புதிய வருமான வரி மசோதா அறிமுகம் செய்தார் நிர்மலா சீத்தாராமன்!
நம் நாட்டில் தற்போது வரை 1961 ஆம் ஆண்டில் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வருமான வரிச் சட்டம் நடைமுறையில் உள்ளது. மொத்தம் 298 பிரிவுகளைக் கொண்டிருந்த இந்த சட்டத்தில் கடந்த 60 ஆண்டுகளில் பலமுறை திருத்தம் செய்யப்பட்டது. ஆனாலும் இது வரி செலுத்துவோரால் சிக்கலானதாகவும் புரிந்துகொள்ள கடினமாகவும் இருப்பதாகவும் கூறப்பட்டது.இந்த நிலையில் 1961 ஆம் ஆண்டின் தற்போதைய வருமான வரிச் சட்டத்தை எளிமைப்படுத்தும் முயற்சியில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதிய வருமான வரி மசோதாவை இன்று மதியம் 2 மணியளவில் அறிமுகப்படுத்தினார். அது கூச்சல் குழப்பம் ஏற்படுத்தியதை அடுத்து சபாநாயகர் ஓம் பிர்லா அதனை மக்களவையின் தேர்வுக் குழுவிற்கு பரிந்துரைக்குமாறு வலியுறுத்தினார்.
முன்னதாக, இன்று காலை 11 மணிக்கு மக்களவை கூடியதும், வக்பு திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டதை அடுத்து அவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் அவை கூடியதும், எதிர்க்கட்சி எம்பிக்கள் வக்பு திருத்த மசோதாவுக்கு எதிராக மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். குரல் வாக்கெடுப்பின் மூலம் சட்ட மசோதாவை தாக்கல் செய்யும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர், கடும் அமளிக்கு இடையே, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், புதிய வருமான வரி மசோதாவை அறிமுகம் செய்தார்.
புதிய வருமான வரி மசோதாவின் பல்வேறு அம்சங்கள் குறித்து கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்களது அதிருப்திக்குரிய அம்சங்கள் குறித்தும் பகிர்ந்தனர். இதன் தொடர்ச்சியாக, இந்த மசோதாவை மக்களவைத் தேர்வுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்புமாறு சபாநாயகரை நிர்மலா சீதாராமன் கேட்டுக்கொண்டார். அந்தக் குழு, புதிய வரி திட்டங்களை ஆய்வு செய்து, தேவைப்பட்டால் மாற்றங்களைச் செய்யும். பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் பாதியின் முதல் நாளான மார்ச் 10 அன்று அக்குழு தனது அறிக்கையை சமர்ப்பிக்கும். அதன்பின் இந்த மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்படும்.
புதிய வருமான வரி மசோதா 622 பக்கங்களுக்குள் 536 பிரிவுகள், 23 அத்தியாயங்கள் மற்றும் 16 அட்டவணைகளைக் கொண்டுள்ளது. இதில் வரி தொடர்பான நீண்ட விளக்கங்கள் மற்றும் சட்டக் குறிப்புகள் உள்ளன. வரி செலுத்துவோரின் உரிமைகள் மற்றும் கடமைகளை தெளிவாக கோடிட்டுக் காட்டும் ஒரு புதிய பகுதியைக் கொண்டுள்ளது.மேலும், இதில் எளிமையான மற்றும் தெளிவான சொற்களைப் பயன்படுத்துகிறது மற்றும் புரிந்து கொள்வதற்கு சிக்கலான சட்ட விதிமுறைகள் நீக்கப்பட்டுள்ளன. ‘மதிப்பீட்டு ஆண்டு’ என்ற சொல்லுக்குப் பதிலாக ‘வரி ஆண்டு’ என்ற சொல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.