகிழ்ந்து வைத்த பெயர்தான் தாசரிதாஸ். தாஸ் என்ற பெயர் அந்தக் காலத்தில் ஓதுவார், பாடகர், கூத்துக் கலை ஞர்களுக்கு ஒரு குறியீடாக இருந்தது. அப்போது எல்லாக் கலைஞர்களின் பெயருக்குப் பின்னால் தாஸ் என்ற குறியீடு இருந்தது.

Advertisement

திருமங்கலத்திலிருந்து சிவகாசி செல்கிறார் தாசரிதாஸ். அங்கு அவரை திண்ணைப் பள்ளியில் சேர்த்தனர். அந்தப் பள்ளியில் உள்ள மாணவர்களிடம் தாசரி பஜனைப் பாடல்களையும், கூத்துப் பாடல்களையும் பாடுவார். அங்கு கல்வி கற்பிக்க பாட சாலையில் மிகவும் சிரமமான சூழ்நிலையை உருவாக்கினார். அதனால் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். அவருடைய தந்தையார் தன் குலத்தொழிலை பார்க்குமாறு தாசரிக்குக் கூறினார். அதிலும் ஈடுபாட்டுடன் இல்லை.

Advertisement

சிவகாசியில் உள்ள சிறீ பத்ரகாளி அம்மன் தேர் திருவிழா நடந்தது. உற்சாக மேலீட்டால் தேரின் மேல் ஏறி தாஸ் பாடினார். அங்கு வந்த அவரின் தந்தை சுப்பிரமணியம், தன் மகனை கீழே இறங்கச் செய்து "நாமே தீண்டத்தகாதவர்கள், நீயோ தேர்மேல் ஏறி புனிதத்தை கெடுத்து விட்டாயே'' என்று அடித்தார். மீண்டும் அடிக்க ஓங்கியபோது கோவில் குருக்கள் தடுத்து சரியான பயிற்சியில் தாஸை சேர்த்துவிடச் சொன்னார். பிறகு சுப்பிரமணியம் தன் மகனை தோல் மண்டி வைத்து இருக்கும் தொந்தியப்ப நாடாரிடம் நாடகப் பயிற்சிக்காகச் சேர்த்தார். தொந்தியப்ப நாடார் அந்தக் காலத்தில் சிவாஜி கணேசனை அறிமுகப்படுத்திய பொன்னுசாமி படையாச்சி, பி.ஏ. பெருமாள் முதலியார் என்ற இருவரின் ஆற்றலை ஒரு சேரப் பெற்றவர் என்ற செய்தியும் உண்டு. இவர் தாசரிதாஸுக்கு வழி முறைகளோடு பாடவும், நாடகங்களில் நடிக்கவும் பயிற்சி அளித்தார்.

தாசரிதாஸ் நாடகக் கம்பெனிகளில் சேர்ந்து நடித்தார். பெண் வேடங்களிலும் சிறுவர் வேடங்களிலும் நடித்தார். பெண் குரல் தூர்ந்து குரலில் மரக்கட்டு ஏற்பட்டது. ஆண்குரல் கணீரென்று வந்தது. 1894 ஆம் ஆண்டு சிறந்த தொழில்முறை நடிகரானார். அப்போது தாசரிதாஸ் என்ற பெயரை விஸ்வநாததாஸ் என்று மாற்றிக் கொண்டார். இந்த நேரத்தில் பெண்கள் நாடகங்களில் நடிக்க வந்தனர். வள்ளித் திருமண நாடகத்தில், தாழ்த்தப்பட்ட சாதியில் பிறந்த விஸ்வநாததாஸ் முருகன் வேடம் அணிந்து நாடகம் நடிக்கக் கூடாது என்று சாதி இந்துக்கள் கலவரம் செய்தனர். நாடகத்தை நடத்தவிடாமல் செய்தனர். தாழ்த்தப்பட்ட சாதியில் பிறந்த விஸ்வநாத தாசுடன் நடிக்க எந்த பெண் நடிகைகளும் முன்வரவில்லை. இதை முறியடிக்க விஸ்வநாத தாசின் நாடகங்களில் ஆண் நடிகர்களே பெண் வேடம் அணிந்தனர். இவருடைய தந்தை, தன் மகன் நாடகத்திற்கு சென்று கூத்தாடி ஆகிவிட்டான். சவகாசம் சரியில்லை என்று வருந்தி மகனுக்கு உடனே திருமணம் செய்து வைத்தார். திருநெல்வேலியைச் சேர்ந்த சண்முகத்தாய் என்ற பெண்ணை மணமுடித்தனர். அப்போது தாசுக்கு வயது 20. சண்முகத்தாயிக்கு 15 வயது.

இந்தச் சூழ்நிலையில் பிராமண சாதியைச் சேர்ந்த முத்துலெட்சுமி அம்மையார், விஸ்வநாத தாசுடன் விரும்பி நடித்தார். அதன் பிறகு மற்ற நடிகைகள் நடிக்க ஆர்வம் கொண்டனர். முத்துலெட்சுமி அம்மையாரை அடுத்து எஸ்.ஆர்.கமலம், மதுரை ஜானகி, காந்திமதி, நெல்லை கிருஷ்ணவேணி, கே.பி.ஜானகியம்மாள் என்று பட்டியல் நீண்டது. அக்கால நாடகங்களில் கோமாளியாக நடிப்பதிலிருந்து கதாநாயகன் வரை எல்லா யுக்திகளும் ஒரு நடிகர் பெற்று இருக்க வேண்டும். எந்தப் பாத்திரத்திற்கு நடிகர் வரவில்லையோ அந்தப் பாத்திரத்தை நடிகர்கள் ஏற்று நடிக்க வேண்டும். காலப் போக்கில்தான் பெண் நடிகர்கள் நுழைந்தனர். சாதீய ஆதிக்கம் பற்றி விஸ்வநாத தாஸ் கவலைப்படவில்லை என்றாலும், சாதிக்கு ஒரு மிருகபலம் உண்டென்பதை அனுபவ ரீதியாக உணரவே செய்தார்.

இந்நிலையில் 1911-ம் காந்திஜி தூத்துக்குடிக்கு வந்திருந்த வேளையில் அவர் பேசுவதற்கு முன்பாகவே பக்திபாடல்களை மேடையில் பாடினர் தாஸ். அவரது இனிய குரலை கேட்ட காந்திஜி 'உங்கள் குரல் ,நாட்டு விடுதலைக்கு பயன்படட்டும் 'என்றரர்.அதை வேத வாக்காக கருதி .அன்று முதல் தன பக்தி பாடல்கள்,நாடகங்கள் ,அனைத்திலும் தேச பக்தி பாடல்களையும் சுதந்திர போரட்ட வசனங்களையும் திணித்தார் .முருகன், கோவலன் என்று எந்த வேடமானாலும், அந்த வேடம் கதர் ஆடையை அணிந்திருந்தது. விஸ்வநாத தாசுடன் குழுவில் இருந்த மற்ற நடிகர்களும் இதைப் பின்பற்றினர்.முறைகளைக் கண்டித்தார். குடிப்பதை எதிர்த்தார். ஒரு சராசரி நாடகக் கலைஞனாக இருந்த விஸ்வநாத தாஸ் தேசிய விடுதலை போராட்டக் கலைஞனாக உருமாறினார். சண்முகானந்தம் கலைக்குழு என்ற பெயரில் ஒரு நாடகக் குழுவை அமைத்துக் கொண்டு, புராண நாடகத்தில் அரசியல் பிரசாரத்தை நுழைக்க முடியும் என்று வழிகாட்டிய முதல் கலைஞர் இவரே ஆவார். இந்த பிரசார முறைக்கு பிறகு கோவலன், வள்ளித் திருமணம், அரிச்சந்திரமயான காண்டம் போன்ற நாடகங்கள் எல்லாமே நாட்டு விடுதலை முழகங்களை பிரதானமாகப் பேசின.

அனல் பறக்கும் அவரது பாடல்களும் வசனங்களும் ஆங்கிலேயர்களை எரிச்சலடைய வைத்தது. இனி மேடையில் சுதந்திர பாடல்களைப் பாடக்கூடாது என தாஸ்க்கு உத்தரவிட்டது.. தாஸ் அதைமீறினார் . ஒரு தடவை அல்ல பல தடவை கைதானார். சிறைக்கு சென்றார் .அவர் மட்டும் அல்ல.அவரது குடும்பமே சிறையில் வாடியது. மேடையில் பாடியதற்காக தாசின் மூத்த மகன் சுப்ரமணியன்தாஸ் திருமணமான சில தினங்களிலே பாளையங்கோட்டை சிறையிலே அடைக்கப்பட்டார் . அப்போது விஸ்வநாததாஸ் கடலூர் சிறையில் இருந்தார்.'இனி விடுதலை போராட்ட பாடல்களை பாட மாட்டேன் என எழுதி கொடுத்து விட்டு,இதுவரை பாடியதற்கு மன்னிப்புக்கேட்டால் உங்களை விடுதலை செய்து விடுகிறேன் 'என சுப்ரமணியதாசிடம் நீதிபதி சொல்ல கடலூர் சிறையில் இருந்த தன தந்தையிடம் இது குறித்துக் கேட்டிருகிறார் சுப்ரமணிய தாஸ் .'மன்னிப்புக் கடிதம் எழுதிக்கொடுப்பதை விட சிறையிலே செத்துப்போ ' என ஆக்ரோசமாக மகனுக்குப் பதில் அனுப்பி இருக்கிறார் விஸ்வநாததாஸ் .

இப்படி ,ஒரு காங்கிரஸ்காரராக சுதந்திர போராட்ட பிரசாரத்தை மேடைகள் மூலம் அரங்கேற்றிக் கொண்டிருந்த விஸ்வநாத தாஸை,வறுமை எட்டிப்பார்த்தது .

அவரது வீடு ஏலத்துக்கு வந்தது .இதை அறிந்தார் அப்போதைய மேயர் வாசுதேவ நாயர் .நீதிக்கட்சியயைச் சேர்ந்தவர்.இவர் "நீங்கள் காங்கிரஸ் கட்சியை விட்டு விட்டு நீதிக்கட்சிக்கு வந்து சேர்ந்துவிடுங்கள். உங்கள் சொத்தை மீட்டு தருகிறோம் .மாதந்தோறும் குறுப்பிட்ட பணம் தருகிறோம்" என்றார்.

விஸ்வநாத தாஸ் கட்சி மாறச் சம்மதிக்க வில்லை.அவர் சென்னையில் நாடகம் நடத்திக் கொண்டிருந்த வேளையில் 'ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாக நாடகம் நடத்துங்கள்.உங்கள் கடனை அடைக்கிறோம் மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை தருகிறோம்' என சென்னை கவர்னர் எர்ஸ்கின் பிரபு வைத்த கோரிக்கை ,விஸ்வநாத் தாஸ் கோபமூட்டியது .

"உங்கள் பணம் எனக்கு அற்பமானது .பணம் கொடுத்து என் சுதந்திர உணர்வை மழுங்கடித்து விடமுடியாது " என்றார் வீராவேசமாக .

இது ஆங்கிலேயருக்கு ஆத்திரம் மூட்டியது.அவரைக் கைது செய்ய திட்டமிட்டது .அது குறித்துக் கவலைப்படாமல் தனது நாடகங்களை சென்னையில் நடத்திக்கொண்டிருந்தார் .1940-ம் ஆண்டின் கடைசி நாள்(31.12.1940) வள்ளி திருமணம் நாடகம் .அதில் ஆங்கிலேய அரசை விமர்சித்து கடுமையாக வசனங்கள் வரும் என்பதை அறிந்த ஆங்கிலேய காவல்துறை.அவரைக் கைது செய்யக் காத்திருந்தது.அவரது ஆக்ரோஷமான பாடல்களைக் கேட்க திரளான மக்கள் கூடியிருந்தர்கள் .திரை விலகியது.மயில் வாகனத்தில் முருகன் வேடத்தில் கையில் வேலுடன் பாடதொடங்கினார் தாஸ் .பாடல் உச்சஸ்தாயியில் செல்ல ....மூச்சு திணறல் ஏற்பட்டது .அடுத்த சில விநாடிகளிலே வாகனத்திலிருந்து சரிந்து கீழே விழுந்தார். மேடையிலே இறந்து போனார்.

மறுநாள் சென்னையில் நடந்த இறுதி ஊர்வலத்தில் காங்கிரஸ் தலைவருமான தீரர் சத்தியமூர்த்தி,கே.பி.சுந்தரம்பாள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர் .

இது  தியாகி விஸ்வநாத தாஸ்சின் சுருக்கமான வாழ்க்கை வரலாறு!

நிலவளம் ரெங்கராஜன்

Tags :
Advertisement