மீனாட்சியம்மன் கோயிலில் ஆலய பிரவேச புரட்சி நடந்த நாளின்று!.
பட்டியலின மக்கள் மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குள் நுழையக்கூடாது என்ற ஒரு நிலை ஒரு காலத்தில் இருந்தது. பின்னர் 1939 இதே ஜூலை 8இல் ஆலய பிரவேசப் போராட்டம் நடந்த பின்னரே அனைத்து சமுகத்தினரும் கோயிலில் நுழைய அனுமதிக்கப்பட்டனர்.
அதாவது 1937 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தமிழகம் வந்த போது, பட்டியலின மக்கள் கோயிலுக்குள் நுழைய தடை என்பதை அறிந்து அதைக் கண்டித்து தானும் மீனாட்சியம்மன் ஆலயத்திற்கு செல்ல மாட்டேன் என மறுத்தார். இது காங்கிரஸ்காரர்களிடமும் ஆச்சாரக் காப்பாளர்களிடமும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து வழக்கறிஞர் வைத்தியநாத அய்யர் தலைமையில், நடைபெற்ற ஆலய பிரவேசத்துக்கு தக்க பாதுகாப்பு கொடுக்குமாறு அப்போதைய முதலமைச்சர் ராஜாஜி, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை கேட்டுக்கொண்டார்.
இதை ஏற்றுகொண்ட முத்துராமலிங்கத் தேவர் மதுரை முழுவதும் துண்டு பிரசுரங்கள் மூலம் எதிர்ப்பை காட்டி வந்த மேல் ஜாதியினருக்கு எச்சரிக்கை விடுத்தார். அதாவது எக்காரணம் கொண்டும் பட்டியலின மக்களின் ஆலய பிரவேசத்திற்கு பிரச்னை கொடுக்காமல் ஒதுங்கி இருக்குமாறு துண்டு பிரசுரங்களில் தெரிவித்திருந்தார். மேலும், ‘மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆலயப் பிரவேசம் செய்ய வரும் மக்களை என்னுடைய சமுதாயத்து மக்கள் தூண்களாக நின்று பாதுகாப்பார்கள். அவர்கள் பத்திரமாக வீடு திரும்பும் வரை எனது சமுதாயம் அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும்’ என்று முத்துராமலிங்க தேவர் சொன்னதாக ஒரு தகவலும் உண்டு.
1939 ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் தேதி காலை 10 மணிக்கு முத்துராமலிங்கத் தேவர், பட்டியலின மக்களுடன் தனது ஆதரவாளர் படை சூழ ஆலயப் பிரவேசம் செய்தார். இதைத்தொடர்ந்து மீனாட்சியம்மன் கோயிலில் பூஜை செய்து வந்த பிராமணர்கள், ஹரிஜன மக்கள் கோயிலில் வழிபாடு செய்ததால் மீனாட்சி கோயிலில் இருந்து வெளியேறி தலைமை குருக்கள் நடராஜய்யர் வீட்டில் குடியேறி விட்டனர். அத்தோடு மட்டுமில்லாமல் நடராஜய்யர் வீட்டில் மீனாட்சியம்மன் சிலையை வைத்து வழிபாடு செய்ய ஆரம்பித்ததோடு மீனாட்சியம்மன் கோயில் கருவறையை பூட்டி சாவியையும் எடுத்துச் சென்றனர்.
தகவல் தெரிந்து கோயில் அறங்காவலரான எஸ்.ஆர்.நாயுடு கருவறை பூட்டை உடைத்து பக்தர்கள் வழிபாட்டுக்கு கருவறையை திறந்து விட்டார். ஹரிஜன மக்களுடன் ஆலய பிரவேசம் என்பது பல போராட்டங்கள், எதிர்ப்புகளுக்கு இடையே நடைபெற்றது. ஆலய பிரவேசத்தை நடத்திய வைத்தியநாத அய்யருக்கு முத்துராமலிங்கத் தேவர், என்.எம்.ஆர்.சுப்புராமன், எஸ்.ஆர்.நாயுடு ஆகியோர்களின் ஆதரவு இருந்தது. வெற்றிகரமாக ஆலய பிரவேசம் நடத்திய வைத்தியநாத அய்யருக்கு காந்தியடிகள் கடிதம் எழுதி பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.இதையடுத்தே ராஜாஜி ஆலயப் பிரவேசத்தை சட்டப் பூர்வமாக அங்கீகரித்து சட்டம் பிறப்பித்தார்.
இந்த ஆலய பிரவேசத்துக்கு, அப்போது காங்கிரஸில் இருந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பக்க பலமாக நின்றது குறித்து மேலும் சுவாரஸ்யமான தகவல்கள் உண்டு.
ஆலயப் பிரவேசம் செய்வதற்கு முன்னதாக மதுரை விக்டோரியா எட்வர்டு ஹாலில் (இப்போது தங்க ரீகல் சினிமா அரங்கம்) 1939-ம் ஆண்டு ஜூலை 2-ம் தேதி ஆயத்தக் கூட்டம் நடத்தினார் வைத்தியநாத அய்யர். அதில் பசும்பொன் தேவர் ஆற்றிய உரை குறித்து மூத்த காங்கிரஸ் தலை வர் நவநீதகிருஷ்ணன், தனது ‘தேசியமும் தெய்வீகமும்’ என்ற நூலில் விவரிக்கிறார்.‘மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆலயப் பிரவேசம் செய்ய வரும் மக்களை என்னுடைய சமுதாயத்து மக்கள் தூண்களாக நின்று பாதுகாப்பார்கள். அவர்கள் பத்திரமாக வீடு திரும்பும் வரை எனது சமுதாயம் அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும்’ என்று தேவர் சொன்னதாக குறிப்பிடுகிறார் நவநீதகிருஷ்ணன். சொன்னது போலவே, தனது ஊரிலிருந்து வேல், கம்புகள் சகிதம் ஆட்களை வரவழைத்து ஆலயப் பிரவேசம் செய்த மக்களுக்கு பாதுகாப்புக் கொடுத்தார் தேவர்.
இது குறித்து ஃபார்வர்டு பிளாக் மூத்த தலைவர் வி.எஸ்.நவமணி கூறியதாவது:
அந்தக் காலத்தில் காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை ஒவ் வொரு போராட்டத்துக்கும் ஒரு வரை தலைவராக தேர்ந்தெடுப் பார்கள். அவருக்கு சர்வாதிகாரி என்று பெயர். அவர் போராட்டத்தில் சிறை சென்றுவிட்டால் இன்னொரு வர் சர்வாதிகாரியாக வருவார். ஆலயப் பிரவேச போராட்டத்துக்கு வைத்தியநாத அய்யரை சர்வாதி காரியாக அறிவித்தது காங்கிரஸ். அதனால், தேவர் உள்ளிட்டவர்கள் இரண்டாம் கட்டத்தில் இருந்து போராட்டத்துக்கு வலுசேர்த்தனர்.மதுரையில் கீழ பட்டமார், மேல பட்டமார் தெருக்களைச் சேர்ந்த பட்டர்களில் பெரும்பாலானவர்கள் அன்றைய தினம் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு பூஜை வைக்க வர மாட்டோம் என்று சொல்லிவிட் டார்கள். இதற்கு மாற்று ஏற்பாடு செய்த தேவர், திருச்சுழியில் இருந்து 2 அர்ச்சகர்களை மது ரைக்கு அழைத்து வந்தார். அதில் ஒருவர் எதிர்பாராதவிதமாக நோய்வாய்ப்பட்டு இறந்துவிட, மீனாட்சி காவு வாங்கிவிட்டதாக எதிர்ப்பாளர்கள் வதந்தி பரப்பினர். அதையும் மீறி ஆலயப் பிரவேச போராட்டத்தை வெற்றிகரமாக நடத்த துணை நின்ற தேவர், தொடர்ந்து திருப்பரங்குன்றம், திருவிதாங்கூர், கமுதி ஆலய நுழைவுப் போராட்டங்களிலும் முக்கியப் பங்காற்றினார்.
நிலவளம் ரெங்கராஜன்