For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

கணவனுக்கும் மனைவிக்கும் தெரிந்தே நிகழும் முரண் அரசியல்!

09:03 AM Apr 18, 2024 IST | admin
கணவனுக்கும் மனைவிக்கும் தெரிந்தே நிகழும் முரண் அரசியல்
Advertisement

ரகலா பிரபாகர் இவ்வளவு தீவிரமாக மோடியை எதிர்ப்பதும் அதற்கு சம்மந்தமே இல்லாமல் அவர் மனைவி மத்திய அமைச்சராக இருப்பதும் சாதாரண விசயம் அல்ல. அவர்கள் ஒரு உத்தமமான தம்பதியாக அல்லாத பட்சத்தில் கணவர் இவ்வளவு கடுமையாக அரசைத் தாக்கிய பின்னர் மனைவியால் அவரது முகத்தைப் பார்த்துப் பேசக் கூட இயலாது. அதையும் மீறி அவர்கள் கண்ணியத்துடன் பொதுவெளியில் இப்பிரச்சினையை கையாள்வதாக நான் ஆரம்பத்தில் நினைத்து சிலாகித்தேன். ஆனால் இப்போதெல்லாம் நான் யாரையும் சுலபத்தில் நம்புவதில்லை. அரசியலில் நேரடியாகவோ மறைமுகமாகவோ இருப்பவர்களின் எல்லா பேட்டிகள், பொதுவெளி கருத்துக்களுக்கும் பின்னால் ஒரு அஜெண்டா இருக்கும். பிரபாகருக்கும் நிச்சயமாக இருந்தாக வேண்டும்? அது என்ன என்பது இப்போதைக்கு தெளிவாக இல்லை.

Advertisement

பரகலா பிரபாகரின் பெற்றோர் காங்கிரஸை சேர்ந்தவர்கள். சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்கள். பிரபாகர் இளமையில் லண்டன் ஸ்கூல் ஆப் எக்கனனாமிக்ஸிலும் ஜெ.என்.யுவிலும் படித்தார், அங்கே நிர்மலா சீத்தாராமனை சந்திக்க் இருவரும் காதலித்து மணந்தார்கள் என்றும் அறிவோம். ஆனால் இவை புறவயமான தகவல்களே. ஆனால் சுவாரஸ்யமான தகவல் அவர் 2000இன் துவக்கத்தில் பா.ஜ.கவின் ஆந்திர பிரதேச செய்தித் தொடர்பாளராக இருந்தவர் என்பது. (பின்னரே பிரஜா ராஜ்ஜியம் கட்சிக்கு போகிறார். ) ஆர்.எஸ்.எஸ், பஜ்ரங் தள்ளின், மோடியின் அரசியலை, சித்தாந்தத்தை இவ்வளவு கடுமையாக விமர்சிக்கும் ஒருவர் எப்படி ஒன்றுமே அறியாமலா அக்கட்சியின் செய்தித் தொடர்பாளராக இருந்தார்? அதுவும் காங்கிரஸ் கட்சி பின்னணி கொண்டவர் எனும் போது? அதுவும் பாபர் மசூதி இடிப்பு, இஸ்லாமியருக்கு எதிரான கலவரங்கள் நடந்து முடிந்து சூடு ஆறாத காலம் அது எனும் போது? மதவாதத்திற்கு எதிராக புத்தகம் ஏழுதும் ஒருவருக்கு அப்போது நடந்தவை எல்லாம் கொடூரங்களாக,நாட்டின் மத சார்பின்மையை ஒழித்து இந்தியாவை சில நூற்றாண்டுகள் பின்னுக்கு நகர்த்தியதாகத் தோன்றவில்லையா?

Advertisement

அடுத்து 2018இல் சந்திரபாபு நாயுடுவுக்கும் பாஜகவுக்குமான உறவு கசக்கும் வரை பிரபாகர் முதல்வரின் ஆலோசகர் எனும் தன் பதவியை பாஜக கூட்டணி அரசில் தக்க வைத்திருந்தார். நாயுடு மோடியைத் தாக்கிப் பேசியதால் மனம் புண்பட்டே அவர் பதவியை ராஜினாமா பண்ணினார். அதுவரை ஒன்றிய அரசுக்கு நெருக்கமாகவே இருந்தார். கடந்த 6 ஆண்டுகளாகத் தான் ஜனநாயக காவலராக, முற்போக்கு அரசியல் சிந்தனையாளராக அவருக்கு புத்துயிர்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனாலே திடீர் புனிதர்கள் சந்தேகத்துக்கு உரியவர்கள். கரன் தாப்பர் ஒரு கேள்வியின் போது நிர்மலா சீத்தாராமனின் பெயரைக் குறிப்பிட்டு "நான் இவ்வளவு நேரமும் தெளிவாகவே அவர் பெயரைக் குறிப்பிடாமல் இருக்கிறேன்" என்று சொல்லி விட்டு நகர்ந்த போது பிரபாகரின் முகத்தில் ஒரு பதற்றம் தெரிந்தது. அதன் பிறகு சில நிமிடங்கள் அவர் மோடி மீதான விமர்சனத்தைக் குறைத்துக் கொண்டு பூசி மெழுகினார். அவர் இயல்பு நிலைக்கு வர சற்று நேரமெடுத்தது. இதை தன் விமர்சனத்தை தனிப்பட்ட உறவு சார்ந்ததாக மாற்றக் கூடாது எனும் கண்ணியமாகப் பார்க்கலாம். அல்லது ஏதோ ஒரு விதத்தில் நிர்மலா சீத்தாராமனின் தூண்டுதலினாலே பிரபாகர் அவ்வப்போது வந்து கடுமையாக ஒன்றிய அரசை விமர்சிக்கிறார் என்றும் பார்க்கலாம்.

ஒருவர் அமைச்சரவையில் இருப்பதாலே அவர் முழு திருப்தியுடன் அதிகாரத்துடன் இருக்கிறார் எனப் பொருளில்லை. சில நேரங்களில் கட்சிக்குள் இருந்தபடி உட்கட்சி கோபங்களை இப்படி வெளியே ஆளை வைத்து தீர்த்துக் கொள்வார்கள். கேட்டால் அவர் வேறு கட்சி, நான் வேறு கட்சி என சொல்லிக் கொள்ளலாம். தமிழக அரசியலில் கூட இப்படி சொந்த கட்சிக்கு வெளியே இருந்து - கருத்தாளர்கள், காசுக்கு கூவும் யுடியூபர்கள், ஓய்வுபெற்ற ஊடகக்காரர்களை வைத்து - கட்சித் தலைமையைத் தாக்க வைக்கும் தலைவர்களைப் பார்த்திருக்கிறோம். கட்சிக்குள் அழுத்தத்தை உண்டு பண்ண, சில அணிகளை பலவீனமாக்க இந்த உத்தியை பயன்படுத்துவார்கள். அல்லது மோடியை மூன்றாவது முறையாக பிரதமர் ஆவதை விரும்பாத பாஜக குழுவினரில் சிலருக்காக இவர் பேசி எதிர்காலத்தில் அவர்களுடைய முதுகிலேறி பயணிக்க நினைக்கலாம். அல்லது நிர்மலா சீத்தாராமனுக்கே அந்நோக்கம் இருக்கலாம். பிரபாகர் எப்போதுமே ஆர்.எஸ்.எஸ் பணியாளர்களைப் போற்றுவதை கவனிக்க வேண்டும். அல்லது கடந்த சில ஆண்டுகளாகவே அவருக்கு வேறேதோ நோக்கம் இருக்கலாம். அல்லது இது வெறும் ஊகமாக தவறாகவும் கூட இருக்கலாம்.

ஆனால் ஒன்று, மேற்தட்டினரைப் பொறுத்தவரையில் அவர்கள் அரசியல் பேசினால் ஏதாவது ஒரு ஆதாயம், அதற்கான அஜெண்டா, தொலைநோக்குத் திட்டம் இருந்தே தீரும். வெற்று லட்சியவாதத்துக்காக காலத்தையும் தொண்டையையும் வீணடிப்பவர்கள் மத்திய வர்க்க தொண்டர்கள் மட்டுமே. பின்னால் நடப்பது தெரியாத வரை முன்னால் நடப்பது அழகாகத் தான் தெரியும். அவர் சொல்வதெல்லாம் சரியே, ஆனால் "அவர்" ஏன் பேசுகிறார் என்பது பிரச்சினையாக உள்ளது. நீங்கள் ஒன்றும் அந்தளவுக்கு நல்லவர்கள் இல்லையே பாஸ்?

கணவனுக்கும் மனைவிக்கும் தெரிந்தே தான் இந்த முரண் அரசியல் நிகழ்கிறது.

அபிலாஷ் சந்திரன்

Tags :
Advertisement