திங்கட்கிழமைகளில் அயர்ன் செய்யப்பட்ட ஆடை வேண்டாம்!- டெல்லியில் புது அலை!
கடந்த 173 ஆண்டு வானிலை வரலாற்றில் மிகவும் வெப்பமான ஆண்டாக 2023 பதிவாகி இருக்கிறது. அது மட்டுமல்லாமல் தொழில் புரட்சி கால சராசரி வெப்பநிலையைவிடக் கூடுதலாக 1.5 டிகிரி செல்சியஸ் வெப்பம் மட்டுமே உயரலாம் என்கிற எல்லையை உலகம் கிட்டத்தட்டத் தொட்டு விட்டது. இனிமேல் காலநிலை மாற்றம் காரணமாக நிகழும் தீவிர வானிலை நிகழ்வுகள் கணிக்க முடியாதவையாகவும் கட்டுப்படுத்த முடியாதவையாகவும் ஆகிவிடக்கூடும் என்று ஆய்வு முடிவுகள் தெரிவித்த நிலையில் காலநிலை மாற்றத்துக்கு எதிரான போரில் சிறு முயற்சியாக வாரந்தோறும் திங்கட்கிழமை ஒரு நாள் தங்கள் ஆடைகளை அயர்ன் செய்யாது அணியும் போக்கு தலைநகர் டெல்லியில் புதிய அலையாய் பரவி வருகிறது.
1942 இல் புகழ்பெற்ற விஞ்ஞானி சாந்தி ஸ்வரூப் பட்நாகர் என்பவரால் CSIR நிறுவப்பட்டது, இது நாட்டில் தொழில் மற்றும் அறிவியல் நிறுவனங்களை ஒன்றிணைந்து செயல்படக் கொண்டுவருகிறது. சில CSIR ஆய்வகங்கள் இந்தியாவைப் போலவே பழமையானவை மற்றும் குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்புகள் மற்றும் அறிவியல் பங்களிப்புகளைச் செய்துள்ளன, அவற்றில் பிரபலமானவை நாட்டின் தேர்தல் செயல்பாட்டில் பயன்படுத்தப்படும் அழியாத மை ஆகும். இந்த கவுன்சில் ஊழியர்கள் சலவை செய்யப்பட்ட ஆடைகளை அணிவதைத் தவிர்க்க வலியுறுத்தி, அதன் தலைமையகத்தால் சுற்றறிக்கை அல்லது அதிகாரப்பூர்வ உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை என்ற போதும், பணியாளர்கள் மத்தியிலான தன்னிச்சையான முயற்சி வெற்றி கண்டிருக்கிறது. ஏப்ரல் 23 அன்று புவி தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு ஐஐடி-பம்பாய் உயர்கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் சேத்தன் சோலங்கி என்பவர், டெல்லியிலுள்ள சிஎஸ்ஐஆர் தலைமையகத்தில் காலநிலை கடிகாரத்தை நிறுவிய பிறகு இந்த விழிப்புணர்வு அங்கே மேலும் அதிகரித்துள்ளது.
அதாவது விரும்பும் இலக்கை அடைய எவ்வளவு நீண்ட தொலைவை கடந்தாக வேண்டுமெனிலும், அதனை நோக்கிய பயணம் என்பது தொடர்ச்சியாக சிறு அடிகளை முன்வைப்பதன் மூலமே சாத்தியமாகும். இந்த நீண்ட பயணத்தில் முன்னோக்கி வைக்கப்படும் சிறு அடியும் முக்கியமானது. பூமியின் அழிவுக்கு அச்சாரமிடும் காலநிலை மாற்றம் என்னும் அச்சுறுத்தலை எதிர்கொள்வதிலும், இப்படியான சிறு நகர்வுகளும் முக்கியத்துவம் வாய்ந்தவை.
எனர்ஜி ஸ்வராஜ் இயக்கத்தின் நிறுவனர் சேத்தன் சிங் சோலங்கி கூறுகையில், ”காலநிலை மாற்றத்திற்கான எளிய தீர்வுகளில் ஒன்று 'எதையவது செய்யாது' இருப்பதன் மூலமும் சாத்தியமாகும். எங்களது ’ரிங்கிள்ஸ் அச்சே ஹை' (WAH-Wrinkles Acche Hai) பிரச்சாரம் தீவிரமடைந்து வருகிறது. இதில், திங்கள்கிழமை அயர்ன் செய்யாத ஆடைகளை அணியுமாறு கேட்டுக் கொள்வதில் தொடங்கியிருக்கிறோம். அடுத்தக்கட்டமாக பலவற்றிலும் அவற்றைத் தொடர உத்தேசித்திருக்கிறோம்' என்றார். ஒரு ஜோடி ஆடையை அயர்ன் செய்யாமல் அணிவதன் மூலம், 200 கிராம் கார்பன் வெளியேற்றத்தை சேமிக்க முடியுமாம்.
"இதையே மில்லியன் கணக்கானவர்கள் செய்யும்போது, மிகப்பெரிய கார்பன் உமிழ்வு சேமிப்பு சாத்தியமாகிறது. தற்போது ஒவ்வொரு திங்கட்கிழமையும் 6,25,000 பேர் இந்த விழிப்புணர்வில் இணைகின்றனர். அவ்வாறு திங்கள்தோறும் கிட்டத்தட்ட 1,25,000 கிலோ கார்பன் உமிழ்வைச் சேமிக்கிறோம். இந்த ஆண்டு இறுதிக்குள் 1 கோடிக்கும் அதிகமானோர் இந்த திங்கள் பிரச்சாரத்தில் சேர வேண்டும் என்று இலக்கு வைத்திருக்கிறோம்'' என்றார்.