பீகார்: முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் நிதிஷ்குமார்!
பீகார் ஐக்கிய ஜனதா கட்சியின் தலைவரும், முதல்வருமான நிதிஷ் குமார் பாஜகவுடன் இணைந்து இன்று மாலையே தனது புதிய அமைச்சரவையை அமைக்க உள்ளதாக நேற்றிலிருந்து செய்தி வெளியான நிலையில், அம்மாநில கவர்னர் ராஜேந்திர அர்லேகரை இன்று சந்தித்து, தனது ராஜினாமா கடிதத்ததை அளித்து விட்டார். அவரது ராஜினாமாவை அடுத்து, மகாகூட்டணி அரசு அதிகாரப்பூர்வமாக கலைந்தது.பின்னர் கவர்னர் மாளிகைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நான் எனது பதவியை ராஜினாமா செய்துவிட்டேன். அமைச்சரவையை கலைக்கவும் ஆளுநரிடம் பரிந்துரைத்துள்ளேன்" என தெரிவித்தார்.
பீகாரில் கடந்த 2020-ம் ஆண்டு நடந்த சட்டபேரவைதேர்தலில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று நிதிஷ் குமார் முதல்வரானார். அதன் பிறகு பாஜகவுடன் அதிருப்தி ஏற்பட்டதால், 2022-ல் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகினார். ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அடங்கிய மெகா கூட்டணியில் இணைந்து பிஹாரில் புதிய ஆட்சியை அமைத்தார். வரும் மக்களவை தேர்தலில், எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து, பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை வீழ்த்தி தேசிய அரசியலில் முக்கிய பங்காற்ற நிதிஷ் குமார் விரும்பினார். எதிர்க்கட்சி தலைவர்கள் பலரது முயற்சியில் இண்டியா கூட்டணி உருவானது. இந்த கூட்டணி மக்களவை தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்கான வியூகங்கள் குறித்து பல மாநிலங்களில் கூட்டங்களை நடத்தியது. சமீபத்தில் டெல்லியில் நடந்த கூட்டத்தில் இண்டியா கூட்டணி ஒருங்கிணைப்பாளராக நிதிஷ் குமார் பெயரை மார்க்சிஸ்ட் தலைவர் சீதாராம் யெச்சூரி முன்மொழிந்தார்.
இதற்கு லாலு மற்றும் சரத் பவார் உள்ளிட்ட தலைவர்கள் ஒப்புக் கொண்ட நிலையில், திடீரென குறுக்கிட்ட ராகுல் காந்தி, இது தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தாவை கேட்டு முடிவு செய்து கொள்ளலாம் என்றார். இதனால் கோபம் அடைந்த நிதிஷ் குமார், இண்டியா கூட்டணியில் தனக்கு எந்த பதவியும் வேண்டாம் என்றார். தொடர்ந்து, இண்டியா கூட்டணி தலைவர்கள், மம்தா, அர்விந்த் கேஜ்ரிவால், லாலு ஆகிய தலைவர்களை நிதிஷ் குமார் சமீபத்தில் விமர்சித்தார். இந்நிலையில், பிஹாரில் 2 முறை முதல்வராக இருந்த கர்ப்பூரி தாக்குருக்கு பாரத ரத்னா விருதை மத்திய அரசு அறிவித்தது. இவர் பிஹாரில் மக்கள் தலைவர் என அனைத்து தரப்பு மக்களாலும் அழைக்கப்பட்டவர்.
பாஜகவின் அடுத்தடுத்த செயல்பாடுகள் எல்லாம் மக்களின் வாக்கு வங்கியை கவரும் வகையில் இருப்பதால், இண்டியா கூட்டணியில் இருந்து விலகி மீண்டும் பாஜக கூட்டணியில் இணைவதுதான் ஐக்கிய ஜனதா தள கட்சியின் எதிர்காலத்துக்கு நல்லது என அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் சிலர் நிதிஷ் குமாரிடம் வலியுறுத்தினர். இதனால் பாஜக ஆதரவுடன், பிஹாரில் புதிய ஆட்சியை அமைக்க நிதிஷ் குமார் முடிவு செய்தார்.. இதனிடையே, பீகாரில் பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நேற்று நடந்தது. அதில் நிதிஷ் குமாருக்கு ஆதரவு தெரிவிக்கும் கடிதங்கள் பாஜக எம்எல்ஏக்களிடம் இருந்து பெறப்பட்டு முதல்வர் நிதிஷ் குமாருக்கு அனுப்பப்பட்டது.
இதை அடுத்து நிதிஷ் குமார் தன் பதவியை ராஜினாமா செய்த பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,"நான் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்து இந்த அரசாங்கத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளேன். நான் எல்லாரிடம் இருந்தும் ஆலோசனைகளைப் பெற்றேன். புதிய கூட்டணிக்காக முந்தைய கூட்டணியில் இருந்து விலகி உள்ளேன். ஆனால் நிலைமை இன்னும் சரியாகவில்லை. அதனால் ராஜினாமா செய்துள்ளேன்" என்றார். மேலும் அடுத்தது என்ன என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர்,"இனி கட்சிகள் ஒன்றிணைந்து ஆலோசித்து ஒரு முடிவை எட்டுவோம்" என்றார். மேலும் INDIA கூட்டணியை சாடியும் அவர் கருத்து தெரிவித்தார். "நான் ஒரு கூட்டணியை (INDIA) உருவாக்கினேன், ஆனால் யாரும் எந்த முன்னெடுப்பையும் அதற்காக செய்யவில்லை" என நிதிஷ் குமார் குற்றஞ்சாட்டினார்.
இந்நிலையில் பாஜக ஆதரவுடன் இதே நிதிஷ் குமார் இன்று மாலையே மீண்டும் மாநில முதல்வராக பதவியேற்கிறார் என்றும் துணை முதலமைச்சராக சிராக் பஸ்வான் பதவியேற்பார் எனவும் தகவல் வெளியகியுள்ளது.