வட இந்தியா மட்டுமின்றி சென்னையிலும் கோடை வெப்பம் வதைத்கிறது!
இந்திய சமவெளி பகுதிகள் மட்டுமின்றி, ஹிமாச்சலப் பிரதேசத்தின் மலை பகுதிகள் கூட கடுமையான வெப்ப நிலையை எதிர்கொண்டன. சிம்லாவில் நேற்று 30.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. இது இந்த சீசனின் அப்பிரதேசத்தின் அதிகபட்ச வெப்ப நிலையாகும்.டெல்லியில் குறைந்தபட்சம் 8 இடங்களில் அதிக வெப்பநிலை (46 டிகிரி செல்சியஸுக்கு மேல்) பதிவானது. தொடர்ந்து 3 ஆண்டுகளாக கடுமையான வெப்ப அலைகள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக சுகாதாரம், நீர்வளம், விவசாயம், மின் உற்பத்தி மற்றும் சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு துறைகள் பாதிப்பை சந்திக்கின்றன.
நம் நாட்டிலேயே அதிகபட்சமாக ராஜஸ்தான் மாநிலம் பலோடியில் 2வது நாளாக 50 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவாகியது. கடந்த 2019ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் நாட்டில் பதிவான வெப்பத்தில் இதுவே அதிகமாகும். அதாவது 5 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வெயில் சுட்டெரிக்கிறது. ராஜஸ்தானில் வெப்ப அலை தாக்கத்தால் பாதிப்புகள் ஏற்பட்டு கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 33 பேர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் ராஜஸ்தான், ஹரியானா மாநிலங்களுக்கு அதீத வெயிலுக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 4 நாட்களுக்கு ராஜஸ்தானில் இதே போன்று அதீத வெப்பநிலை தொடரும் என்றும் பின்னர் படிப்படியாக குறையும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்திற்கு 2 நாட்கள் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதே போல் டெல்லி, சண்டிகர், உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத், சட்டிஸ்கர், மராட்டியம் ஆகிய மாநிலங்களில் இன்னும் சில நாட்களுக்கு வெப்பம் அதிகமாகவே இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே தமிழ்நாட்டில் மீண்டும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் சுட்டெரிக்கும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் வெயில் 108 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி கொளுத்தும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இன்று முதல் 108° F வெயில் கொளுத்தும் என்றும் மற்ற மாவட்டங்களில் வெயில் சற்று குறைந்து காணப்படும் என்றும் தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் கணித்துள்ளார்.