மொரார்ஜி தேசாய் மறைந்த நாளின்று😰:
77ஆம் வருஷம் மார்ச் மாதம் 24ஆம் தேதி இந்தியாவுக்கு மிக முக்கியமான நாள். நம் நாடு சுதந்திரம் அடைந்த 30 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த தலைவர்கள் தொடர்ச்சியாக பிரதமர் நாற்காலியை அலங்கரித்து வந்த நிலையில், இதோ நான் இருக்கிறேன், நீங்கள் விலகுங்கள் என்று அரியணையில் ஏறினார் ஒருவர். அவர் பிறந்த இடம் வேண்டுமானால் சாதாரணமாக இருக்கலாம், வளர்ந்த இடம் கூட வளம் இல்லாமல் சராசரியாக இருக்கலாம். ஆனால், அவரின் நேர்மை இன்றளவும் இந்திய அரசியல்வாதிகளிடம் இருக்கிறதா என்றால் அதற்கு நம்மிடம் சரியான பதில் இருக்காது. ஆம், நேர்மையின் மறுஉருவம் அவர், அவர் வேறு யாரும் அல்ல.. காங்கிரஸ் கட்சியை முதன்முதலாக கூப்பில் அமர வைத்து, ஜனதா கட்சியன் சார்பாக இந்தியாவின் பிரதமராக பொறுப்பேற்ற மொரார்ஜி தேசாய்தான் அவர். வாஜ்பாய், அத்வானியெல்லாம் இவர் அமைச்சரவை யில் வேலை பார்த்தார்கள். சரண்சிங், ஜெகஜீவன்ராம்னு இரண்டு துணை பிரதமர்கள்.
நேர்மையை அவரிடம் பிரதானப்படுத்த என்ன இருக்கிறது என்று கூட சிலர் கேட்கலாம், அதற்கு வலிமையான காரணம் இருக்கிறது. முன்பு ஒருமுறை அவர் பம்பாய் மாகாணத்தின் அமைச்சராக இருந்தபோது, அவரின் மகள் மருத்துவம் படித்துக்கொண்டிருந்தார். ஒரு பாடத்தில் அவர் தோல்வி அடையவே, அவரின் மகள் மீண்டும் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க தயாரானார். இதற்காக தன் தந்தையிடம் அனுமதி கேட்டார். ஆனால் அவர் உடனடியாக மறுத்துவிட்டார். தான் அமைச்சராக இருப்பதால் மகளுக்கு சலுகை காட்ட வாய்ப்பிருப்பதாக அடுத்தவர்கள் நினைப்பார்கள் என்று கூறி மகளின் கோரிக்கையை நிராகரித்தார். இதனால் வருத்தமடைந்த அவரின் மகள் தற்கொலை செய்துகொண்டார். தேசாயின் நேர்மைக்கு இது ஒன்றே போதுமான சாட்சியாக இருக்கும் என்றாலும் இன்னொன்றையும் நினைவு கொள்ளலாம்.
ஒருமுறை அவர் தமிழகம் வந்தபோது ராமேஸ்வரம் கோயிலில் தரிசனம் செய்ய முடிவெடுத்து சென்றுள்ளார். 5 ரூபாய் கட்டணம் கட்டி வரிசையில் நின்றே அவர் சாமி தரிசனம் செய்துள்ளார். தன்னுடைய பதவியை தனக்கான லாப நோக்கத்திற்காக அவர் எப்போதும் பயன்படுத்தியதில்லை. இதனால்தான் என்னவோ நம்முடைய எதிரி நாடாக கருதப்படும் பாகிஸ்தான் கூட, அந்நாட்டின் மிக உரிய விருதான நிஷான்- இ - பாகிஸ்தான் விருதினை அவருக்கு அளித்து கவுரவப்படுத்தியுள்ளது. இதில் மற்றொரு சிறப்பு என்னவென்றால் அவர் இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருதையும் பெற்றிருக்கிறார்.
பம்பாய் மாகாணத்தின் பல்சார் மாவட்டத்தில் உள்ள பதேலி கிராமத்தில் (தற்போது குஜராத்தில் உள்ளது) 1896-ல் பிறந்தார். தந்தை பள்ளி ஆசிரியர். கடின உழைப்பையும், நேர்மை தவறாத கண்ணியத்தையும் அவரிடம் கற்றார். சிவில் சர்வீசஸ் தேர்வில் 1918-ல் வெற்றி பெற்று துணை ஆட்சியராக 12 ஆண்டுகள் பணிபுரிந்தார். 1930-ல் வேலையை ராஜினாமா செய்துவிட்டு காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரானார். விடுதலை இயக்கப் போராட்டங்களில் பங்கேற்றார்.
மாகாண தேர்தல்களில் 2 முறை வெற்றி பெற்று, வருவாய், உள்துறைகளின் அமைச்சராகப் பணியாற்றினார். 1942-ல் ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்றார். பல ஆண்டுகள் சிறையில் கழித்தவர்.
பம்பாய் மாகாண முதல்வராக 1952-ல் பொறுப்பேற்றார். ஜவஹர்லால் நேருவின் அழைப்பை ஏற்று மத்திய அரசில் வணிகம், தொழில் துறை அமைச்சராகவும், பின்னர் நிதியமைச்சராகவும் பணியாற்றினார். இந்திரா காந்தியின் ஆட்சியில் துணை பிரதமராகப் பணியாற்றினார்.
காங்கிரஸ் கட்சி பிளவுபட்டபோது ஸ்தாபன காங்கிரஸில் இணைந்தார். 1975-ல் அவசர நிலையை எதிர்த்ததால் சிறையில் அடைக்கப்பட்டார். விடுதலைக்குப் பிறகு, ஜெயபிரகாஷ் நாராயணின் தலைமையை ஏற்று ஜனதா கட்சியில் இணைந்தார். அவசரநிலை எல்லை மீறல்களால் வெறுத்து போயிருந்த மக்கள் பெரும்பான்மையாக ஜனதா கட்சிக்கு ஓட்டளித்து மொரார்ஜியைப் பிரதமராக்கினர். 1977-ம் ஆண்டு மார்ச் 23-ம் தேதி, 81 வயதான மொரார்ஜி தேசாய் இந்தியாவின் நான்காவது பிரதமராகப் பொறுப்பேற்றார்
நாட்டின் 4-வது பிரதமராக 1977-ல் பொறுப்பேற்றார். ஜனநாயகத்தை நிலைநாட்ட முழு முயற்சி மேற்கொண்டார். அடிப்படை உரிமைகள், பத்திரிகை சுதந்திரம், அரசியல் கட்சிகளின் சுதந்திரமான செயல்பாடு, தனிநபர் சுதந்திரத்தை நிலைநாட்டினார். விவசாயத் தொழில்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தார். நிலவரிக் குறைப்பு, மானியம் வழங்குதல் உள்ளிட்ட திட்டங்களைக் கொண்டுவந்தார். விவசாய விளைபொருட்களை நாடு முழுவதும் கொண்டுசெல்ல வகைசெய்து, நல்ல விலை கிடைக்கச்செய்தார். கட்டாய வேலைவாய்ப்பு மூலம் கிராமங்களில் சாலை போடுதல், பாசன வசதி போன்ற பணிகள் செய்யப்பட்டன. இதில் பணியாற்றிய மக்களுக்கு சம்பளத்துக்கு பதில் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
‘ஜனதா’ சாப்பாடு திட்டம் மூலம் ஏழைகளுக்கு குறைந்த விலையில் உணவு கிடைத்தது. தங்கத்தின் விலையைக் கட்டுக்குள் வைத்து நாட்டின் பொருளாதார நிலையை சீரமைத்தார். உள்நாட்டு சிறு தொழில், வணிகத் துறைகளை ஊக்கப்படுத்தினார். அண்டை நாடுகளுடன் நல்லுறவை நிலைநாட்டினார். ஊழலற்ற நிர்வாகத்தை வழங்கியது இவரது மாபெரும் சாதனை.
* சில அரசியல் விஷயங்களில் சமரசம் செய்துகொள்ள விரும்பாததால் இரண்டே ஆண்டுகளில் இவரது அரசு கவிழும் நிலை ஏற்பட்டது. இதனால் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியலில் இருந்தே விலகினார். தனது சித்தாந்தங்கள், கொள்கைகளை யாருக்காகவும் எதற்காகவும் விட்டுக்கொடுக்காமல் வாழ்ந்தவர்.
பொது வாழ்விலும், தனிப்பட்ட வாழ்விலும் நேர்மையுடன் செயல்பட்ட கறைபடாத அரசியல் தலைவரான மொரார்ஜி தேசாய் 99-வது வயதில் (1995) இதே நாளில் மறைந்தார்.