சாலைகளில் கால் நடைகள் - சென்னை மாநகராட்சி அதிரடி அறிவிப்பு!ப்
சென்னை மாநகராட்சியில் கடந்த சில நாட்களாக சாலைகளில் கவனிப்பாரின்றி சுற்றித் திரியும் கால்நடைகளால் அடுத்தடுத்து விபத்துக்கள் நேர்ந்து வருகிறது. மேலும் சில கால்நடைகள் இருசக்கர வாகன ஓட்டிகளை தாக்குவதில் அவர்கள் படுகாயம் அடையும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. இதைத் தடுப்பதற்காக மாநகராட்சி சார்பில் ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.இந்த நிலையில் சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம், இன்று மாநகர மேயர் பிரியா ராஜன் தலைமையில் நடைபெற்றது. துணை மேயர் முகேஷ் குமார், ஆணையாளர் குமரகுருபரன், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். அப்போது மாநகராட்சி பகுதிகளில் சுற்றித் திரியும் கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு விதிக்கப்படும் அபராத தொகையை 5 ஆயிரம் ரூபாயிலிருந்து 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முதல் முறையாக மாடு பிடிபட்டால், 10 ஆயிரம் ரூபாயும், 2வது முறையாக பிடிபட்டால் 15 ஆயிரம் ரூபாயும் அபராதத்தொகை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு செலவுக்காக மாடுகள் பிடிபட்ட 3வது நாளில் இருந்து கூடுதலாக ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள், பதிவு மற்றும் உரிமம் பெறுவதற்கான கட்டணத்தை மாநகராட்சி மாற்றியமைத்து தீர்மானம் கொண்டு வந்துள்ளது.
அதன்படி 500 ரூபாயாக இருந்த தொழில் உரிம கட்டணம், மிக சிறிய வணிகத்திற்கு 3 ஆயிரத்து500 ரூபாயும், சிறிய வணிகத்திற்கு 7 ஆயிரம் ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது.
அதேபோல், நடுத்தர வணிகத்திற்கான உரிம கட்டணம் 10 ஆயிரம் ரூபாயும், பெரிய வணிகத்திற்கு 15 ஆயிரம் ரூபாய் என்ற அளவிலும் உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், பேக்கரி, மெடிக்கல் ஷாப், முடி திருத்த கடைகளுக்கு 10 ஆயிரம் ரூபாய் வரையும், துணிக்கடைகளுக்கு 15 ஆயிரம் ரூபாய் வரையும் உரிமக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும் சினிமா ஸ்டூடியோ, நகைக்கடைகளுக்கு 20 ஆயிரம் ரூபாய் வரையும், திருமண மண்டபங்களுக்கு 30 ஆயிரம் ரூபாய் வரையும் உரிம கட்டணத்தை உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சென்னையில் சாலையோரம் வாகன நிறுத்தத்தில் கட்டணம் வசூல் செய்ய தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில், பார்க்கிங் கட்டணம் வசூல் மேற்கொள்ள தமிழ்நாடு முன்னாள் படைவீரர் கழகத்திற்கு அனுமதி வழங்கி சென்னை மாமன்ற கூட்டத்தில் அனுமதி வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியுடன் 70:30 விகிதத்தின் அடிப்படையில் TEXCO நிறுவனத்திற்கு ஒப்பந்தம் பார்க்கிங் வருவாயில் 70 சதவீதம் சென்னை மாநகராட்சிக்கும், 30 சதவீதம் TEXCO நிறுவனத்திற்கும் வழங்கும் வகையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள 47 வாகன நிறுத்த இடங்களிலும் இரு சக்கர வாகனத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு 5 ரூபாயும், நான்கு சக்கர வாகனங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு 20 ரூபாயும், குறிப்பாக பிரிமியம் ஏரியாவில் (பாண்டி பாஜர் சாலை) இரு சக்கர வாகனத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு 20 ரூபாயும், 4 சக்கர வாகனத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு 50 ரூபாயும் என வசூலிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. TEXCO நிறுவனம் வசூல் பணி தொடரும் வரை சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட அனைத்து வாகன நிறுத்துமிடங்களிலும் பொதுமக்கள் கட்டணமின்றி இலவசமாக வாகனங்கள் நிறுத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் அம்மா உணவகத்தில் பழுதாகியுள்ள இயந்திரங்கள் மற்றும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள பாத்திரங்களை மாற்ற 7.6 கோடி ரூபாய் ஒதுக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 30 நாட்களுக்குள் இதற்கான பணிகளை முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது