சர்வதேச சதுரங்க தினமின்று
1924 ஆம் ஆண்டு ஜூலை 20 ஆம் நாளில், பிரான்சின் தலைநகர் பாரிஸ் நகரில், உலக நாடுகளின் சதுரங்க அமைப்புகளை ஒன்றிணைக்கும் அமைப்பாக, 'பன்னாட்டுச் சதுரங்கக் கூட்டமைப்பு' (International Chess Federation) எனும் அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பின் பெயர் பிரெஞ்சு மொழியில் சுருக்கமாக, FIDE (ஃபீடே) என்று அழைக்கப்படுகிறது. “நாம் அனைவரும் ஒரே மக்கள்” என்பதைக் குறிக்கோளாகக் கொண்ட இந்த அமைப்பில், தற்போது 181 நாடுகள் உறுப்பினர்களாக இணைந்திருக்கின்றன. இந்த அமைப்பு தொடங்கப்பட்ட நாளை சர்வதேச சதுரங்க நாளாகக் கொண்டாடும் யோசனையை யுனெசுகோ முன்மொழிந்தது. அதனைத் தொடர்ந்து, 1966 ஆம் ஆண்டு முதல் ஜூலை 20 ஆம் நாள், அனைத்துலகச் சதுரங்க நாளாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் தேதியன்று ஐக்கிய நாடுகள் சபையும் இந்நாளை அங்கீகரித்தது.
உலகின் மிகவும் பழமையான விளையாட்டு செஸ்; உலகில் அதிகமாக விளையாடப்படும் விளையாட்டு செஸ்; உத்திகளுடன் விளையாட வேண்டிய பழமையான விளையாட்டு செஸ் என இந்த விளையாட்டுக்குப் பல பெருமைகள் உள்ளன. இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட செஸ் விளையாட்டுக்கு ‘சதுரங்கா’ என்று பெயர். 500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்த விளையாட்டு இந்தியாவில் விளையாடப்பட்டிருக்கிறது. இந்தியாவிலிருந்துதான் உலகின் பிற நாடுகளுக்கும் இந்த விளையாட்டுப் பின்னாளில் சென்றது.பொதுவாக விளையாட்டு நாள்கள் உலகில் பல நாடுகளில் கடைப்பிடிக்கப்படுகின்றன. ஆனால், ஒரு விளையாட்டுக்கே ஒரு நாள் தனியாகக் கடைப்பிடிக்கப்படுவது அரிதானது. சதுரங்க விளையாட்டு அந்தப் பெருமைக்குரியதாகி உள்ளது!
கொஞ்சம் விரிவாகச் சொல்வதானால் செஸ் எனப்படும் சதுரங்கம் விளையாட்டு, மன்னர் காலத்திலே போரில் ராணுவ வியூகங்களை வகுக்க பயன்படுத்தபட்டவை என்பதே வரலாறு நமக்கு கூறும் செய்தி. சரியான வியூகத்தை அமைத்து போர் புரியும் மன்னரே வெற்றியையும் அடைகிறார். கிட்டத்தட்ட 1500 வருடங்களுக்கு முன்பு, கி.பி.6ம் நூற்றாண்டிற்கும் முன், இந்தியாவில் தான் தொடங்குகிறது சதுரங்க விளையாட்டின் வரலாறு. அப்போது இந்தியாவில் ஆட்சி புரிந்துவந்த குப்தா பேரரசை சேர்ந்த மன்னர் ஒருவர் இளம் வயதிலேயே போரில் கொல்லப்படுகிறார். போரில் மன்னர் எப்படி இறந்தார் என்பதை, மன்னரின் சகோதரர் தாயாரிடம் விவரிக்க, போர்களத்தை குறிக்க ஒரு பலகையையும், போர் வீரர்களை குறிக்க சில காய்களையும் பயன்படுத்தினார். இதுவே சதுரங்க விளையாட்டின் ஆரம்பமாகக் கருதப்படுகிறது.
இதனை, அஷ்டபதம் மற்றும் சதுரங்கம் என்று அழைத்தனர். அஷ்டபதம், என்றால் எட்டுக்கு எட்டு கட்டங்கள் உடைய சதுரப்பலகை என்று அர்த்தம். தொடக்கத்தில் சதுரங்கம், நான்கு திசையிலிருந்து 4 பேர் விளையாடக்கூடியதாக இருந்தது. பகடைக்காயை பயன்படுத்தி காய்களை வெவ்வேறு திசைகளில் நகர்த்தி விளையாடினர். 7ம் நூற்றாண்டில், இந்தியாவிற்கு பெர்ஷியா நாட்டினர் வர்த்தகம் புரிந்து வந்ததால், இந்த விளையாட்டு பெர்சிய நாட்டிற்கும் பரவியது. அங்கு, இந்த விளையாட்டை shah என்று அழைத்தனர். Shah என்றால் மன்னர் என்று அர்த்தம். அதுவே, பின்னாளில் chess என்று உருமாறியது. விளையாட்டின் இறுதியில், shah mat என்ற வார்த்தைகளை பயன்படுத்தினர். அதாவது, மன்னரை காப்பாற்ற வழியில்லை என்று அர்த்தம். அதுவே பின்னாளில், check mate என்று ஆனது. அரேபியர்கள் பெர்சிய நாட்டை கைப்பற்றியபோது, அவர்களிடமிருந்து சதுரங்க விளையாட்டை கற்றுக்கொண்டனர். அரேபிய மன்னர்களிடையேயும் இந்த விளையாட்டு பிரபலமானது.
அப்போது அரேபியர்களின் ஆட்சிக்கு கீழ் இருந்த ஈராக், சிரியா, போன்ற நாடுகளுக்கும் சதுரங்க விளையாட்டு பரவியது. மேலும், அரேபியர்கள் அவர்களுக்கு ஏற்ற வகையில், பகடைக்காய் வைத்து விளையாடும் முறையை நீக்கி, உருவத்துடன் இருந்த காய்களை, உருவமில்லாமல் வடிவமைத்து, விளையாட்டில் சில மாற்றங்களை கொண்டுவந்தனர். பின் எட்டாம் நூற்றாண்டில், சீனா மற்றும் கொரியாவிற்கு சதுரங்கம் பரவியது. அதனைத்தொடர்ந்து, மங்கோலியா வழியே ரஷ்யாவிற்கு பாரசீகத்தின் வழியாக ஐரோப்பாவிற்கும் பரவியது. ஒவ்வொரு, நாட்டிற்கு பரவும் போதும், அந்தந்த நாடுகள் சதுரங்க விளையாட்டை அவர்களுக்கேற்றார் போல் மாற்றினர். ஆனால், ஐரோப்பாவில் தான், இந்த விளையாட்டு தற்போதைய விளையாட்டு வடிவத்தை பெற்றது. 15ம் நூற்றாண்டில் இத்தாலி, சதுரங்க விளையட்டில் ஒரு புதிய மாற்றத்தை அறிமுகப்படுத்தியது.
அது தன் ராணி என்ற கூடுதல் சிறப்பு. ராணியால் அனைத்து பக்கமும், அனைத்து வழியிலும் சென்று தாக்க முடியும். இதனை அறிமுகப்படுத்தி விளையாட்டின் விதிகளை முறைப்படுத்தினார். பெண்களை வீரமங்கைகளாக போர்களத்தில் அங்கீகரிக்கும் வகையில் ராணியை அறிமுகப்படுத்தியதால், இந்த விளையாட்டு மேலும் பிரபலமடையத் தொடங்கியது. 1497ம் ஆண்டு, சதுரங்க விளையாட்டை எப்படி விளையாட வேண்டும் என்ற புத்தகத்தை ஸ்பெயினில் வெளியிட்டார் எழுத்தாளர் Luis Ramirez De Lucena. 18ம் நூற்றாண்டில் இந்த விளையாட்டு உலகின் மூலைமுடுக்கெங்கும் பரவத்தொடங்கியது. 1851ம் வருடம், லண்டனில் உலக அளவிலான சதுரங்கப் போட்டி நடைபெற்றது. அதில் ஜெர்மனியைச் சேர்ந்த Adolf Anderssen வெற்றி பெற்று உலகின் சிறந்த சதுரங்க ஆட்டக்காரர் என்ற பெயரை பெற்றார். ஆனால், அதுவரை சதுரங்க விளையாட்டிற்கு என கூட்டமைப்பு எதுவும் இல்லை. முன்னரே சொன்னது போல் 1924 ஜூலை 20ம் தேதி அன்று, பாரிஸில் நிறுவப்பட்டது.
1924 ஒலிம்பிக்கில் சதுரங்க விளையாட்டியும் சேர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது, ஆனால் முதல்முறை ஆடுபவருக்கும், அனுபவசாலிகளுக்கும் இடையே வேறுபாடு கண்டுபிடிப்பதில் சிக்கல்கள் இருந்ததால் அது தோல்வியடைந்தது. கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள் பாரிஸில் நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே முதல் அதிகாரப்பூர்வமற்ற செஸ் ஒலிம்பியாட் பாரிஸில் நடத்தப்பட்டது. அதன் முடிவில் தான் சர்வ்தேச் செஸ் சம்மேளன் கூட்ட்மைப்பான FIDE அமைக்கப்பட்டது.
மொத்தத்தில் இந்த விளையாட்டு, புத்திக்கூர்மைக்கு உதவும் ஓர் அரசமுறை விளையாடல். சதுரங்கம், மனித இனத்தின் ஆரம்பகட்ட விளையாட்டுகளில் ஒன்று எனப்படுகிறது. செஸ் விளையாட்டைத் தொடர்ந்து ஆடும் சிறுவர், சிறுமிகளின் மூளை, நுட்பமாகவும் அவர்களின் வேலைத்திறன் மேம்படுவதாகவும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இது, உண்மையானது என்றும் அவர்களின் படிப்புத்திறன் மற்றும் ஞாபகசக்தியும் கூடுகின்றன என்றும் சமீப கால ஆய்வுகள் கூறுகின்றன. மேலும், ஒரு கலையாகவும் அறிவியலாகவும்கூட வர்ணிக்கப்படுகிறது. மனிதர்கள் மட்டுமே ஆடிக்கொண்டிருந்த செஸ் விளையாட்டை, இப்போது ரோபோக்களும் ஆடத் தொடங்கிவிட்டன. ரோபோக்களை மிஞ்சும் சதுரங்க விளையாட்டு வீரர்களும் இருப்பது நமக்கான ஆறுதல்தான். ஓய்ந்து கிடைக்கும் நம்முடைய மூளைக்கு வேலைகொடுப்பதற்கு மட்டுமல்ல செஸ் விளையாட்டு, வறண்டுபோன நம்முடைய சிந்தனையைத் தூண்டும் ஓர் அரிய விளையாட்டாகவும் பயன்படுகிறது. செஸ் விளையாடிவிட்டு, ஒரு கவிதையோ, நாவலோ எழுத முடியும் என்று நிரூபணம் செய்யப்பட்டுள்ளது. ஆகவே இனி சிகரெட், குட்கா, மது போன்றவை எடுத்துக்கொண்டால்தான் படைப்புத்திறன் பெருகும் என்றெல்லாம் சொல்பவர்கள், சதுரங்கம் ஆடத்தொடங்குங்கள். ஆபத்தில்லாத அதே சமயம் ஆரோக்கியமான நல்ல பழக்கம் இது!
நிலவளம் ரெங்கராஜன்