‘நினைவெல்லாம் நீயடா’ -விமர்சனம்!
தமிழ் சினிமாவில் பள்ளியில் படிக்கும் மாணவர்களை ஹீரோ, ஹீரோயினாக சித்தரித்து வந்த படங்களின் எண்ணிக்கை மிகப் பெரியது..இங்கு யாரும் காதலுக்கு எதிரியல்ல. காதல் என்பது வாழ்வில் சரியான தருணத்தில் சரியான நபரைச் சந்தித்து, பரஸ்பர புரிதலுக்குப்பிறகு ஏற்படவேண்டிய ஒரு உணர்வு. ஆனால் அதைத் உரிய வயதுக்கு முன்னரே தூண்டுகிற வேலையை செய்யும் சினிமாக்களில் ஒன்றாக வந்துள்ளது நினைவெல்லாம் நீயடா.. ! ஆனால் நம் நினைவில் முதல் காதல் ஒரு போதும் நினைவில் இருந்து அகலாது, என்பதை உணர்த்தும் வகையில் ஒரு கதை எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் ஆதிராஜன், அந்த முதல் காதல் முக்கால்வாசிக்கும் மேல் வெற்றி பெறுவதில்லை, அப்படி இருந்தாலும் அதை கடந்து செல்வது தான் வாழ்க்கை என்ற கருத்தை மையப்படுத்தி வழங்கி இருக்கிறார்.
அதாவது பள்ளியில் புதிதாக வந்து சேரும் யுவலட்சுமி மீது காதல் கொள்ளும் சின்ன வயது பிரஜன் தன் காதலை பள்ளி முடியும் தருவாயில் காதல் கடிதம் தருகிறார். இந்நிலையில் யுவலட்சுமி தந்தையின் உடல் நிலை பாதித்ததால் அவரைக் காண வெளிநாடு புறப்பட்டு செல்கிறார். சென்றவர் மீண்டும் திரும்பாத நிலையில் பிரஜனை தன் மாமன் மகளை திருமணம் செய்து கொள்ளும்படி குடும்பத்தார் வற்புறுத்துகின்றனர். அதை ஏற்று அவரை திருமணம் செய்கிறார். ஆனால் இருவரும் மனதளவில் ஒற்றுமையாக இல்லாமல் சண்டை சச்சரவு என்று இருக்கின்றனர். பழைய காதலை எண்ணி பிரஜன் குடிகாரனாக மாறுகிறார். அதை பார்த்து அவரது மனைவி மனம் பேதலித்து பைத்தியம் ஆகிறார். இந்த நிலையில் வெளிநாடு சென்ற யுவலட்சுமி மீண்டும் இந்தியா திரும்புகிறார். அவருக்கு திருமணம் ஆகி இருக்கும் என்று எல்லோரும் கூறிய நிலையில் அவர் பிரஜனுக்காக திருமணம் செய்து கொள்ளாமல் காத்திருக் கிறார். அதைக் கண்டு பிரஜன் மனம் வாடுகிறார். எப்படியாவது பிரஜனை திருமணம் செய்துக் கொள்ள யுவலட்சுமி எண்ணு கிறார் ஆனால் இறுதியில் எதிர்பார்க்காத திருப்பம் நடக்கிறது. பிரஜனை பார்க்க வந்தவர் யுவலட்சுமி இல்லை என்று தெரிய வர அதன் பிறகு நடப்பது என்ன என்பதை சொல்வதே நினைவெல்லாம் நீயடா படக்கதை.
நாயகன் பிரஜன் வேடத்தில் வரும் ரோஹித், அசப்பில் ஆரம்ப கால அஜித்தை நினைவு படுத்துகிறார். தேவையான நடிப்பையும் வழங்கி இருக்கிறார்.நாயகியாக நடித்திருக்கும் சினாமிகா, முதிர் கண்ணியாக இருக்கிறார். இவருக்காகவா பிரஜின் இத்தனை வருடங்கள் காத்திருந்தார், என்று அவர் மீது நமக்கு பரிதாபம் வரும் போது, சினாமிகா ஒரு உண்மையை சொல்லி நமக்கு ஆறுதல் அளிக்கிறார்.
பள்ளி பருவத்தில் நடித்திருக்கும் ரோஹித் மற்றும் யுவலக்ஷ்மி இருவரும் படத்தை தாங்கி பிடித்திருக்கிறார்கள். இவர்கள் வரும் காட்சிகள் தான் காதல் படம் என்ற உணர்வை கொடுப்பதோடு, கொஞ்சம் ரசிக்கவும் வைக்கிறது. பிரஜனின் பள்ளி தோழராக வரும் ரெடின் கிங்ஸ்லி அவ்வப்போது சிரிக்க வைக்க முயல்கிறார்
ரோகித் l, மனோபாலா, மதுமிதா ஆர்.வி. உதயகுமார், பி எல் தேனப்பன், அபி நட்சத்திரா முத்துராமன் உள்ளிட்ட பலர் இருக்கிறார்கள்
இளையராஜாவின் இசையில் பாடல்கள் பாஸான அளவுக்கு பின்னணி இசையில் அக்கறைக் காட்டவில்லை என்பது அப்பட்டமாக தெரிகிறது. கேமராமேன்
ராஜா பட்டாச்சார்ஜி பாடல் காட்சிகளில் காட்டியிருக்கும் தரத்தை ஒட்டுமொத்தப் படத்திலும் காட்டியிருக்கலாம்.
பால்ய சிநேகத்தில் எழும் விளையாட்டுத்தனம், சிறு சிறு ஊடலும் கூடலும் எனப் பள்ளி, கல்லூரி காதல் ஒன்றும் தமிழ் சினிமாக்குப் புதிதல்ல. பள்ளிப் பருவ காதலுடன் எப்போதும் `Infactuation' என்ற ஆங்கில சொல் ஒட்டிக்கொள்ளும். புரிதலின்றி, ஆராயாமல் வேகத்தில் வயதின் தாக்கத்தால் ஏற்படுவதுதான் பள்ளிக் காதல் என்ற கருத்தை இச்சமூகம் நமக்கு ஊட்டி நம்பச் சொல்லி இருக்கும் சூழலில் பள்ளிக் காதை மையமாகக் கொண்டு எடுத்த கதையில் கொஞ்சமும் புதுமையில்லாமல் , திரைக்கதையில் போதிய அக்கறைக் காட்டாமல் உருவாக்கி இருப்பதால் நினைவில் நிற்க மறுத்து விடுகிறது இப்படம்
மார்க் 2.5/5