இனி ஃபோன் பேச சிம் கார்ட் வேண்டாம்:-BSNL-லின் முதல் கட்ட சோதனை வெற்றி!
இன்று நீங்கள் சிம் கார்டு இல்லாமல் தொலைபேசி அழைப்பை மேற்கொள்ள ஏராளமான வழிகள் உள்ளன— வாய்ஸ் ஓவர் இன்டர்நெட் (VOIP) புரோட்டோகால் சேவைகள் முதல் பாரம்பரிய செல் கோபுரங்களுக்குப் பதிலாக Wi-Fi நெட்வொர்க்குகளைப் பயன்படுத்தும் பயன்பாட்டு அடிப்படையிலான தீர்வுகள் வரை நிறைய வழிகள் வந்து விட்டது.தற்போது வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் eSIM ஆதரவுடன் பல போன்கள் இருந்தாலும், இன்னும் சிம் கார்டுகளை மாற்றும் அளவுக்கு தொழில்நுட்பம் கிடைக்கவில்லை. இரண்டு சிம்களை ஒரே நேரத்தில் பயன்படுத்துவதில் eSIMகளில் ஒரு முக்கிய தடையாக உள்ளது. ஆனாலும் தொழில்நுட்ப வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில் BSNL ஒரு புதுமையான முயற்சியை கையாண்டு அதில் வெற்றி கண்டுள்ளது. டைரக்ட் டூ டிவைஸ் (Direct-to-Device - D2D) என்ற தொழில்நுட்ப சோதனையை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இந்த தொழில்நுட்பம் அறிமுகமானால் அதன் பிறகு வாடிக்கையாளர்கள் சிம் கார்டு அல்லது பாரம்பரிய நெட்வொர்க் இன்றி ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகளை மேற்கொள்ள முடியும். கூடுதலாக தனிமைப்படுத்தப்பட்ட இடங்கள் மற்றும் நெட்வொர்க் இல்லாத இடங்களிலும் இந்த தொழில்நுட்பத்தின் மூலம் தடையின்றி கால்களை பேச முடியும் என்று கூறப்படுகிறது.
D2D சேவை என்றால் என்ன?:
இந்திய சாட்டிலைட் நிறுவனமான வியாசட்டுடன் இணைந்து, BSNL தனது டைரக்ட்-டு-டிவைஸ் (D2D) தொழில்நுட்ப சோதனையை முடித்துள்ளது. D2D எனது ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட்வாட்ச்கள் மற்றும் கார்களை நேரடியாக சாட்டிலைட் நெட்வொர்க்குடன் இணைக்க அனுமதிக்கும் ஒரு புதிய தொழில்நுட்பமாகும். இதனால் இடம் எதுவாக இருந்தாலும் சாதனங்களுக்கு இடையே நம்பகமான இணைப்பை வழங்க முடியும். D2D தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டால் பயனர்களுக்கு நம்பகமான தகவல் தொடர்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நெட்வொர்க் இல்லாத பகுதிகளிலும் மக்கள் சிம் கார்டு இன்றி பிறரைத் தொடர்பு கொள்ள முடியும்.
டைரக்ட் டு டிவைஸ் சேவையின் செயற்கைக்கோள் தொடர்பு, எந்தவித கேபிள் இணைப்புகள் மற்றும் மொபைல் டவர்கள் இல்லாமல் சாதனங்களை நேரடியாக இணைக்க அனுமதிக்கிறது. சாட்டிலைட் போன்களை போலவே, இந்தப் புதிய தொழில்நுட்பம் Ios மற்றும் ஆண்ட்ராய்டால் இயங்கும் செல்போன்களில் பயன்படுத்தலாம் மற்றும் ஸ்மார்ட்வாட்ச்கள், ஸ்மார்ட்போன்கள் மற்றும் பிற ஸ்மார்ட் சாதனங்கள் என எந்த டிவைஸை வேண்டுமானாலும் எளிதில் தொடர்பு கொள்ள முடியும் என்று கூறப்படுகிறது.
D2D தொழில்நுட்பத்தின் வெற்றிகர சோதனை:
BSNL நிறுவனம் D2D தொழில்நுட்பத்தை இந்தியா மொபைல் காங்கிரஸின் போது சோதித்தது. முதல் படியாக, 36,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு செயற்கைக்கோளிலிருந்து உரையாடல் சோதனை செய்யப்பட்டது. D2D தொழில்நுட்பம் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டதால், BSNL ஏர்டெல், ஜியோ மற்றும் வோடபோன்-ஐடியா போன்ற மற்ற முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்குள் கடுமையான போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்காலத்தில், பேரழிவுகள் அல்லது இயற்கை பேரழிவுகள் போன்ற இக்கட்டான சூழ்நிலைகளில் D2D சேவைகள் உயிர்காக்கும் நம்பிக்கையை ஏற்படுத்துகின்றன. இந்த தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டால் காடுகளில் சிக்கிக் கொண்டாலோ அல்லது நெட்வொர்க் இல்லாத பகுதியில் தெரியாமல் மாட்டிக் கொண்டாலோ ஒருவரை காப்பதற்கு கண்டிப்பாக உதவியாக இருக்கும் என்பதே மகிழ்சியான செய்திதானே?