For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

ஒடிசா பூரி ஜெகநாதர் கோயில் ரத யாத்திரை தொடங்கியது!

12:34 PM Jul 07, 2024 IST | admin
ஒடிசா பூரி ஜெகநாதர் கோயில் ரத யாத்திரை தொடங்கியது
Advertisement

லகிலேயே மிகப் பழமையான ரத யாத்திரையாகக் கருதப்படுகிறது ஒடிசா மாநிலம் பூரியில் புகழ்பெற்ற ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரை. சந்திர நாள்காட்டியின்படி, ஒவ்வொரு வருடமும் மூன்றாவது மாதத்தில் இரண்டாவது வளர்பிறை சுழற்சியின் போதுதான் இங்கு ரத யாத்திரை நடைபெறும். ஒவ்வொரு முறையும், பூரி ஜகநாதர் கூண்டிச்சா கோயிலுக்குச் செல்லும் முன் மவுசி மா கோயிலுக்குச் சென்றுவிட்டு செல்வது வழக்கம். கூண்டிச்சா கோயில்தான் பூரியில் உள்ள கடவுள்களின் பிறப்பிடமாகக் கருதப்படுகிறது. இதற்காக ஜகநாதர், அவரின் அண்ணன் பாலாபத்ரா மற்றும் தங்கை தேவி சுபத்ரா ஆகியோர் தனித்தனி தேரில் பூரியின் தெருக்களில் ஊர்வலமாகச் செல்வர். ஏழு நாள்களுக்குப் பிறகே இவர்கள் பூரியில் உள்ள கோயிலுக்குத் திரும்புவர். இதைக் காண உலகம் முழுவதும் உள்ள பக்தர்கள் பூரிக்கு வந்து விடுவர்.

Advertisement

பூரி ஒடிசா மாநிலத்தில் உள்ள அழகிய கடற்கரை நகரம். இங்குள்ள ஜெகந்நாதர் கோவில் 12ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. ஆண்டு தோறும் இங்கு நடைபெறும் ரத யாத்திரையை காண கண் கோடி வேண்டும் என்பார்கள். இந்த ஆலயத்தில் மூலவர்களாக பாலபத்ரா, அவரின் சகோதரர் ஜெகந்நாதர், சகோதரி தேவி சுபத்ரா ஆகியோருடன் சுதர்சன சக்கரமும் உடன் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்த மூன்று மூலவர்களுக்குப் புதிய தேர் செய்யப்பட்டு, அதில் அவர்கள் இந்த தேரில் அமர்ந்து நகரை வலம் வருவார்கள்.ஜகன்னாதருக்கு 45 அடி உயர நந்திகோஷம், பாலபத்ராவுக்கு 44 அடி உயர தலத்வாஜா, சுபத்ராவுக்கு 43 அடி உயர தேபாதலனா ஆகிய மூன்று பிரம்மாண்டமான தேர்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 16 சக்கரங்களைக் கொண்ட தேரில் ஜெகந்நாதரும், 14 சக்கரங்களைக் கொண்ட தேரில் பாலபத்திரரும், 12 சக்கரங்களுடன் அமைந்துள்ள தேரில் சுபத்ராவும் எழுந்தருள வண்ணமயமான ரத ராத்திரை நடைபெறுகிறது.

Advertisement

ஒடிசாவின் பூரி நகரில் மிக நீண்ட தெருக்களில் வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்ட மூன்று தேர்களையும் இழுக்கும் வைபவம் படாதண்டா என்று அழைக்கப்படுகிறது. 10 நாட்கள் இந்தத் திருவிழா நடக்கும். தங்கள் இருப்பிடத்தில் இருந்து புறப்படும் ஜெகந்நாதர், பாலபத்திரர், தேவி சுபத்ரா ஆகியோர் 2 கி.மீ. தொலைவில் உள்ள தங்களின் அத்தை கோயிலான மவுசிமா கோயிலுக்குச் சென்று ஓய்வு எடுப்பார்கள். அங்கிருந்து 9வது நாள் மீண்டும் புறப்பட்டு பூர்வீக இடத்துக்குத் திரும்புவார்கள்.

பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட இந்த ரதங்கள், புறப்படுவதற்கு முன்னால், புரி க்ஷேத்ரத்தின் அரச பரம்பரையில் வந்தவர், தங்கத் துடைப்பத்தால் ரதங்கள் பயணிக்கத் தொடங்கும் வழியை சுத்தம் செய்த பின்னரே, ரத யாத்திரை தொடங்கும். முதலில் ஸ்ரீ பலராமர் ரதமும், அடுத்ததாக ஸ்ரீ சுபத்ராவின் ரதமும் , கடைசியாக ஸ்ரீ ஜகன்நாதரின் ரதமும் இருக்க வேண்டும் என்பது நியதி.

யாத்திரை என்கிற கணக்கில், ஒன்பது நாட்கள் முடிந்தாலும், அதன் பிறகு சில சடங்குகளை முடித்த பின்பு இம்மாதம் பத்தொன்பதாம் தேதி, நீலாத்ரி பிஜே என்கிற சடங்கு, சம்பிரதாயத்திற்குப் பிறகே (அதாவது ஸ்ரீ ஜகந்நாதர் தனது பத்தினியான ஸ்ரீ மகாலட்சுமிக்கு இனிப்பு ரசகுல்லாவை ஊட்டி விட்ட பிறகே) ரத யாத்திரையை நிறைவு செய்கிறார்கள்.

ரத யாத்திரை முடிந்த பின்பு, ரதங்கள் பிரிக்கப்பட்டு, உபயோகித்த மரக்கட்டைகளைக் கொண்டு பல பொருட்கள் தயாரித்து விற்பனை செய்கிறார்கள்.அந்தப் பொருட்களை பக்தர்கள், தாங்கள் பகவானிடம் இருந்து பெற்ற ஆசீர்வாதமாக நினைத்து மிகவும் பயபக்தியுடன் வாங்கிச் செல்கிறார்கள். இதன் மூலம் இந்த ரதங்களைத் தயாரிக்கும் தச்சர்கள், வர்ணம் பூசுபவர்கள் இன்னும் பிற தொழிலாளர்களுக்கு ஜீவாதாரத்திற்கு உண்டான வழி கிடைக்கின்றது

அந்த வகையில் ஆண்டுதோறும் இந்த யாத்திரைக்காக ஒவ்வொரு வருடமும் புதியதாக மூன்று தேர்கள் செய்யப்படுகின்றன. அவற்றைப் பற்றிய விவரங்களை சற்று பார்ப்போம்.

ஸ்ரீ ஜகந்நாதர் தேர்:

மூன்று தேர்களில் ஜகந்நாத பிரபுவின் தேர்தான் பெரியது. இந்த ரதத்தின் விதானம், சிவப்பு மற்றும் மஞ்சள் நிற துணிகளால் அமைந்திருக்கும். நாற்பத்தைந்தரை அடிகள் உயரம் கொண்ட இதற்கு நந்திகோஷ், கபித்வஜா அல்லது கருடத்வஜா என்று பெயர். பதினாறு கலைகளைக் குறிக்கும் வண்ணம், ஏழு அடி விட்டம் கொண்ட பதினாறு சக்கரங்களும், நான்கு வேதங்களைக் குறிக்கும் வண்ணம், ஷங்கா, பாலஹகா, ஸ்வேதா, ஹரிதாஷ்வா என்கிற நான்கு வெண்ணிற மரக் குதிரைகளும் இத்தேரில் பூட்டப்பட்டு உள்ளன. இந்த ரதம் முப்பத்து நான்கரை அடி நீள, அகலம் கொண்டது. எண்ணூற்று முப்பத்திரண்டு மரக்கட்டைகளால் செய்யப்பட்ட இந்தத் தேரின் வடத்திற்கு. ‘சங்க சூடா’ என்று பெயர். இதன் தேரோட்டியாக தாருகா திகழ்கிறார். இந்த ரத கொடியின் பெயர் த்ரைலோக்கிய மோகினி. இந்தத் தேரின் காவலனாக கருட பகவானும் ஒன்பது பரிவார தேவதைகளாக, வராகர், கோவர்த்தனன், கோபிகிருஷ்ணன், நரசிம்மன், ராமன், நாராயணன், திருவிக்கிரமன், அனுமன் மற்றும் ருத்ரன் ஆகியோர் இடம் பெற்றிருக்கிறார்கள்.

ஸ்ரீ பலராமர் ரதம்:

ஸ்ரீ பலராமர் ரதத்தில் சிவப்பு மற்றும் பச்சை நிறத் துணிகளால் விதானம் அமைந்திருக்கும். ‘தலத்வஜா’ என்ற பெயர் கொண்ட இந்த ரதமானது, நாற்பத்தைந்தடி உயரமும், முப்பத்து மூன்றடி நீள, அகலமும் கொண்டது. பதினான்கு மன்வந்திரங்களைக் குறிக்கும் விதமாக, ஏழடி விட்டம் கொண்ட பதினான்கு சக்கரங்களைக் கொண்டது. நான்கு வேதங்களைக் குறிக்கும் விதமாக, திப்ரா, கோரா, திகாஷ்ரமா, ஸ்வமானவா என்கிற நான்கு மரக் குதிரைகள் இந்த ரதத்தில் பூட்டப்பட்டிருக்கிறது. எழுநூற்று அறுபத்து மூன்று மரக்கட்டைகள் கொண்ட இந்தத் தேரின் தேரோட்டியாக, மாதலி திகழ்கிறார். ஒன்பது பரிவார தேவதைகளாக, கணேசன், கார்த்திகேயன், சர்வமங்களா, பிரலம்பரி, ஹலாயுதா, மிருத்யுஞ்ஜெயா, நாத்மவரா, முக்தேஷ்வர், சேஷதேவன் ஆகியோர் அமைக்கப்பட்டிருக்கிறார்கள். உன்னனி என்கிற கொடியையும், வாசுகி என்கிற தேர் வடத்தையும் கொண்ட இந்தத் தேரின் காவலர் வாசுதேவன் ஆவார்.

ஸ்ரீ சுபத்ரா ரதம்:

ஸ்ரீ சுபத்ரையின் ரதமானது, சிவப்பு மற்றும் கருப்பு நிற துணிகளால் விதானத்தை உடையது. நாற்பத்து நான்கடி உயரம் கொண்ட இந்த ரதத்தை, பத்மத்வஜா, தேவதலனா, தர்படலனா என்கிற பெயர்களால் குறிக்கிறார்கள். பன்னிரண்டு மாதங்களைக் குறிக்கும் விதமாக, ஏழடி விட்டம் கொண்ட பன்னிரண்டு சக்கரங்களைக் கொண்டது. இந்தத் தேரின் வடத்திற்கு, ‘சுவர்ண சூடா’ என்று பெயர். ஐநூற்றி தொண்ணூற்று மூன்று மரக்கட்டைகளைக் கொண்டு அமைக்கப்பட்ட இந்தத் தேரானது, முப்பத்து ஒன்றரையடி நீள, அகலம் கொண்டது. ரோஷிகா, மோஷிகா, ஜிதா, அபராஜிதா ஆகிய நான்கு குதிரைகளையும் செலுத்தும் தேரோட்டியாக அர்ஜுனன் திகழ்கிறார். ஒன்பது பெண் பரிவார தேவதைகளாக, சண்டி, சாமுண்டா, உக்ரதாரா, வனதுர்கா, சூலிதுர்கா, வராஹி, ஷ்யாமாகாளி, மங்களா, விமலா ஆகியோர் திகழ்கிறார்கள். நாதாம்பிகா என்கிற கொடியையும், ஸ்வர்ணசூடா என்கிற தேர் வடத்தையும் கொண்ட இந்த ரதத்தின் காவல் தெய்வம் ஜெயதுர்காவாகும்.

தமிழ் செல்வி

Tags :
Advertisement