ஒலிம்பிக்: மல்யுத்தில் வெண்கலம் வென்றார் அமன் ஷெராவத்!
ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் வெண்கல பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்தியாவின் அமன் ஷெராவத் 13-5 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இதன் மூலம் இந்தியா வென்ற பதக்கங்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.
பாரீஸில் 33வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான 57 கிலோ எடைப்பிரிவின் வெண்கலப் பதக்கப் போட்டி நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. அதில், அரையிறுதி ஆட்டத்தில் ரெய் ஹிகுச்சியிடம் தோல்வியைத் தழுவிய இந்திய வீரர் அமன் ஷெராவத் - போர்ட்டோ ரிக்கோ வீரர் டேரியன் டாய் க்ரூஸை எதிர் கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியின் முதல் ஒரு சில நிமிடங்கள் ஆதிக்கம் காட்டிய டேரியன் ஒரு புள்ளியைப் பெற்றார். அதன் பிறகு அமனின் கை ஓங்கியது. இதனால் முதல்பாதி முடிவில் 6-3 என்ற கணக்கில் ஆட்டம் நிறைவடைந்தது. அதனை தொடர்ந்து, நடைபெற்ற 2-வது பாதியில், அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர் அமன், இதன் விளைவாக 13-5 என்ற புள்ளி கணக்கில் டேரியன் டாய் க்ரூஸை வீழ்த்தி வெண்கல பதக்கத்தைத் தட்டி சென்றார். இதன் மூலம் குறைந்த வயதில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர் என்ற பி.வி சிந்துவின் சாதனையை தன் வசப்படுத்தியுள்ளார். அதேபோல, இந்த போட்டியில் வெண்கல பதக்கம் வென்றதன் மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 5 வெண்கலம், 1 வெள்ளி என 6 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் இந்தியா 69-வது இடத்தில் உள்ளது.
யார் இந்த அமன் ஷெராவத்?
ஹரியானவை சேர்ந்த 21 வயதாகும் மல்யுத்த வீரரான அமன் ஷெராவத் தன் பங்கேற்கும் முதல் ஒலிம்பிக் போட்டியிலேயே பதக்கம் வென்று அசத்தியுள்ளார். மல்யுத்த போட்டிகளில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருந்த அமன் ஷெராவத், வடக்கு டெல்லி பகுதியில் உள்ள சதர்சல் மைதானத்தில் மல்யுத்த பயிற்சிக்கு பதிவு செய்த போது அவருடைய வயது 10தான்.இவரின் 11 வயதில் பெற்றோர் உடல்நிலை பிரச்சனை காரணமாக காலமாகினர். இதன் காரணமாகச் சிறுவயதிலிருந்தே அவரின் தாத்தா மன்கரம் ஷெராவத்தின் அரவணைப்பில் வளர்ந்தவர். பெற்றோரை இழந்தாலும், மல்யுத்த விளையாட்டு மீதான ஆர்வம் மட்டும் அவருக்குக் குறையவே இல்லை. மல்யுத்தத்தை தொடரும் வகையில் பல்வேறு தடைகளைத் தாண்டி நண்பர்களின் உதவியால் துரோணாச்சாரியா விருது பெற்ற பயிற்சியாளர் லலித் குமாரிடம் சேர்ந்தார். டெல்லியின் சத்ரசல் ஸ்டேடியத்தில் நுழையும்போது அவருக்கு 10 வயது தான். அதுதான் அமனுக்கு எல்லாமுமாக இருந்த இடம். குறிப்பாக அந்தக் காலக்கட்டத்தில் அவரின் அறைத் தோழராக இருந்த சாகர் அவருக்கு பெரும் உறுதுணையாக இருந்தார். மல்யுத்த வீரரான சாகர், இந்திய விமானப் படையில் பணியாற்றுகிறார். நண்பர், சகோதரர், ஏன் பெற்றோர் இடத்திலிருந்து அவருக்கு உதவி செய்துள்ளார்.
ஒவ்வொரு நாளும் தன்னுடைய விடா முயற்சியாலும், கடுமையான பயிற்சியாலும் திறமைகளை வளர்த்துக் கொண்டார். இதன் காரணமாக 2021ஆம் ஆண்டு தனது 18-ஆவது வயதில் தேசிய சாம்பியன்ஷிப் பட்டம் வென்று அசத்தினார். தொடர்ந்து 2022ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 57 கிலோ எடைப்பிரிவில் மல்யுத்தத்தில் வெண்கலப் பதக்கம் வென்றார்.அதேபோல, 2022-ல் ஸ்பெயினில் நடைபெற்ற U23 உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றார். அதைத் தொடர்ந்து கஜகஸ்தானின் அஸ்தானாவில் நடைபெற்ற 2023 ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கத்தைப் பெற்றார். இவ்வாறாக பல்வேறு பதக்கங்களை குவித்த அமன், ஒலிம்பிக்கிலும் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். தற்போது அவருக்கு பிரதமர் மோடி, சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.