காஷ்மீரில் எதுவுமே மாறவில்லை!
கஷ்மீரில் ஜூன் 9 துவங்கி இதுவரை நான்கு வெவ்வேறு போராளித் தாக்குதல்கள் நடந்திருக்கின்றன. புனித யாத்திரைக்கு சென்ற 9 பேர், ஒரு CRPF வீரர், இரண்டு போராளிகள் இந்தத் தாக்குதல்களில் கொலையுண்டிருக்கிறார்கள். இது குறித்து ஊடகங்களுடன் பேசுகையில் கஷ்மீரின் டிஜிபி ஆர். ஆர். ஸ்வைன் 'இந்தத் தாக்குதல்கள் எல்லை தாண்டிய சக்திகளால் ஊக்குவிக்கப்படுகின்றன. அவர்கள் அங்கிருந்து ஒரு போரை நடத்துகிறார்கள். அதை நாம் ஏற்றுக் கொண்டுதான் அதற்கான திட்டமிடல்களை முன்னெடுக்க வேண்டும்,' என்று கூறி இருக்கிறார்.
எனக்கு ஒரு விஷயம் புரியவில்லை. கஷ்மீரில் நடக்கும் போராளி வன்முறைகள் பற்பல தசாப்தங்களாக பாகிஸ்தான் மூலம்தான் ஊக்குவிக்கப்பட்டு வந்திருக்கிறது. போராளி இயக்கங்களுக்கு நிதி, ஆயுதம், தொலைத் தொடர்பு உதவிகள் எல்லாமே வழங்கி வருவது அவர்கள்தான். இந்தியாவில் ஐந்து வயது சிறுவனுக்குக் கூட இந்த விஷயம் தெரியும். இதை ஏன் என்னமோ புதிதாக கண்டுபிடித்தது போல சொல்கிறார். காரணம் இருக்கிறது. கஷ்மீர் பள்ளத்தாக்கு அமைதிப் பூங்காவாக மாறி விட்டிருக்கிறது என்பது மத்திய அரசின் தொடர் பிரச்சாரம். அங்கே வசிக்கும் மக்கள் எல்லாரும் இப்போது காலை எழுந்தவுடன் தொழுகைக்கு பதில் 'வந்தே மாதரம்' பாட்டுப் பாடித்தான் தங்கள் தின வாழ்வைத் துவக்குகிறார்கள். அங்கே இன்ஃபோசிஸ் கிளை துவங்கப் போகிறது. மைக்ரோசாஃப்ட் கிளை துவங்கப் போகிறது. அங்கே ராஜமவுளி ஷூட்டிங் நடத்தப் போகிறார்... என்றெல்லாம் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வந்தவர்கள் இவர்கள்.
அங்கே இன்னமும் போராளிக் குழுக்கள் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கின்றன; அவர்கள் தொடர் தாக்குதலில் ஈடுபடுகிறார்கள், என்பது இவர்களின் இந்தப் பிரச்சார பலூனில் ஓட்டையை போடுகிறது. அதற்கு பதிலாக இவர்கள் சொல்வது 'லோக்கலாக யாரும் இவற்றில் ஈடுபடுவதில்லை. எல்லாருமே எல்லை தாண்டி வருபவர்கள்தான்,' என்று சமாளிக்க வேண்டி இருக்கிறது.
கஷ்மீரில் செக்சன் 370 நீக்கப்பட்டு ஒரு வாரம் கழித்து நான் எழுதிய பதிவில் பின்வரும் வரிகள் இருந்தன:
'கஷ்மீரின் முக்கிய பிரச்சினை ‘எல்லை தாண்டிய தீவிரவாதம்’ என்று நாம் பொதுவாக அழைப்பது. பாகிஸ்தானின் ஆதரவு. அதுதான் கஷ்மீரில் அமைதி திரும்ப விடாமல் தொடர்ந்து கொதிநிலையில் வைத்திருக்க உதவுகிறது. அங்கே தேவைப்படும் ஆட்கள், நிதி, பயிற்சி மற்றும் ஆயுதங்களை தொடர்ந்து சப்ளை செய்து கொடுக்கிறது.
...
அதன் முக்கிய காரணம் கஷ்மீர் என்பது இன்னமும் முடிவுக்கு வராத, பிரிவினையின் ஒரு அத்தியாயம். Partition’s Unfinished Agenda. சொல்லப்போனால் Pakistan என்ற பெயரே ஒரிஜினலாக Pakstan என்றுதான் வைக்கப்பட்டது: ‘P’unjab, ‘A’fghan, ‘K’ashmir, ‘S’indh, Baluchi’stan’ என்பதன் சுருக்கமே பாகிஸ்தான். எனவே அவர்களைப்பொருத்தவரை கஷ்மீர் இணையும் வரை பாகிஸ்தான் என்கிற தேசம் முழுமையடைவே அடையாது. அதுதான் அவர்களின் உணர்வுப் பெருக்குக்கு முக்கிய காரணம்.'
எனவே, நாம் புரிந்து கொள்ள வேண்டிய மிக மிக முக்கியமான விஷயம்: கஷ்மீருக்கான தீர்வு கஷ்மீரிடம் இல்லை. பாகிஸ்தானிடம்தான் இருக்கிறது. கஷ்மீர் பற்றிய எந்தத் தீர்வும் பாகிஸ்தானை இணைத்து முயற்சி செய்யாமல் தீரவே தீராது. பள்ளத்தாக்கில் எத்தனை பாலங்கள் கட்டினாலும், சாலைகள் அமைத்தாலும் அது தீராது. அப்படி தீர்த்து விடலாம் என்று யோசிப்பதே ஒரு பகல் கனவு.
அந்தக் கனவைத்தான் 2019 ஆகஸ்ட் 5ம் தேதி பாஜக அரசு கண்டது. அதை தனது பக்தர்களும் காண வைத்தது. கஷ்மீரின் போராளிக் குழுக்கள் அந்தக் கனவை அடிக்கடி கலைத்து வருகிறார்கள். விளைவு, காஷ்மீரில் எதுவுமே மாறவில்லை. ராணுவக் குவிப்பு குறையவில்லை. மாநில அந்தஸ்து திரும்பவில்லை. மூடிய சட்டசபை திறக்கவில்லை. எகிறிக் கொண்டிருக்கும் ராணுவச் செலவுகள் இறங்கவில்லை. ராணுவக் கொடுங்கோல் சட்டம் ரத்தாகவில்லை. இன்ஃபோசிஸ் இன்னமும் கிளை திறக்கவில்லை.
அந்த கனவைக் கண்ட சௌக்கிதாருமே கூட கஷ்மீர் குறித்த தனது உறுதிமொழிகளை மறந்து போய் இத்தாலியில் சுற்றிக் கொண்டிருக்கிறார்.