வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் இயங்க அனுமதி இல்லை!
தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான தனியார் ஆம்னி பேருந்துகள் இயங்கி வருகின்றன. சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் இருந்து தமிழகத்தின் பல்வேறு சிறிய நகரங்களுக்கும் வெளி மாநிலங்களுக்கும் தனியார் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் பலரும் இந்த ஆம்னி பஸ்களையே அதிகம் நாடி செல்கிறார்கள். பண்டிகை நாட்கள், வார இறுதிநாட்களில் கட்டணம் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்த்தப்படுவதாக பயணிகள் இந்த ஆம்னி பஸ் நிறுவனங்கள் மீது குற்றச்சாட்டி வருகின்றன.
இந்த நிலையில் பாண்டிச்சேரி, நாகலாந்து (NL) உள்ளிட்ட பதிவெண்களுடன் அதிக அளவிலான ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இப்படி வெளிமாநில பதிவெண் கொண்ட 652 ஆம்னி பேருந்துகளால் ஆண்டொன்றுக்கு தமிழக அரசுக்கு ரூ.28.16 கோடி இழப்பு ஏற்படுகிறது என்றும் வெளிமாநில பதிவு எண் கொண்ட பேருந்துகளை தமிழக பதிவு எண்ணாக மாற்ற வேண்டும் என்று அரசு வலியுறுத்தி வந்தது.
இதற்கான அவகாசத்தை ஆம்னி பேருந்து சங்கத்தினர் நீட்டிப்பு செய்ய வலியுறுத்தியதால், அவ்வப்போது அவகாசத்தை அரசு நீட்டித்து வந்தது. ஆனால், வரும் 14-ம் தேதி முதல் தமிழ்நாடு பதிவெண் இல்லாமல், தமிழ்நாட்டின் அனுமதிச் சீட்டு பெறாமல் உள்ள ஆம்னி பேருந்துகள் மாநிலத்தில் இயங்க அனுமதி கிடையாது என போக்குவரத்து துறை அறிவித்தது.இதனால், தமிழகத்தில் நாளை முதல் வெளி மாநில பதிவெண்ணுடன் இயங்கி வரும் 547 பேருந்துகள் இயங்காது என்றும் தடையை மீறி இயங்கும் பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.