For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

🦉வள்ளுவர் கோட்டம் திறந்து வைக்கப்பட்ட நாளின்று💥

07:41 AM Apr 15, 2024 IST | admin
🦉வள்ளுவர் கோட்டம் திறந்து வைக்கப்பட்ட நாளின்று💥
Advertisement

❤உலகப் பொதுமறை தந்த திருவள்ளுவரின் நினைவாக 1976 ஆம் ஆண்டு கட்டப்பட்டது வள்ளுவர் கோட்டம்.

Advertisement

இந்த கோட்ட திறப்பு விழா குறித்து பின்னாளில் 🎩கருணாநிதி ஒரு கூட்டத்தில் பேசியதை சுருக்கமாக நினைவுப் படுத்த வேண்டியது அவசியம்:💥 “இன்றைக்கும் நான் சாகின்ற வரையிலே மறக்க முடியாத ஒரு செய்தி. வள்ளுவர் கோட்டத்தை எழுப்பியது நான்தான் என்று உங்களுக்கு எல்லாம் தெரியும். அதனுடைய திறப்பு விழாவிற்கு தேதி தந்து, இன்னமும் ஏழு நாளில் திறப்பு விழா நடைபெறப் போகிறது என்ற நேரத்தில் என் தலைமையிலே இருந்த தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது. அதுவும் உங்களுக்குத் தெரியும்.

தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டு, அன்றைக்கு இருந்த ஜனாதிபதியைக் கொண்டு வள்ளுவர் கோட்டம் திறக்கப்பட்டது. அப்படி திறக்கப்பட்டபோது, நெருக்கடி நிலை நாட்டில் பிரகடனப்பட்டு இருந்தது. வள்ளுவர் கோட்டத்தை ஒவ்வொரு கல்லாக எடுத்து வைத்து கட்டியன் நான். அமைத்தவன் நான். கணபதி ஸ்பதியார் என்கிற தலைசிறந்த ஒரு சிற்பியை அவருடைய சீடர்களை வைத்து வள்ளுவர் கோட்டத்தை அளந்து அளந்து கட்டி முடித்தோம். ஆனால், அந்தத் திறப்பு விழாவிற்கு நான் அழைக்கப்படவில்லை. என்னைத் தவிர மற்றவர்கள் எல்லாம் அழைக்கப்பட்டார்கள்.

Advertisement

அப்படி ஒரு நிலை அன்றைக்கு. அதனால்தான் அதற்கு நெருக்கடி நிலை என்றே பெயர். அந்த நேரத்தில் வள்ளுவர் கோட்டத்தில் நடந்த விழாவில் நம்முடைய நிழல்கூட படக்கூடாது என்று எண்ணுகின்ற மிகச்சிறந்த நண்பர்கள் சில பேர், தமிழறிஞர்கள் அந்த மேடையிலே பேசும்போது, என்னைத் தாக்கிப் பேசினார்கள். ஒருவேளை வள்ளுவர் கோட்டத்தைக் கட்டியதற்காக தாக்கிப் பேசியிருக்கக்கூடும்.

அப்படி பேசிய நேரத்திலே ஒரு குரல் பேசாதே என்று சொல்லிக் கொண்டே மேடைக்குச் சென்று பேசியவருடைய வாயை அடைத்தது. அந்தக் குரல்தான் என்னுடைய தோழர், சுரதாவிற்கு சொந்தமான குரல். இதை நான் மறக்க முடியுமா? வாழ்நாள் முடிகின்ற வரையிலே மறக்க முடியாத ஒரு சம்பவம் அல்லவா?”💥 என்று குறிப்பிட்டிருந்தார்

💔அப்படி தி மு க தலைவரால் மென்சன் பண்ணிய அங்கு அமைக்கப்பட்டிருக்கிற பிரம்மாண்டமான தேர், திருவாரூர் கோயில் தேரை மாதிரியாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டது. தேரின் பீடம் 25 அடி. சதுரப் பளிங்கால் ஆனது. ஏழு அடி உயரமுள்ள இரு யானைகள் தேரை இழுப்பது போன்று அமைக்கப்பட்டுள்ளது. பெரியதும், சிறியதுமாக உள்ள நான்கு சக்கரங்கள் ஒவ்வொன்றும் ஒரே கல்லால் ஆனவை. கட்டி முடித்து கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாகியும் நேற்றுதான் கட்டியது போல கலையழகும், கம்பீரமும் குறையாமல் காணப்படும் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வள்ளுவர் கோட்டம் "பாஸ்ட் புட்' போல போகிற போக்கில் பார்க்கக்கூடிய இடமல்ல. நின்று நிதானித்து குறளோடும், குறள் தரும் சிற்பங்களோடும் நாளெல்லாம் பார்த்து ரசிக்கவேண்டிய இடமாகும்.

'கடுகைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறள்' என்று இடைக்காட்டராலும் 'அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறள் ' என்று ஒளவைப் பெருமாட்டியாலும் சிறப்புற போற்றப்பட்ட, உலகப் பொதுமறையாம் திருக்குறளை இயற்றிய திருவள்ளுவருக்கு சிறப்பு செய்யப்பட வேண்டும் என்ற, தமிழ் சான்றோர்களின் நீண்ட காலக்கனவை நனவாக்கும் வகையில் ஐந்து ஏக்கரில் கலை நுணுக்கத்தோடு வள்ளுவர் கோட்டம் வடிவமைக்கப்பட்டது.

அழகிய தோரணவாயிலும் அதைத் தொடர்ந்த புல்வெளியும், அறம், பொருள், இன்பம் என்ற திருக்குறளின் 1330 பாக்களும் திறந்த புத்தக வடிவில் சலவைக்கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும் திருவள்ளுவரை போற்றும் திருவள்ளுவர் மாலை பாக்களும் பொறிக்கப்பட்டுள்ளது. கோட்டத்தின் மேல்தளமான வேயா மாடத்தில் திருக்குறளின் முப்பாலை குறிக்கும் வகையில் மூன்று விரல்களை உயர்த்திய நிலையில் அழகிய பீடத்தில் ஒளிமிக்க கருங்கல்லினாலாகிய திருவள்ளுவர் சிலை உயிரோட்டமாக அமைக்கப்பட்டுள்ளது.

ஆசியாவில் உள்ள மிகப்பெரிய அரங்கங்களில் ஒன்றானதும், தூண்களே இல்லாமல் அமைக்கப்பட்டுள்ளமான இங்குள்ள அரங்கத்தில் நான்காயிரம் பேர் வரை அமர்ந்து நிகழ்ச்சிகளை பார்க்கமுடியும். எல்லாவற்றிக்கும் மேலாக திருவாரூர் தேரையே இழுத்து வந்தது போல செதுக்கி வைத்துள்ள சிற்பத் தேரானது வள்ளுவர் கோட்டத்தின் மணிமுடியாய் திகழ்கின்றது. இந்த சிற்பத்தேரின் பீடம் பளிங்கு கல்லால் அமைந்துள்ளது. ஏழு அடி உயரமுள்ள இரண்டு பளிங்கு கல் யானைகள் தேரை இழுப்பது போல அமைக்கப்பட்டுள்ளது. ஒரு பக்கத்திற்கு நான்கு சக்கரம் என இரண்டு பக்கமும் எட்டு பிரம்மாண்டமாக சக்கரங்கள் உளளது. தேரின் கருங்கல் சக்கரத்தின் குறுக்களவு 11 1/2 அடியும், பருமன் 2 1/2 அடி என்றால் சக்கரத்தின் பிரம்மாண்டத்தை உணரலாம்.

தேரின் அடித்தள அடுக்குகளில் நுண்ணிய வேலைப்பாடுடைய சிற்பங்கள் உள்ளன. இந்த சிற்பங்கள் அனைத்தும் பல குறள்பாக்களை விளக்குகின்றன. இந்த கோட்டத்தை 2500 சிற்பக்கலைஞர்கள் ஒருங்கிணைந்து உருவாக்கினார்கள் என்பதும், தேருக்கு திருவண்ணாமலையில் இருந்தும், யானைக்கு பட்டுமலை குப்பத்தில் இருந்தும் என்று தேடித்தேடி கற்கள் கொண்டு வந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு சனிக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 1 மணிவரை திருக்குறள் ஆய்வரங்கம் நடைபெறும். விருப்பமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். வள்ளுவர் கோட்டத்திற்கு விடுமுறையே கிடையாது; வருடம் முழுவதும் திறந்தே இருக்கும். அனுமதிக் கட்டணம் பெரியவர்களுக்கு மூன்று ரூபாயும், சிறுவர்களுக்கு இரண்டு ரூபாயும் வாங்குகிறார்கள். இங்குள்ள அரங்கில் அடிக்கடி கைவினைப் பொருள் கண்காட்சி போல ஏதாவது கண்காட்சி நடந்துகொண்டே இருக்கும். அப்படி கண்காட்சி நடக்கும் நாட்களில் அனுமதி இலவசமாகும்.

செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் நடத்தப்படும் இந்த வள்ளுவர் கோட்டத்தை தங்களது சொந்த கட்டிடம் போல நன்கு பராமரித்துவரும் அலுவலர்கள், எந்த விவரம் கேட்டாலும் தெளிவாக கூறுகிறார்கள். வாகன நிறுத்த தொல்லை, மக்கள் நெரிசல் இல்லாமல் நல்ல காற்றோட்டத்துடன் நகரின் மையத்தில் உள்ள வள்ளுவர் கோட்டம் குடும்பத்துடன் சுற்றிப்பார்க்க சிறந்த இடமே. கொஞ்சம் எசகுபிசகு பழக்க வழக்கங்களுக்கு தோதாகி விட்ட இந்த வள்ளுவர் கோட்டம் ரூ.80 கோடியில் வள்ளுவர் கோட்டம் புனரமைக்கப்படும் என்று போன வாரம் சட்டப்பேரவையில் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவிச்சதும் குறிப்பிடத்தக்கது

நிலவளம் ரெங்கராஜன்

Tags :
Advertisement