நியூட்டிரீசியன் மற்றும் டயடெடிக்ஸ் (ஊட்டச்சத்து & உணவூட்டவியல்) -முழு விபரம்!
ஆரோக்கியமாக நீண்ட ஆயுளுடன் வாழ சமச்சீரான உணவு அவசியம் என்ற விழிப்புணர்வு உலகம் முழுக்க உருவாகியுள்ள சூழலில், நியூட்ரிசியன் மற்றும் டயடெடிக்ஸ் (ஊட்டச்சத்து & உணவூட்டவியல்) படிப்புகளுக்கு வேலை வாய்ப்புகள் பெருகியுள்ளன.வளர்ச்சி, ஆரோக்கியம், இனப்பெருக்கம், சமநிலை ஆகியவற்றுக்கு நாம் உண்ணும் உணவே ஆதாரம். சமச்சீரான அளவில் பல்வேறு சத்துகளைக் கொண்ட உணவைத் தேர்ந்தெடுத்து உண்பதன் மூலம் நோய்களைத் தடுக்க முடியும். இதையொட்டி மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், உணவுத் தொழில் முதல் உணவு ஆய்வு நிறுவனங்கள்வரை ஊட்டச்சத்து மற்றும் உணவூட்டவியல் படித்த நிபுணர்கள் தேவைப்படுகிறார்கள். ஓர் ஊட்டச்சத்து நிபுணர் என்பவர் உணவுக்கு மனித உடல் எப்படி எதிர்வினையாற்றும் என்பதையும் மனித உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்கும் பாகங்களுக்கும் எந்தெந்தச் சத்துகள் தேவை என்பதையும் அறிந்து வைத்திருப்பவர்.
அந்த வகையில் ஆரோகியமான உணவை திட்டமிடுபவர் தான் டயட்டீசியன். எந்த உணவில் எந்த வகையான சத்து அடங்கியுள்ளது. உணவுகளை எப்படி சரிவிகிதத்தில் எடுத்துக்கொள்வது என்பது குறித்த படிப்பதுதான் நியூட்ரிசியன் மற்றும் டயட்டிக்ஸ். "நொறுங்கத் தின்றால் நூறு வயது" என்று ஒரு பழமொழி கேள்விப்பட்டிருப்பீர்கள் இதன் காரணம் தெரியுமா? வாயில் உணவை நன்றாக மென்று சாப்பிடும்போது உணவு முழுக்க உமிழ் நீர் கலக்கிறது. உமிழ் நீர் கலந்த உணவு நன்கு செரிமானமாகும். ஆனால் இன்றைய அவசரகால கட்டத்தில் நிற்பதற்கே நேரம் இல்லை. இதில் எங்கே மென்று சாப்பிடுவது. இதை இப்படித்தான் சாப்பிட வேண்டும் என்று சொல்ல வீட்டில் பெரியவர்களும் கிடையாது. எல்லாம் தனிக்குடும்பாக வாழ ஆரம்பித்தாகிவிட்டது. இந்த குறைகளை களைய வந்த படிப்புதான் நியூட்ரிஷியன் மற்றும் டயட்டிக்ஸ் (Nutrition and Dietetics).தற்போது அதிக வேகமாக வளர்ந்து வரும் துறைகளுள் இதுவும் ஒன்று. இப்படித்தான் சாப்பிட வேண்டும் என்று அறிவுறுத்துவதோடு, எந்த வகையான உணவுகளை எடுத்துக்கொண்டால் நீண்ட நாள் வாழமுடியும் என்று ஆலோசனை வழங்குவதும் இந்த படிப்பை முடித்தவர்கள்தான்.தகவல் தொழில்நுட்பமும் உலகமயமாதலும் நமது உணவுப் பண்பாட்டிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பன்னாட்டு நிறுவனங்கள் விற்கும் உணவுப் பொருட்கள் பொதிபொதியாகக் கிடைக்கும் நிலையில் அவற்றின் ஆரோக்கியம், தரநிர்ணயம் சார்ந்தும், அரசுத் துறைகளில் வேலைகள் ஊட்டச்சத்து, உணவூட்டவியல் நிபுணர்களுக்கான தேவையும் பெருகியுள்ளன. நியூட்டிரிசியன் டயட்டீசியன் தொடர்பான படிப்புகள் இளங்கலை, முதுகலை, டிப்ளமோ மூலம் வழங்கப்படுகின்றன. உணவு, ஊட்டச்சத்து, உணவூட்டவியல் சார்ந்து பட்டய படிப்பு முதல் ஆராய்ச்சி படிப்புகள்வரை இந்தியாவில் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் வழங்கப்படுகின்றன. இந்தத் துறையில் படிக்க நல்ல ஆர்வமிருந்தால் மட்டுமே சிறப்பான எதிர்காலத்தைப் பெற முடியும்.
டயட்டீசியன்களுக்கு உள்ள வேலை வாய்ப்புகள்
விவரம்:
உணவுப் பாதுகாப்பு மேம்பாட்டு விஞ்ஞானி:
உணவுப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்களில் உணவுப் பாதுகாப்பு, ருசி, ஊட்டச்சத்து ஆகியவற்றுடன் கூடிய புதிய உணவுப்பொருட்களைக் கண்டுபிடிப்பதும் ஏற்கெனவே தயாரித்து விற்பனை செய்யும் உணவுப்பொருட்களின் தரத்தை மேம்படுத்தும் பணி இவருடையது. இளங்கலை படித்தவர்கள் இந்தப் பணியில் சேரலாம்.
நியூட்ரிசியனல் தெரபிஸ்ட்:
ஊட்டச்சத்துத் திட்டத்தையும் மனிதர்களின் வாழ்க்கை முறையையும் சேர்ந்து பரிசீலித்து ஒருவர் ஆரோக்கியமாக வாழ்வதற்கான திட்டத்தைத் தருபவரே நியூட்ரிசியனல் தெரபிஸ்ட். சிறப்பு மருத்துவ மனைகள், நட்சத்திர விடுதிகள் ஆகியவற்றில் இவர்கள் பணியாற்றலாம்.
ஃபுட் லேபிளிங் ஸ்பெஷலிஸ்ட்:
உணவுப்பொருட்கள் விற்கப்படும் டப்பாக்களில் ஒட்டப்பட்டுள்ள லேபிள்களில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள், அவற்றின் ஊட்டச்சத்து மதிப்பு ஆகியவற்றை ஆராய்ந்து வெளியிடும் பொறுப்பு இவருடையது. அந்த உணவுப்பொருளால் ஏதாவது ஒவ்வாமை ஏற்படுமா என்பது போன்ற தகவல்களையும் இவரே அந்த லேபிள் வழியே தெரிவிப்பார்.
ஹியூமானிடேரியன் நியூட்ரிசியனிஸ்ட்:
பஞ்சம், வறுமை நிலவும் மூன்றாம் உலக நாடுகள், பேரிடர்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குழந்தைகள், பெண்கள், ஆண்களுக்குத் தேவைப்படும் உணவுகளை அந்தந்தப் பிராந்திய, கலாசார, ஆரோக்கிய நிலைகளுக்கேற்ப முடிவுசெய்வது ஹியூமானிடேரியன் நியூட்ரிசியனிஸ்டின் பணி. ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பெண்கள், குழந்தைகள் அவதிப்பட்டிருந்தால் அவர்களுக்கான உணவை இவர்தான் முடிவு செய்வார்.
படிப்புகள்:
இந்த வகையான படிப்புகள் சான்றிதழ், டிப்ளமோ, டிகிரி என பல்வேறு வகையில் பயிற்றுவிக்கப்படுகின்றன.
டிப்ளமோ படிப்புகள் (Diploma courses):
* டிப்ளமோ இன் நியூட்ரிஷியன் அண்ட் ஹெல்த் எஜிகேஷன்.
* டிப்ளமோ இன் டயட்டிக்ஸ்.
* டிப்ளமோ இன் நியூட்ரிஷியன் மற்றும் டயட்டிக்ஸ்.
* டிப்ளமோ இன் புட் சயின்ஸ் அண்ட் நியூட்ரிஷியன்.
* டிப்ளமோ இன் டயட்டிக்ஸ் அண்ட் கிளினிக்கல் நியூட்ரிஷியன்
* டிப்ளமோ இன் நியூட்ரிஷியன் அண்ட் புட் டெக்னாலஜி.
இந்த வகையான படிப்புகள் 6 மாதம் முதல் 3 வருடம் வரை பயிற்றுவிக்கப்படுகிறது நிறுவனத்தை பொறுத்து கால அளவு மாறுபடும். டிப்ளமோ இன் டயட்டிக்ஸ், ஹெல்த் அண்ட் நியூட்ரிஷியன் போன்ற படிப்புகளில் எடை பராமரிப்பு, உணவு பராமரிப்பு போன்றவைகளை தெரிந்து கொள்ள முடியும்.
பட்டப்படிப்பு (Degree courses):
* பி.எஸ்சி கிளினிக்கல் நியூட்ரிஷியன்.
* பி.எஸ்சி நியூட்ரிஷியன் மற்றும் டயட்டிக்ஸ்.
* பி.எஸ்சி புட் சயின்ஸ் அண்ட் நியூட்ரிஷியன்.
* பி.எஸ்சி அப்ளைடு நியூட்ரிஷியன்.
* பி.எஸ்சி டயட்டீட்டிக்ஸ்.
* பி.எஸ்சி ஹோம் சயின்ஸ்.
முதுநிலைப் பட்டப்படிப்பு (PG Courses):
* கிளினிக்கல் நியூட்ரிஷியன்.
* பிடீயட்ரிக் நியூட்ரிஷியன்.
* பப்ளிக் ஹெல்த் நியூட்ரிஷியன்.
* புட் சயின்ஸ் மற்றும் டெக்னாலஜி.
* ஸ்போர்ட்ஸ் நியூட்ரிஷியன்,டயட்டீட்டிக்ஸ்
* ஜெரண்டாலஜிக்கல் நியூட்ரிஷியன்
* ரெனால் நியூட்ரிஷியன்.
இதற்கான படிப்பை வழங்கும் கல்வி நிறுவனங்களில் சில:
பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி, சென்னை.
சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரி,
சென்னை டாக்டர் அம்பேத்கர் கலைக் கல்லூரி,
சென்னை ஜஸ்டிஸ் பஷீர் அகமது சையத் பெண்கள் கல்லூரி
சென்னை காயிதே மில்லத் பெண்கள் கல்லூரி
மதுரை காமராஜ் பல்கலைக்கழகம், மதுரை.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம்,
மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்,
சேலம் பெரியார் பல்கலைக்கழகம்,
நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் நியூட்ரிசன், ஐதராபாத்
அவினாசிலிங்கம் பல்கலைக்கழகம், கோவை.
எஸ்.என்.டீ.டி., பெண்கள் பல்கலைக்கழகம், மும்பை.
வேலைவாய்ப்பு எப்படி?
* அரசு மருத்துவமனைகள்
* சமூக சுகாதார மையங்கள் (ஐசிடிஎஸ், என்.எச்.ஆர்.எம் )
* அரசு மருத்துவ இல்லங்கள்
* அரசு நியூட்ரிஷியன் கல்வி நிறுவனங்கள்
* தனியார் மருத்துவமனைகள்.
* கார்ப்பரேட் ஹோம்.
* உடற்பயிற்சி நிலையங்கள்.
* உணவு ஆய்வகங்கள்.
* சுற்றுலா நிறுவனங்கள்.
* தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்.
* உணவு பொருட்கள் உற்பத்தி நிறுவனங்கள்.
ஹோட்டல்கள் உள்ளிட்ட இடங்களில் வேலைவாய்ப்புகள் கிடைக்கின்றன. இங்கு மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் நியூட்ரிஷியன் படித்தவர்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலைகள் கொட்டிக் கிடக்கின்றன. நவீன மருத்துவமனைகளிலும் நியூட்ரிஷியன் படிப்பை முடித்தவர்களுக்கான தேவை அதிகமாக உள்ளது.
சம்பளம்:
ஆரம்பகட்டத்தில் ரூ. 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை சம்பாதிக்க முடியும். அனுபவங்களை பொறுத்து இதன் மடங்கு அதிகரிக்கும். அரசு வேலையை பொறுத்தமட்டில் அரசு ஊதிய விகிதங்களை பொறுத்து சம்பளம் அமையும்.