For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

அதிமுக என்னும் ஆலமரம் உருவான நாளின்று!

05:52 PM Oct 17, 2023 IST | admin
அதிமுக என்னும் ஆலமரம் உருவான நாளின்று
Advertisement

மிழகத்தின் தனிப் பெருமைகள் பல பெற்ற அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் (அஇஅதிமுக – ADMK). இந்த கட்சி தொடங்கி இன்று தனது 52ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. 30 ஆண்டுகாலம் ஆட்சியில் பொறுப்பேற்றுள்ளது. பிரதமர்களை உருவாகியுள்ளது. முதல் திராவிட மத்திய மந்திரிகளை உருவாக்கியது என்று பல பெருமைகள் அதிமுகவிற்கு உள்ளது.

Advertisement

அதிமுக தொடங்கியதை பற்றி கூற வேண்டும் என்றால், அதில் அரசியல் எதிர் நிலைப்பாட்டாளர்களாக உள்ள திமுகவை பற்றியும் கூறித்தான் ஆகவேண்டும். ஏனென்றால் அதிமுக கட்சி தலைவர் எம்ஜிஆரே ஆரம்பத்தில் திமுக கட்சியை சேர்ந்தவர் தான். திமுக கொள்கைகளை, கொடியை தனது திரைப்படங்களில் பிரபலப்படுத்தியவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. பெரியாரின் திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்து, தேர்தல் அரசியலில் களம் காண செப்டம்பர் 17, 1949இல் சி.என்.அண்ணாதுரை (அறிஞர் அண்ணா) திமுகவை தோற்றுவித்தார். அதன் பிறகு பல்வேறு தடைகளை தாண்டி, 1967இல் திமுக கூட்டணி வெற்றி பெற்று அறிஞர் அண்ணா தமிழக முதல்வரானார். திமுக ஆட்சியை பிடிப்பதற்கு எம்ஜிஆரின் திரைத்துறை பிரபலமும், அவரது தீவிர பிரச்சாரமும், திரைப்படங்களில் வெளிப்பட்ட திராவிட கொள்கைகளும் முக்கிய பங்காற்றின என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

பின்னர், 1969 பிப்ரவரி 3ஆம் தேதி அறிஞர் அண்ணா தமிழக முதல்வராக பொறுப்பில் இருந்த போதே உயிரிழந்தார். அறிஞர் அண்ணா மறைவுக்கு பின்னர் , கலைஞர் கருணாநிதி திமுக கட்சி தலைவராகவும், திமுக எம்எல்ஏக்களின் ஆதரவுடன் தமிழக முதல்வராகவும் கலைஞர் கருணாநிதி முதன் முதலாக தமிழக முதலமைச்சரானார். முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கும். திமுகவில் முக்கிய பொறுப்பில் இருந்த எம்ஜிஆருக்கும் இடையே கட்சி ரீதியில் கருத்து வேறுபாடு எழவே, 1972 அக்டோபர் 10இல் திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட எம்ஜிஆர் 1972, அக்டோபர் 14ஆம் தேதி திமுகவில் நிரந்தரமாக நீக்கப்பட்டார். திமுகவில் இருந்து நீக்கப்பட்ட எம்ஜிஆர் தனது ஆதரவாளர்களுடன், தனிக்கட்சி தொடங்க ஆலோசனையில் ஈடுபட்டார். பின்னர், தனது ஆதரவாளர் அனகாபத்தூர் ராமலிங்கம் அதிமுக எனும் பெயரில் கட்சி ஒன்றை பதிவு செய்து வைத்து இருந்தார். அதில் தன்னை ஒரு கட்சி தொண்டனாக இணைத்துக்கொண்டார் எம்ஜிஆர்.

முதல் பொதுக்கூட்டம் 24.10.1972 அன்று காஞ்சிபுரம் தேரடியில். கூட்டத்திற்கு கலெக்டர் அனுமதிதரவில்லை. ஏற்பாட்டாளர்களையும் உள்ளே தூக்கிப்போட கிடுகிடுவென வேலைகள் நடந்தது. மாவட்ட எம்ஜிஆர் மன்றத் தலைவர் கே.பாலாஜி, தலைமறைவாக இருந்தபடியே வேலைகளை செய்து வந்தார். இன்னொருபுறம் காஞ்சிபுரம் வரும்போது எம்ஜிஆரை தாக்க ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் ஆசிட் கையுமாய் ஒரு கும்பல் தயாராகிக்கொண்டிருந்தது. இதை உணர்ந்துவிட்ட ராமாவரம் தோட்டம் தரப்பு, எம்ஜிஆருக்கு அன்றைய தினம் கடுமையான காய்ச்சல் இருப்பதை சுட்டிக்காட்டி அவர் காஞ்சிக்குபோகவே கூடாது என தடைவிதித்தது. அவர் கூட்டத்தில் பங்கேற்கமாட்டார் என்ற ரீதியிலும் தகவலை பரப்பியது.

காஞ்சிபுரம் நோக்கி படையெடுத்துக்கொண்டிருந்த மக்கள் கூட்டத்திற்கு இது தெரியவர, பதற்றமும் பரபரப்பும் மேலும் எகிறிவிட்டது. கூட்ட ஏற்பாட்டாளரான பாலாஜி, உடனே ராமாவரம் தோட்டம்ஓடினார். ‘’கூட்டத்திற்கு வரவில்லை யென்றால், இங்கேயே மரத்தில் தொங்கி உயிரை விட்டுவிடுவேன்.. காஞ்சி மண்ணுக்கு வந்து நீங்கள் பத்திரமாக திரும்ப அத்தனை பேரும் உயிரைக் கொடுப்போம். அண்ணா பிறந்த எங்கள் காஞ்சிதான் உங்கள் எதிர்காலத்திற்கே மீண்டுமொரு முறை திறவுகோல். உங்கள் தைரியத்தை உலகுக்கு காட்ட இன்னொரு சான்ஸ்.. வாருங்கள்’’ என்று பாலாஜி வார்த்தைகளை அள்ளிக்கொட்ட, அதன்பின் எம்ஜிஆரால் மறுப்பே சொல்ல முடியவில்லை. இருந்தாலும் ஸ்ரீபெரும்புதூர் தாக்குல் அபாயம் இருப்ப தால் பூந்தமல்லி, பெரும்புதூர், சுங்குவார்சத்திரம் என வழக்கமான பாதையை தவிர்த்துவிட்டு மாற்றுப்பாதை யோசிக்கப்பட்டது.

படப்பை வாலாஜாபாத் வழியாக சின்ன காஞ்சிபுரம் வந்து தேரடி பள்ளிவாசல்வரை எட்டிவிடுவது.. ஆள்நடமாட்டம் இல்லாத அந்த புதர் பகுதிக்குள் ஊடுறுவி வெளியே வந்து பொதுக்கூட்ட மேடையில் எம்ஜிஆர் திடீரென தோன்றுவது.. இதுதான் புதிய திட்டம். அரசியல் எதிரிகளின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு எம்ஜிஆர் மேடையேறிய அந்த காட்சிகளை அவ்வளவு சுலபத்தில் விவரித்துவிடமுடியாது.. ஒருவழியாய் இப்படித்தான், பல திரில்லிங்கான கட்டங்களை தாண்டி காஞ்சிபுரம் தேரடியில் நடைபெற்ற அதிமுகவின் முதல் பொதுக்கூட்டத்தில் எம்ஜிஆர் தோன்ற, மக்களின் ஆரவாரம் அடங்க நீண்ட நேரம்பிடித்தது.

மைக்கை பிடித்த எம்ஜிஆர் ஒருமணிநேரம் அரசியல் எதிரிகளை விளாசித்தள்ளி பேசினார். குதிரைப்படையில் வந்து நடிகர் ஆனந்தன் கொடிபிடித்து வர, காஞ்சிபுரம் தேரடியில் அண்ணா உருவம் பொறித்த கொடி ஏற்றப்பட்டது. பின்னர் அதிமுக தலைவரான எம்ஜிஆர் , அதிமுக எனும் கட்சி பெயரை அனைந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் – அஇஅதிமுக என மாற்றினார். இதற்கு முதலில் கட்சி நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தாலும், எம்ஜிஆர் மீதான பற்று காரணமாக அஇஅதிமுக பெயரை ஏற்றுக்கொண்டனர். 1972இல் தேர்தல் ஆணையம் அதிமுகவிற்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கினர். அதிமுக கொடியாக இருக்கும் கருப்பு சிவப்பு இடையில் அண்ணா கட்டளையிட்ட புகைப்படம், இரட்டை இலை கொண்ட இந்த கொடியை நடிகர் பாண்டு வடிவமைத்து இருந்தார் என்பது குறிப்பிடக்கத்து.

கட்சி அங்கீகாரம் , சின்னம் பெற்று அதிமுக சந்தித்த முதல் தேர்தல் 1973 திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தல். திண்டுக்கல் திமுக எம்பி உயிரிழந்ததை அடுத்து, அங்கு தேர்தல்வரவே, முதல் முறையாக அதிமுக சார்பாக மாயத்தேவர் போட்டியிட்டு பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதன் பிறகு 1977 நடைபெற்ற தமிழக சட்டபேரவை தேர்தலில் அதிமுக போட்டியிட்டு , வெற்றிபெற்று 1977, ஜூன் 30ஆம் தேதி முதன் முறையாக தமிழக முதல்வரானார் எம்ஜிஆர். அதன் பிறகு 1980 இல் அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி தமிழகத்தில் ஆட்சியை கலைத்தார். தமிழகம் மட்டுமல்லாது மற்ற சில மாநிலங்களின் ஆட்சியையும் கலைத்தார்.

ஆனாலும், 1980 தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு மீண்டும் ஆட்சியை கைப்பற்றினார் எம்ஜிஆர். 1980க்கு பிறகு, 1984இல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் சமயத்தில் எம்ஜிஆர் உடல் நலக்குறைவு காரணமாக வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வந்தார். அந்த சமயத்தில் கூட எந்தவித பிரச்சாரமும் செய்யாமல் 3வது முறையாக ஆட்சியை கைப்பற்றி இருந்தார் எம்.ஜி.ஆர்.

தான் இருக்கும் வரை முதல்வராகவே தொடர்ந்து, அதிமுகவை அரியணையில் இருந்து இறங்கவிடாமல் பார்த்துக்கொண்டார் எம்.ஜி.ராமச்சந்திரன் எனும் எம்ஜிஆர். தமிழக அரசு இவ்வளவு பெரிய இடத்தை அதிமுகவுக்கு அமைத்து கொடுத்த எம்ஜிஆர் டிசம்பர் 24 , 1987இல் உடல்நல குறைவால் உயிரிழந்தார். அதன் பிறகு எம்ஜிஆர் மனைவி ஜானகி அணி, ஜெயலலிதா அணி பிரிந்து , இரட்டை இலை சின்னம் முதன் முதலாக முடக்கப்பட்டபோது, சரிவில் இருந்த அதிமுகவை மீட்டு, 1991ஆம் ஆண்டு எம்ஜிஆர் போல மீண்டும் அதிமுகவை அரியணையில் ஏற்றி முதன் முறையாக முதல்வரானார் ஜெயலலிதா.

தற்போது ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் மீண்டும் இவ்வாறான வரலாற்று வெற்றிக்கு அதிமுக ஏங்கி கிடக்கிறது. அதனை தற்போதைய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நிகழ்த்தி காட்டுவாரா என்பதை அடுத்தடுத்த தேர்தலில் காணலாம்…!

அகஸ்தீஸ்வரன்

Tags :
Advertisement