ஒலிம்பிக் போட்டி 2024: பாரிசில் இன்று கோலாகல தொடக்கம்!
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் கோடை கால ஒலிம்பிக் போட்டியின் 33வது தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இன்று தொடங்குகிறது. வழக்கமாக, ஒலிம்பிக் போட்டிக்காக தனி நகரமே உருவாக்கி, புதிதாக மைதானங்கள் கட்டப்படும். ஆனால், பாரிஸில் 95 சதவீதம் ஏற்கெனவே உள்ள விளையாட்டு அரங்கங்களிலும், தற்காலிக மைதானங்கள் அமைக்கப்பட்டும் போட்டிகள் நடத்தப்படுகின்றன. புதிய கட்டுமானங்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாட்டை தவிர்க்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒலிம்பிக் வரலாற்றில் முதல்முறையாக, திறந்தவெளியில் தொடக்க விழா நடக்க உள்ளது. வீரர்கள் தங்கள் நாட்டின் கொடியை ஏந்தி, சீன் நதியில் படகில் 6 கி.மீ. தூரம் அணிவகுத்து செல்ல உள்ளனர். தொடக்க விழா நிறைவு நிகழ்ச்சிகள் டொரக்கடேரோ என்ற இடத்தில் நடைபெற உள்ளன. அங்கு ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்பட்டு, போட்டிகள் முறைப்படி தொடங்கும்.போட்டியை பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் அதிகாரபூர்வமாக தொடங்கி வைக்கிறார். தொடர் ஓட்டமாக எடுத்து வரப்படும் தீபம் மெகா கொப்பரையில் ஏற்றப்பட்டதும் தும் ஒலிம்பிக் கொண்டாட்டம் களைகட்ட தொடங்கி விடும். தீபத்தை ஏற்றி வைக்கும் அரிய கவுரவம் யாருக்கு வழங்கப்படுகிறது என்பதை பிரான்ஸ் ரகசியமாக வைத்துள்ளது.
இந்திய நேரப்படி இன்று இரவு 11.00க்கு தொடங்கி நடைபெறும் தொடக்க விழாவில் கிரீசின் பண்டைய நகரமான ஒலிம்பியாவில் இருந்து உலகம் முழுவதும் பயணித்து கொண்டு வரப்பட்ட ஒலிம்பிக் சுடர், ஜார்டின் டூ ட்ரோகேடேரோ அரங்கில் ஏற்றப்படும். தொடர்ந்து கலை நிகழ்ச்சிகளும், போட்டியில் பங்கேற்கும் நாடுகளின் வீரர், வீராங்கனைகள் அணிவகுப்பும் சென் ஆற்றங்கரையோரம் நடைபெறும். மொத்தம் 16 நாட்கள் நடைபெறும் இந்தப்போட்டியில் பங்கேற்க உலகின் முழுவதிலும் இருந்து வீரர், வீராங்கனைகள், ரசிகர்கள் என ஏராளமானவர்கள் கலை நகரமான பாரிசில் குவிந்துள்ளனர். அதனால் பாரிஸ் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்த விளையாட்டு திருவிழாவில் 206 நாடுகளை சேர்ந்த 10,741 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். 42 வகையான விளையாட்டுகளில், 329 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன. பாரிஸ் ஒலிம்பிக்கில் ஸ்கேட் போர்டிங், பிரேக்கிங், சர்ஃபிங், ஸ்போர்ட் க்ளைம்பிங் ஆகிய 4 விளையாட்டுகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. இந்தியாவை பொருத்தவரை 16 வகையான விளையாட்டுகளில் 112 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். (மொத்தம் 117 பேர் கொண்ட அணியில் 5 பேர் மாற்று வீரர்கள்.)இதுவரை நடந்த ஒலிம்பிக் போட்டியில் ஒன்றில் கூட இந்தியா இரட்டை இலக்கத்தில் பதக்கங்களை வென்றதில்லை. பல ஒலிம்பிக் போட்டிகளில் ஒரு பதக்கம் மட்டுமே வென்ற சம்பவங்களும், சில போட்டிகளில் ஒரு பதக்கம் கூட இல்லாமல் நாடு திரும்பிய சோகங்களும் அரங்கேறி உள்ளன. அதிகபட்சமாக 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் 7 பதக்கங்களை வென்று இந்தியா சாதனை படைத்துள்ளது. அது மட்டுமல்ல பதக்கப்பட்டியலிலும் 1900ம் ஆண்டு அதிகபட்சமாக 17வது இடத்தை இந்தியா பிடித்தது. கடைசியாக நடந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் 48வது இடத்தை பிடித்தது. அதனால் இந்த முறை இந்தியாவின் பதக்க வேட்டை இரட்டை இலக்கத்தை தொட வேண்டும் என்பதே இலக்காகவும் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
தொடக்க விழா ஹைலைட்ஸ்
* ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக, தொடக்க விழாவில் பங்கேற்கும் நாடுகளின் வீரர், வீராங்கனைகள் அணிவகுப்பு அரங்கத்தில் இல்லாமல், பாரிஸ் நகரின் புகழ் பெற்ற ‘சென்’ ஆற்றில் நடைபெற உள்ளது.
* சுமார் 10,000 வீரர், வீராங்கனைகள் 100க்கும் அதிகமான படகுகளில் ஏறி ‘சென்’ ஆற்றில் பாரிஸ் நகரின் முக்கிய இடங்கள் வழியாக பயணம் செய்ய உள்ளனர். இந்த ‘மிதக்கும் அணிவகுப்பு’ ஆஸ்டர்லிட்ஸ் பாலத்தில் தொடங்கி ட்ரோகடெரோ பகுதியில் நிறைவடைய உள்ளது. இங்குதான் ஒலிம்பிக் பாரம்பரிய முறையிலான தொடக்கவிழா நிகழ்ச்சிகள் மற்றும் வாணவேடிக்கை நடக்க உள்ளது.
* இந்திய நேரப்படி இரவு 11.00 மணிக்கு தொடங்கும் தொடக்க விழா மூன்று மணி நேரத்துக்கு பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்த காத்திருக்கிறது. இந்த விழாவுக்கான கலை இயக்குனராக புகழ் பெற்ற பிரெஞ்ச் நாடக இயக்குனர் மற்றும் நடிகரான தாமஸ் ஜாலி பொறுப்பேற்றுள்ளார்.
* இந்திய குழுவினர் சரத் கமல் (டேபிள் டென்னிஸ்), பி.வி.சிந்து (பேட்மின்டன்) தலைமையில் அணிவகுக்க உள்ளனர். இந்த விளையாட்டுகளை சேர்ந்த நட்சத்திரங்களுக்கு முதல் முறையாக இந்த கவுரவம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
* இந்திய வீரர்கள் பைஜாமா குர்தா அணிந்தும், வீராங்கனைகள் தேசியக் கொடியின் நிறங்களை பிரதிபலிக்கும் புடவை அணிந்தும் அணிவகுப்பில் பங்கேற்கின்றனர். ஆடைகளை தருண் தஹிலியானி வடிவமைத்துள்ளார்.
நிலவளம் ரெங்கராஜன்