புதுப் பெயரில் பரவும் பழைய கொரோனா: சிங்கப்பூர் பீதி!
சிங்கப்பூரில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 7 நாட்களில் மட்டும் சுமார் 26,000 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் ஒரு நாளுக்கு சராசரியாக 250 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து சிங்கப்பூர் சுகாதாரத்துறை அமைச்சர் ஓய் யே சுங், “அடுத்த இரண்டு அல்லது நான்கு வாரங்களில் கொரோனா பாதிப்பு மேலும் அதிகரிக்கலாம். 60 வயதுக்கு மேற்பட்டோர், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளோர். கடந்த 12 மாதங்களில் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்றால் உடனடியாக போட்டுக்கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர். மேலும் பொதுமக்கள் வெளியில் செல்லும்போது முகக்கவசம் அணிந்து செல்லவேண்டும். கொரோனா பாதிப்பு அதிகரிக்கப்படுவதையடுத்து, அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளை அதிகரிக்க உத்தரவு கொடுக்கப்பட்டுள்ளது. மருந்து பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைப்பதை உறுதி செய்யும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா ஒரு பரவாலன ஒருவகை நோய் என்பதால், எந்தவித கட்டுப்பாடுகளும் விதிக்க அவசியம் இல்லை” என்று தெரிவித்தார்.
கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவிலிருந்து கோவிட்-19 என்ற கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவி லட்சக்கணக்கானவர்களின் உயிரை பலிகொண்டது. லாக் டவுன் என்ற பெயரில் உலக நாடுகள் சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக ஸ்தம்பித்து போயின. கண்ணுக்குத் தெரியாத வைரஸை சமாளிக்க முடியாமல், அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளில் இருந்து, ஏழை நாடுகள் வரை தங்களது குடிமக்களின் உயிரை பறிகொடுத்தன. கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு உலகின் சில பகுதிகளில் இன்னும் சரியாகவில்லை என்று தகவல்கள் வெளிவந்துள்ளன. ஆனால் அந்த தொற்றுக்கு தடுப்பூசியை அனைவரும் செலுத்தியப் பின்னர் அதன் தாக்கம் குறைந்தது.
இந்த நிலையில் சிங்கப்பூர் நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அந்நாட்டு மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த 5-ஆம் தேதி அங்கு சுமார் 13 ஆயிரத்து 700 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருந்தது. அடுத்த 7 நாளில் 26 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பொதுமக்கள் கட்டாயமாக மாஸ்க் அணிய வேண்டும் என்று சிங்கப்பூர் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
சிங்கப்பூரில் பரவிவரும் புதிய வகை கொரோனா தொற்று உச்சத்தை எட்டும் என எதிர்பார்ப்பதாக அமைச்சர் ஓங் யி குங் கூறியுள்ளார்.கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை தர தேவையான ஏற்பாடுகள் செய்யவும் மருத்துவமனைகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். 60 வயதுக்கு மேற்பட்டவர்களும் உடல் நலம் பாதிக்கப்பட்டு பலவீனமாக உள்ளவர்களும் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ள அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். எனினும் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பொது மக்களுக்கு கட்டுப்பாடுகள் கொண்டு வரும் எண்ணம் தற்போது இல்லை என்றும் அவர் கூறினார். தற்போது பரவியுள்ள கொரோனாவிற்கு k.p.1 மற்றும் K.P.2 என பெயரிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ஓங் யி குங் தெரிவித்தார்.