ஆம்னி பஸ்கள் கோயம்பேட்டிலும் இயங்கலாம் - சென்னை ஐகோர்ட் தீர்ப்பால் பயணிகள் மகிழ்ச்சி!
‘கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே ஆம்னி பேருந்து பணிமனைகளை ஏற்கனவே மக்கள் பயன்படுத்தியுள்ளனர். அதனால், மறு உத்தரவு வரும் வரை கோயம்பேடு ஆம்னி பேருந்து பணிமனைகளில் பயணிகளை ஏற்றி இறக்கலாம்’ என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், ‘போரூர், சூரப்பட்டு சுங்கச் சாவடிகளிலும் பயணிகளை ஏற்றி இறக்கிக் கொள்ளலாம். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகளை ஏற்றி இறக்காமல் தென் மாவட்டத்திற்கு செல்லும் எந்த ஆம்னி பேருந்தையும் இயக்கக் கூடாது. ஆன்லைன், மொபைல் ஆப்களில் போரூர், சூரப்பட்டு தவிர பயணிகளை ஏற்றி இறக்க வேறு இடங்களைக் குறிப்பிடக் கூடாது’ என்று உத்தரவிட்டுள்ளது. இப்படி மீண்டும் கோயம்பேட்டில் இருந்து ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட . நீதிமன்ற அனுமதி கிடைத்ததை அடுத்து இன்று இரவு முதல் கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையம் அருகே உள்ள புக்கிங் அலுவலகங்களில் இருந்து பயணிகள் ஏறி மகிழ்ச்சியுடன் பயணம் செய்தார்கள்.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில், வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் கட்டி முடிக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை கடந்த டிசம்பர் 30ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். இதனை அடுத்து, கோயம்பேடிலிருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்பட்ட தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள், மாநில விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் ஆகியவை, கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படுகின்றன.
ஆனால், வசதி குறைபாடு மற்றும் ஏற்கனவே செய்யப்பட்ட முன்பதிவு ஆகியவற்றை காரணம் காட்டி, கிளாம்பாக்கத்தில் இருந்து பேருந்துகளை இயக்க ஆம்னி பேருந்து சங்கங்கள் எதிர்ப்புத் தெரிவித்தன. இந்நிலையில், சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் அனைத்து தனியார் பேருந்துகளும், கடந்த மாதம் 24ஆம் தேதி முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. அரசின் உத்தரவை அடுத்து, கிளாம்பாக்கத்தில் இருந்து ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டாலும், அரசின் உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன.
இந்த வழக்கில் ஆம்னி பேருந்து உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம் மறு உத்தரவு வரை கோயம்பேட்டில் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்கலாம் என உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து இன்று இரவு முதல் ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டிலிருந்து புறப்படும் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டு அதனப்டி நடந்தது.
மேலும், கோயம்பேட்டில் ஆம்னி பேருந்து நிலையம் மூடப்பட்டுள்ளதால் பேருந்து அலுவலகங்களில் இருந்து பேருந்துகள் புறப்படும் எனவும் கோயம்பேட்டில் இருந்து புறப்படும் பேருந்துகள் போரூர் சுங்கச்சாவடியில் நின்று செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.