ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது -விமர்சனம்
நம் கோலிவுட்டில் சமீபகாலமாக ஹாரர் - காமெடிப் படம் என்ற பெயரில் பல படங்களில் மொக்கை காமெடிக் காட்சிகளை வைத்துதான் கடுபேற்றுகிறார்கள். இதில் பேய்ப் படங்களுக்கென்றே ஒரு பழைய வீடு அல்லது பங்களா மற்றும் சவுண்ட் எஃபெக்ட்களை மட்டுமே காட்டி ரசிகர்களை மிரட்ட முயன்று தோற்று போய் விடுகிறார்கள். அதிலும் ஹாலிவுட்டில் எடுக்கப்படும் பேய்ப் படங்கள் பலவற்றைப் பார்த்தாலும் எங்கெல்லாம் பேய் வருகிறது, எங்கெல்லாம் உட்காந்திருக்கிறது, பேய் வரும்போது என்ன சவுண்ட் கொடுக்க வேண்டும் என்பதை மட்டு பார்த்துக் கற்றுக்கொள்கிறார்கள். அவற்றின் திரைக்கதையையோ, சரியான அளவிலானபின்னணி இசையைப் பயன்படுத்துவதன் உத்தியையோ கற்றுக்கொள்ள அல்லது காப்பியடிக்கவோ கூட முயற்சிப்பதில்லை. இப்படி கடுப்பேற்றும் பட்டியலில் வந்திருக்கும் இன்னொரு சினிமாவே `ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது .
யூடியூப் காமெடி புகழ் கோபி - சுதாகர், நடிகர்கள் முனீஷ்காந்த், சத்யமூர்த்தி, ஜார்ஜ் மரியான், நடிகைகள் யாஷிகா, ரித்விகா, ‘எரும சாணி’ சேனல் புகழ் விஜய், ஹரிஜா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படமிது. த.ராஜன் தயாரித்துள்ள இந்தப் படத்தை ரமேஷ் வெங்கட் இயக்கியுள்ளார். கௌஷிக் க்ரிஷ் இசையமைத்துள்ளார். கதை என்னவென்றால் படம் இயக்க வாய்ப்பு தேடிக்கொண்டிருக்கும் நாயகன் சத்யமூர்த்தி மற்றும் அவரது நண்பர்கள் கோபி, சுதாகர், விஜய் ஆகியோர் திரைப்படம் பார்ப்பதற்காக ஒரு பழைய சினிமா தியேட்டருக்கு போகிறார்கள். அதே தியேட்டருக்குகு யாஷிகா ஆனந்தும், அவரது தோழி ஹரிஜாவும் வருகிறார்கள். அவர்களைப் போல் மேலும் சிலர் அந்த திரையரங்கிற்குள் படம் பார்க்க வர, திரையில் அவர்கள் பார்க்க நினைத்த படம் அல்லாமல் ஒரு பேய் பேடம் திரையிடப்படுகிறது. அந்த படம் ஓடிக்கொண்டிருக்கும் போதே அந்த திரையரங்கில் சில அமானுஷ்ய விசயங்கள் நடக்கிறது. இதனால், தியேட்டரில் இருப்பவர்கள் அங்கிருந்து வெளியேற நினைக்கும் போது அவர்களால் முடியவில்லை. எத்தனை முறை முயற்சித்தாலும், அவர்கள் திரும்ப...திரும்ப...அந்த திரையரங்கிற்குள் சிக்கிக்கொள்ள, இறுதியில் அவர்கள் அங்கிருந்து தப்பித்தார்களா?, அந்த தியேட்டரில் நடந்த திகிலுட்டிய அமானுஷ்ய சம்பவங்களின் பின்னணி என்ன? என்பதே ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’.
யூ டியூப்பில் படு கேஷூவலாக வியூஸ்களை அள்ளி நிஜமாலுமே வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் கோபி, சுதாகர் ஆகியோருடன் யூ டியூப்பில் இன்னொரு பக்கம் கலக்கும் எருமசாணி டீம் இணைந்து பெரிய திரையில் கிச்சு மூட்ட முயன்று தோற்று போய் விட்டார்கள். பேயை பார்த்தால் பயமே போய் விடும் என்ற அளவுக்கு பேய் களுக்கு பெரிசா திகில் பயமுறுத்தல் இல்லாமல் செய்தி ருப்பதால் அதற்கான பிளாஷ் பேக்கும் பிசுபிசுக்கிறது. படத்தில் வில்லன் யார் என்றால் முனிஸ்காந்த் தான். வில்லன் பேர கேட்டாலே ஸமைலி வருதில்ல.. அப்புறம் அவர் எப்படி வில்லனாக செல்கட் செய்தார்களோ? யாஷிகா, கோபி - சுதாகர், எரும சாணி’ சேனல் புகழ் விஜய், ஹரிஜா என அனைவரும் புதிதாக பெரிதும் முயலாமல், வழக்கமாக இந்த ஜானர் படங்களுக்கு தேவையானதை திரையில் கொண்டு வந்திருக்கிறார்கள்.
முதல் பாதி பிடிப்பு இல்லாமல் போனாலும் இரண்டாம் பாதியிலாவது கொஞ்சூண்டு பேய்க்கு உண்டான மரியாதைக் கொடுத்து நம்மை பயமுறுத்த முயற்சித்திருக்கலாம் ஆனால் அதை செய்யத் தவறி பாவம் அவிய்ங்களும் கன்ஃப்யூஸ் ஆகி ரசிகர்களையும் குழப்பி அனுப்பி விடுகிறார்கள்.
மொத்தத்தில் ஒரு சினிமா வுக்கு உரிய ஸ்கிரிப்ட் குறித்த புரிதல் இல்லாமல் பிக்பாஸ் கமல் சொன்ன ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்ர டைட்டில் மட்டுமே தேறுகிறது.
மார்க் 1.5/5