வெப் சீரியல்களில் ஆபாசக் காட்சிகள் மற்றும் வசனங்கள் அதிகமாகிக் கொண்டே போகிறது!- நடவடிக்கை எடுப்பீர்களா? - கனிமொழி சோமு கேள்வி!
அமேசான் பிரைம், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், நெட்பிளிக்ஸ் மற்றும் பல ஓடிடி தளங்களின் பயன்பாடு இந்திய அளவில் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் ஓடிடி தளங்களில் ஆபாசமான மொழி பயன்பாடு, தவறான வார்த்தைகள், அநாகரீகமான செயல்கள் உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்த அத்துமீறல்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அப்படி அவை உறுதிப்படுத்தப்பட்டால் அதை மத்திய அமைச்சகம் ஏற்றுக்கொள்ளாது என்றும் தகுந்த நடவடிக்கை அவர்கள் மீது எடுக்கப்படும் எனவும் முன்னரே எச்சரித்து இருந்தார் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாகூர்.
ஆனாலும் இன்று வரை சமூக வலைதளங்கள் மற்றும் ஓடிடி இணையதளங்களில் ஒளிபரப்பாகும் வெப் சீரியல்களில் ஆபாசக் காட்சிகள் மற்றும் வசனங்கள் அதிகமாகி வருகின்றன. இதைத் தடுக்க தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டங்களில் திருத்தம் கொண்டுவரப்படுமா? என்று மாநிலங்களவையில் தி.மு.க. எம்.பி. டாக்டர் கனிமொழி என்.வி.என். சோமு கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் அளித்த பதில்:
“இணையதள செய்தி மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை ஒழுங்குபடுத்தும் வகையில் டிஜிட்டல் மீடியாவுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய விதிகளை உருவாக்கி தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021 வெளியிடப்பட்டது. அதை நடைமுறைப்படுத்திய அனுபவத்தின் விளைவாக 2022 மற்றும் 2023ம் ஆண்டுகளில் தேவையான திருத்தங்களும் அதில் செய்யப்பட்டது.
இந்த சட்டவிதிகளுக்கு முரணாக நடந்துகொள்ளும் இணையதள ஊடக நிறுவனங்கள் தங்களின் தொழில்சார் உரிமைகளை இழக்க நேரிடுவதுடன் ஐ.டி., மற்றும் ஐ.பி.சி., சட்டங்களின் கீழ் கடுமையான நடவடிக்கைகளையும் எதிர்கொள்ள வேண்டும்.ஆபாசம், அருவெறுப்பு, வன்முறை உள்ளிட்ட ஆட்சேபிக்கத் தகுந்த 11 வகையான செயல்களை, விஷயங்களை சமூக வலைதளங்களிலும் இணைய தளங்களிலும் காட்சிப்படுத்துவதை தகவல் தொழில் நுட்பச் சட்டம் -2021 தடை செய்கிறது.
இந்தத் தளங்களைப் பயன்படுத்தும் பயனாளர்களும் தடைசெய்யப்பட்ட இந்த விஷயங்களை பகிரவோ, பதிவேற்றம் செய்யவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப விதிகள் -2021, பிரிவு 3 (1) ன்படி, ஆபாசக் காட்சிகள், படங்கள், அடுத்தவர்களின் உடல்சார்ந்த அந்தரங்க விஷயங்களை பொது வெளியில் பகிர்வதும் தடை செய்யப்பட்டுள்ளது.
தவறான தகவல்களைத் தருவது, ஒருவரைப் போல போலியான தோற்றத்தை ஏற்படுத்தி அவதூறுகளைப் பரப்புவது, ஆர்ட்டிபிஷியல் இண்ட்டெலிஜென்ஸ் மூலம் உருவாக்கப்படும் டீப்ஃபேக் தொழில்நுட்ப படங்களும் தடை செய்யப்பட்டுள்ளன.
இப்படி தடைசெய்யப்பட்ட செயல்களை செய்யும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு எதிராக பாதிக்கப்படும் நபர்களோ, பொதுமக்களோ புகார் அளித்தால் சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்கவும், உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கவும் நீதிமன்றத்திற்கும், அரசால் அங்கீகாரம் அளிக்கப்பட்ட அமைப்புகளுக்கும் அதிகாரம் வழங்கவும் சட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நாட்டின் பாதுகாப்பு, அண்டை நாடுகளுடனான நட்புறவை பாதிக்கும் செய்திகள், பாலியல் வன்கொடுமை, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் செயல்பாடுகள் போன்ற குற்றங்களைச் செய்யத் தூண்டும் வகையிலான காட்சிகளை பதிவேற்றம் செய்யும் நபர்களை, அமைப்புகளை கண்டறிந்து அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க சமூக வலைதளம் மற்றும் இணையதள நிறுவனங்கள் விசாரனை அமைப்புகளுக்கு கண்டிப்பாக உதவ வேண்டும் என்பதையும் தற்போது நடைமுறையில் உள்ள தகவல் தொழில்நுட்பச் சட்ட விதிகள் உறுதிப்படுத்துகின்றன.”இவ்வாறு அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.