தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

🦉ஓ.ஹென்றி...-உலகம் கொண்டாடிய கதாசிரியர் பிறந்த நாள்!🐾

07:24 AM Sep 11, 2024 IST | admin
Advertisement

🎩சிறுகதை உலகின் தன்னிகரற்ற எழுத்தாளர். ஓ.ஹென்றி கதைகள் அதிரடி க்ளைமாக்ஸுக்காகவே புகழ்பெற்றது.

Advertisement

கொஞ்ச சுருக் -மா சொல்வதானால்

அமெரிக்காவின் பிரபல பத்திரிகைகளில் ஒன்றான `தி நியூயார்க் டைம்ஸ்' 1909-ம் ஆண்டு தனது நிருபர் ஒருவரை அழைத்து, எழுத்தாளர் வில்லியம் சிட்னி பார்ட்டர் என்பவரை நேர்காணல் செய்யும் பணியை ஒப்படைத்தது. அந்த நிருபருக்கு ஆறு வாரம் கெடு வழங்கப்பட்டது. ஐந்து வாரம் கடந்தும் அந்த எழுத்தாளரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. கடைசி வாரத்தின் திங்கட்கிழமை அன்று, வில்லியம் சிட்னி பார்ட்டரின் புத்தகங்களின் பதிப்பாளர் வழியே அவர் தங்கியிருந்த மேடிசன் ஸ்குவேர் என்ற இடத்தைக் கண்டுபிடித்துச் சந்தித்தார் அந்த நிருபர்.

Advertisement

முதன்முறையாகச் சந்திக்கும்போது நிருபர், ``உங்களை பல நாள்களாகத் தேடிக் கண்டுபிடித்திருக்கிறேன்'' என்றாராம். உடனே, சிரித்துக்கொண்டே ``தெரியும்'' என்றார் சிட்னி பார்ட்டர்.

சரி, `யார் இந்த சிட்னி பார்ட்டர்? நியூயார்க் டைம்ஸ் போன்ற பத்திரிகைகள் எல்லாம் தேடிக் கண்டுபிடித்து நேர்காணல் செய்யும் அளவுக்கு அவ்வளவு பெரிய எழுத்தாளரா என்ன?' என்று யோசிக்கலாம். அவருடைய புனைபெயரைக் கூறினால் உங்களுக்கே தெரியும். ஆம். அமெரிக்காவே கொண்டாடிய சிறுகதை எழுத்தாளர் ஓ.ஹென்றியின் இயற்பெயர்தான் `வில்லியம் சிட்னி பார்ட்டர்'.

முறுக்கிய கறுப்பு மீசை, நம்பிக்கையும் கம்பீரமும் நிரம்பிய கண்களைப் பார்த்தாலே ராணுவ வீரரை ஞாபகப்படுத்தும் ஹென்றியின் இளம் வயது புகைப்படம். காதலும் அன்பும் நிரம்பிய கண்கள், இதயத்தின் இனிமையைப் புன்னகையாய் முன்னிறுத்தும் உதடுகள் என்று சாக்லேட் பாயை ஞாபகப்படுத்தும் ஹென்றியின் சற்று வயதேறிய புகைப்படம். இப்படி என்றும் அழகாய், புதிராய் இருந்த ஓ.ஹென்றி, 1867-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் நாள் கிரீன்ஸ்போரா என்னுமிடத்தில் பிறந்தவர்.

ஆரம்பத்தில் ஒரு வங்கியில் காசாளராகப் பணியாற்றினார். ஒரு தடவை வங்கியின் கணக்கு சரிபார்க்கப்பட்ட போது ஒரு பெருந்தொகை குறைந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. யாரோ செய்த மோசடி அப்பாவியான ஓ.ஹென்றி மீது விழுந்தது. வங்கி பணத்தை மோசடி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

ஓ. ஹென்றிக்கு நிரபராதியான தான் சிறையில் அடைக்கப்பட்டது மனதில் பெரும் வேதனையை ஏற்படுத்தியது. அதை மறப்பதற்காக சிறைச்சாலை யிலேயே கதை, கட்டுரைகள் எழுத முயற்சி செய்தார் அவர்.நல்ல கதைகளை எழுதினார் ஓ. ஹென்றி. சிறையை விட்டு வெளியே வந்த அவருக்கு வேறு வேலை கிடைக்கவில்லை. எனவே அவர் எழுதுவதையே தொழிலாக்கிக்கொண்டார். பின்னாளில் பிரபல கதா ஆசிரியரான ஓ. ஹென்றி பேரும், புகழும், பொருளும் ஈட்டினார் என்று கூறப்படுவது உண்மை கதை.

அப்பேர்பட்ட ஓ.ஹென்றி (O. Henry) பிறந்த நாளில் அவர் எழுதிய ``கடைசி இலை" (The Last Leaf) சிறுகதை இதோ நம் ஆந்தை ரிப்போர்ட்டர் குழு நண்பர்களுக்காக .

ஜான்ஸி மற்றும் சூ இருவரும் தோழிகள். ஒரு வீட்டின் மாடியில் கலைக்கூடம் அமைத்து பணியாற்றி வருகின்றனர். அவர்களுடைய வீட்டின் கீழ்ப்பகுதியில், பெர்மான் என்னும் பெயருடைய வயதான முதிய ஓவியர் வசித்து வருகிறார். அவர் பெரும் குடிகாரர். தன் இறப்புக்கு முன்பு ஒரு மகத்தான ஓவியத்தை வரைய வேண்டும் என்பது அவரது லட்சியமாக இருக்கிறது. எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டிருக்கக்கூடிய சூழ்நிலையில், பனிக்காலம் ஆரம்பமான சில நாள்களுக்குப் பின் ஜான்ஸிக்கு கடுமையான சளி, காய்ச்சல் உண்டாகிறது.

காய்ச்சல் காரணமாய் அவளால் எழுந்து நடக்கவே முடியவில்லை. படுத்த படுக்கையாகவே இருக்கிறாள். அதைக் கண்ட தோழி சூ, மருத்துவரை அழைத்து வந்து காட்டுகிறாள். மருத்துவர் பலவகையான மருந்துகள் அளித்தும் நோய் குணமாகவில்லை. ஜான்ஸி, தன்னுடைய அறையில் ஜன்னலுக்கு வெளியே உள்ள சுவரையொட்டி படர்ந்து வளர்ந்திருக்கும் இவி கொடியிலுள்ள இலைகளையே பார்த்த வண்ணம் படுத்து இருக்கிறாள்.

அந்த வயதான கொடி, சுவருடன் ஒட்டிப் படர்ந்திருக்கிறது. அதில், உள்ள இலைகள் பனி காரணமாக ஒவ்வொன்றாக உதிர்ந்து கொண்டே போகின்றன. கடும் பனியின் மூச்சுக்காற்று கொடியின் அநேக இலைகளை உதிர்த்திருந்தது. அந்தக் கொடியையே பார்த்த வண்ணம் படுக்கையில் படுத்திருக்கும் ஜான்ஸியின் மனதில் ஒரு எதிர்மறையான எண்ணம் ஆழமாகப் பதிந்து போய்விடுகிறது. அந்த இவி கொடியின் அனைத்து இலைகளும் உதிர்ந்து விடும்போது, தான் இறந்துவிடுவோம் என அவள் தனக்குள் உறுதியாக நம்பத் தொடங்குகிறாள்.

ஒவ்வொரு நாளும் கொடியின் இலைகள் உதிர்வதை அவர் வேதனையுடன் பார்த்து, அவற்றை எண்ணிக்கொண்டே இருக்கிறாள். ஒரு ஆத்மா தன்னைத்தானே சாவுக்குத் தயார்படுத்திக்கொள்ளும் உலகிலேயே மிக வேதனைக்குரிய ஒரு செயலை அவளை அறியாமலே மேற்கொள்கிறாள் ஜான்ஸி. உயிர் மீதான பிடிமானத்தைத் தளர்த்திக்கொண்டு, உதிர்ந்து விழும் அந்த எளிய இலைகள்போல காற்றில் மிதந்து போக முடிவு செய்துவிடுகிறாள் அந்த இளம்பெண்!

இதையறிந்த தோழி சூ மிகவும் வேதனைப்படுகிறாள். தன்னுடைய தோழியை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என விரும்புகிறாள் சூ. எனவே, ஜான்ஸிக்கு நம்பிக்கை ஊட்டக்கூடிய செயல்கள் பலவற்றையும் செய்கிறாள். ஜான்ஸிக்குப் பிடித்தமான ஓவியங்களை அவள் முன் அமர்ந்து வரைகிறாள். ஆனால், ஜான்ஸியின் எண்ணம் முழுக்க அந்த இவிக் கொடி கடைசி இலையை உதிர்த்துவிட்டால், தான் இறந்துவிடுவோம் என்பதாகவே இருக்கிறது.

அவர்களுடைய வீட்டின் கீழ்ப்பகுதியில் உள்ள ஓவியர் பெர்மான், சூ-வினுடைய ஓவியத்துக்கு மாடலாக இருக்க மிகுந்த போராட்டங்களுக்குப் பிறகு ஒருநாள் ஒப்புக்கொள்கிறார். அவரைப் படம் வரைகையில் சூ, தன்னுடைய தோழி ஜான்ஸியின் நிலையை அவரிடம் விவரிக்கிறாள்.

அந்த நாள் இரவு கடுமையான காற்றுடன் மழை பெய்கிறது. ஜான்ஸி வெளியே அந்தக் கொடியைப் பார்க்கிறாள். அதில் ஒரே ஒரு இலை மட்டுமே அப்போது இருக்கிறது. பெரும் காற்றிற்கு அந்த இலை தள்ளாடுகிறது. எந்த நொடியும் விழுந்துவிடும் நிலையில் இருக்கிறது, அந்த ஒற்றை இலை. அதையே பார்த்துக் கொண்டிருக்கிறாள் ஜான்ஸி. அதைப் பார்த்த சூ, பதற்றத்துடன் அவசரமாகச் சென்று ஜன்னலை மூடி திரைகளைப் போடுகிறாள். ஜான்ஸி மிகுந்த வேதனையுடன் கண்களை மூடிக்கொள்கிறாள். அந்த இரவு முழுக்க பலத்த காற்றுடன் மழை கொட்டித் தீர்க்கிறது. அடுத்த நாள் விடிந்ததும், அந்த ஜன்னல் திரையை விலக்கச் சொல்கிறாள் ஜான்ஸி. வேதனையுடன் ஜன்னலின் திரையினை விலக்குகிறாள் சூ. அந்தக் கொடியில் ஒற்றை இலை உதிராமல் அப்படியேதான் இருக்கிறது. ஜான்ஸிக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை.

இலையையே பார்த்துக்கொண்டிருக்கிறாள். அதன் காம்புக்கருகில் பசுமையும், ஓரங்களில் மஞ்சள் நிறமுமாய் அழகாக இருக்கிறது இலை. இத்தனை காற்றுக்குப் பிறகும் அந்த இலை விழாதது, ஜான்ஸிக்கு பெரும் மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. அன்றைய பகல் பொழுது முடிந்து அந்த நாள் இரவு வருகிறது. அந்த மங்கிய ஒளியில், இலை கொடியை இறுக்கமாகப் பற்றியிருப்பதைப் பார்த்து வியப்படைகிறாள் ஜான்ஸி!

அன்றும் பெரும் காற்றும், மழையுமாக இருக்கிறது. ஜன்னலை மூடி விடுகிறாள் சூ. அடுத்த நாள் எழுந்து பார்க்கும்போது அந்த இலை இன்னும் கொடியில் ஒட்டிக்கொண்டுதான் இருக்கிறது. ஏதோ ஒன்று அந்த இலையை, அங்கு தொடர்ந்து நீட்டிக்கச் செய்து கொண்டிருக்கிறது. அதைப் பார்த்த ஜான்ஸிக்கு வாழ்க்கை மீது நம்பிக்கை பிறக்கிறது. உயிர் பிழைப்போம் என்று நம்ப ஆரம்பிக்கிறாள். நோயிலிருந்து விடுபட்டு படிப்படியாகப் பழைய நிலைக்குத் திரும்புகிறாள் ஜான்ஸி.

இச்சூழலில் முதல் நாள் காற்று, மழையிலேயே அந்த ஒற்றை இலையும் விழுந்து விட்டதாகவும், கீழே குடியிருந்த முதிய ஓவியரான பெர்மான், அந்தக் கொடி படர்ந்திருக்கும் சுவரில் ஒரு இலையை வரைந்ததாகவும் ஜான்ஸி குணமாகி உணவருந்தும்போது இலை குறித்த உண்மையைக் கூறுகிறாள் சூ.

அந்த இலை பார்ப்பதற்கு உண்மையான இலை போலவே இருந்த காரணத்தால் ஜான்ஸி அதை இவிக் கொடியின் கடைசி இலை என நம்பிவிடுகிறாள். அந்த நம்பிக்கையே அவளை நோயிலிருந்து காப்பாற்றுகிறது. ஓவியர் பெர்மான், ஜான்ஸியின் உயிரைக் காப்பாற்றிய அந்த இலையை வரைந்த அடுத்த நாள் அதே சளி-காய்ச்சல் நோயில் இறந்துவிடுகிறார். ஆனால், அந்தக் கடைசி இலை அவரது வாழ்வில் ஒரு மகத்தான ஓவியம் என முடிகிறது கதை.

பல்வேறு பள்ளியில் மோட்டிவேஷன் கதையாகச் சொல்லித்தரப்படும் இந்தக் கதை, அதையும் தாண்டி உணர்ச்சிகரமானது. ஜான்சிக்கும் சூயிக்கும் இடையில் இருக்கும் அன்பு. வாழ்க்கையில் அங்கீகரிக்கப்படாத ஓவியராக இருந்த பெர்ஹ்மன் யார் என்றே தெரியாதவர்களுக்காக தனது உயிரையே தந்த அந்த மனம். இரு மனிதர்களுக்கிடையில் சிக்கித்தவிக்கும் உணர்ச்சிகரமான அன்பை மாளாது எழுதியவர்தான் ஓ.ஹென்றி.

வாத்தீ அகஸ்தீஸ்வரன்

Tags :
American writerBirth AnniversaryLiteratureO. HenryShort storywriterஇலக்கியம்எழுத்தாளர்ஓ.ஹென்றிசிறுகதைபிறந்தநாள் பகிர்வு
Advertisement
Next Article