ஒலிம்பிக்; துப்பாக்கிச் சுடுதலில் மனு பாகர் வெண்கலம் வென்றார்!
ஒலிம்பிக் தொடரில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் பதக்கத்தை உறுதி செய்தார் இந்திய வீராங்கனை மனு பாகர். துப்பாக்கிச்சுடுதலில் மகளிர் பிரிவில் ஒலிம்பிக் வரலாற்றில் முதல் பதக்கத்தை உறுதி செய்தது. 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் மனு பாகர் தற்போது 3-வது இடத்தில் உள்ளார்.
ஒலிம்பிக் விளையாட்டுத் திருவிழா பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் ஜூலை 26ல் கோலாகலமாக தொடங்கியது. வரும் ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடைபெறும் இந்த விளையாட்டு திருவிழாவில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,741 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இதில் நேற்று நடைபெற்ற துப்பாக்கிச் சுடுதல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் மகளிர் தகுதிச் சுற்றில் இந்திய வீராங்கனைகள் ரிதம் சங்க்வான், மனு பாகர் பங்கேற்றனர். இந்த தகுதிச் சுற்றில் ரிதம் சங்க்வான் 15-வது இடத்தை பிடித்து வெளியேறினார். தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வந்த மனு பாகர் மொத்தம் உள்ள 6 சுற்றுகளில் 600-க்கு 580 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தைப் பிடித்தார். இதன் மூலம் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்ற அவர், இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் வெண்கல பதக்கம் வென்று அசத்தினார்.
கொரியாவின் ஓ யே ஜின் 243.2 என்ற புள்ளிகளுடன் தங்கப் பதக்கம் வென்றார். அதே கொரியாவை சேர்ந்த மற்றொரு வீராங்கனையான கிம் யெஜி 241.3 புள்ளிகள் பெற்று வெள்ளி பதக்கததை வென்றார். மனு பாகரை பொறுத்தவரை 221.7 புள்ளிகள் பெற்று வெண்கலம் வென்றார். இதன்மூலம் பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா முதல் பதக்கம் வென்றது. அதேபோல், ஏர் பிஸ்டல் பிரிவில் பதக்கம் வென்ற முதல் பெண் என்ற சாதனையையும் மனு பாகர் படைத்தார். ஏர் பிஸ்டல் பிரிவில் 12 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு கிடைத்துள்ள பதக்கம் இதுவாகும்.