For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

புத்தாண்டு பிறந்துவிட்டது. என்ன செய்யலாம்?

09:18 PM Jan 01, 2024 IST | admin
புத்தாண்டு பிறந்துவிட்டது  என்ன செய்யலாம்
Advertisement

வாழ்க்கை இப்படியே போய்க்கொண்டிருக்கிறது. வாழ்க்கையில் நாம் நினைத்தபடியே யாவும் நடக்கின்றன என்று யாராலும் சொல்ல முடியாது. நினைத்தபடி வாழ்க்கை நடத்தும் முயற்சியில் நினைத்தேயிராத முட்டுகள் வந்துகொண்டேயிருக்கின்றன. ஒருவேளை நினைத்தபடிதான் செல்கிறது என்றே வைத்துக்கொண்டாலும் அதனை இன்னும் சிறப்பாக்க வேண்டும். இது போதாது. மேலும் பலர்க்கு வாழ்க்கை அவர்கள் நினைத்தேயிராத திசையில் சென்றுகொண்டிருக்கலாம். இவற்றை மாற்ற வேண்டும். ஏதேனும் செய்யவேண்டும். வாழ்க்கைக்குள் செக்குமாட்டு உழற்சி வந்துவிடக்கூடாது. பிறந்ததற்கு அடையாளமாய் பெரிதாய்ச் சுவடு பதிக்கவேண்டும். நம் பெயரைச் சொன்னால் நம்மைப் பார்த்தேயிராதவர்க்கும் அடையாளம் தெரியவேண்டும். நம்மை நம்பியிருக்கும் உற்றார் உறவுகள் நட்புகளை தோள்கொடுத்துத் தூக்கிவிடவேண்டும். ஒவ்வொரு நொடியும் நம்மை நாமே மேம்படுத்திக்கொள்ளவேண்டும். நேற்றிருந்த நான் இன்றில்லை என்னுமளவுக்குச் சிறிதாய் சிறிதாய் முன்னேறிக்கொண்டே இருக்கவேண்டும்.

Advertisement

Composite image of new years resolutions on january calendar

நோக்கத்தில் சுணங்குவோர்க்கு வாழ்க்கை இரக்கமே காட்டுவதில்லை. முட்டிமோதுவோர்க்கே வெற்றி என்பது எட்டாக்கனியாகத் தொங்கும்போது முயலாதவர்க்கு அது கண்காண முடியாக் கனியாகத்தான் இருக்கும். வாழ்க்கையில் எதுவும் நமக்கு இன்னொரு வாய்ப்பாகத் திரும்ப வாராது, இந்நாள் உள்பட. இந்தச் சூழல் உள்பட. வாழ்க்கையில் ஒரு முறை கிடைத்தது இன்னொரு முறை கிடைக்குமா, தெரியாது. பெரும்பாலும் கிடைப்பதில்லை. கிடைத்தாலும் அது பழையதைப்போல் இராது. அதனால் நம் முன்னேயுள்ள வாய்ப்புகளைக் கண்ணிமைப்பொழுதுகூட தவறவிடக்கூடாது. ஓடிச்சென்று இறுக்கிப் பிடித்துக்கொள்ளவேண்டும். இருக்குமிடத்திலிருந்து, இந்த இடத்திலிருந்து, இந்நொடியிலிருந்து தொடங்குவதற்கு அஞ்சக்கூடாது. அப்போதுதான் பனிவிலகிய காட்சியாய்ப் பலவும் தோன்றும். தலையைத் தூக்கிப் பார்க்கவே சோம்பேறியாக இருப்பவர்க்குக் கனவுகள்தாம் மீதமாகும். அதனால் இவ்வாண்டில் வலிமையாய்த் திட்டமிட்டுக்கொள்ளுங்கள். இப்போதுதானே ஆண்டு தொடங்கியிருக்கிறது, பார்த்துக்கொள்ளலாம் என்று இராதீர்.

இவ்வாண்டில் நம் முன்னே இருப்பவை முந்நூற்று அறுபத்தைந்து நாள்கள். நாம் செய்யவேண்டியவையும் முந்நூற்று அறுபத்தைந்து முறைகள். ஒரு வேலையை இவ்வாண்டில் மீறிப்போனால் அவ்வளவு முறைதான் செய்ய முடியும். அதற்குள் விளைவினைக் கண்டாகவேண்டும். இந்தக் குறுகிய காலவரம்பினை மனத்திற்கொள்ளுங்கள். அவ்வாறுகொண்டால் ஒரு நாளைக்கூட வீணடிக்கமாட்டீர்கள். அவ்வளவுதான், அடுத்த ஆண்டின் இறுதியில் கணக்கு வழக்கு பாருங்கள். வாய்ம்மையுறச் சொல்கிறேன், முன்னேறியிருப்பீர்கள்.

Advertisement

என்ன செய்யவேண்டும் ?

OO

🏃🏃‍♀️(1). முதலில் உங்கள் நேரத்தை வீணடிக்கும் அனைத்தையும் விட்டுத்தள்ளுங்கள். தேவையில்லாமல் ஒருவர் மணிக்கணக்கில் கைப்பேசியில் பேசுகிறாரா, அவரோடு சுருக்கமாகப் பேச்சை முடித்துக்கொள்ளுங்கள். நண்பர்கள் உறவினர்கள் அக்கம்பக்கத்தார் என்ற பெயரில் உட்கார்ந்து பேசினால் ஒரு பொழுதே போய்விடுகிறதா ? முதலில் பேச்சு முறையைச் சுருக்குங்கள். செய்தி முடிந்ததும் பேச்சினை முறியுங்கள். பேச்சு என்பதாவது இருதரப்பானது, தேவையில்லாமல் கைப்பேசியில் பொழுதினைப் போக்குகிறீர்களா ? அவற்றைக் குறையுங்கள். ஆயிரம் காணொளிகளைக் காலம் முழுவதும் பார்த்துக்கொண்டேயிருக்கலாம். உங்களுக்கு நேரம் போவது மட்டுமில்லாமல் அவற்றைக் கண்டதால்தான் ஊக்கம் வடிந்து சோர்வுக்கு ஆளாகிறீர்கள். அதனால்தான் சிலவற்றைச் செய்யாமல் விட்டுவிடுகிறீர்கள். வேண்டாக் காணொளிகளைப் பார்த்துக்கொண்டிராதீர். உங்கள் நேரத்தைத் திருடும் தேவையற்ற அனைத்துப் பழக்கங்களையும் நீக்குங்கள்.
OO

🏃🏃‍♀️(2). வேலை என்ற ஒன்று இப்போது உங்களுக்கு இருக்குமானால் அதனைச் செய்யத் தயங்காதீர். வேலையைச் செய்யாமல் தள்ளிப் போட்டதுதான் இன்றைய எல்லாத் துன்பங்களுக்கும் காரணம். சோம்பித் திரிந்ததுதான் அரைகுறை நிலைமைகட்குக் காரணம். வேலை என்று சொல்வது பணமீட்டுவதற்கானது மட்டுமில்லை, நீங்கள் உங்களுக்காகச் செய்துகொள்கின்ற அனைத்துமே வேலைதான். இதோ இந்த எழுதுமேடையைத் தூய்மை செய்யவேண்டுமா ? அதுவும் வேலைதான். இன்றைய நாளிதழைப் படிக்கவேண்டுமா ? அதுவும் வேலைதான். விடிந்ததும் பாயைச் சுருட்டி வைப்பதிலிருந்து பொருளீட்டும் பாடு வரைக்கும் அனைத்துமே வேலைகள்தாம். சப்பானியர்களைப் பற்றி ஒன்று சொல்வார்கள், அவர்களால் சும்மா ஒரு நொடிப்பொழுதுகூட அமர்ந்திருக்க முடியாதாம். வெற்றாய் அமர்ந்திருக்கும் அந்நேரத்தில்கூட ஏதேனும் பூப்பின்னல் வேலையைச் செய்துகொண்டிருப்பார்களாம். அந்தப் பழக்கத்திற்கு வாருங்கள். செயல் செயல் செயல் – இஃதொன்றே விளைவைத் தரும். அந்த விளைவு நாம் விரும்பத்தக்க விளைவாக இருந்துவிட்டால் அதுவே வெற்றி எனப்படும். விரும்பத்தகாத விளைவுதான் தோல்வி. அந்தச் செயல் => விளைவு அடுத்த சுற்றில் வெற்றியாக விளைந்தே தீரும்.
OO

🏃🏃‍♀️(3). உங்களைச் சுற்றியுள்ளவர்கள் அடைந்த வெற்றியில், முன்னேற்றத்தில், செல்வத்தில் சிறிதளவுகூட நீங்கள் அடையாமலிருக்கலாம். என்ன காரணம் என்று எண்ணிப் பாருங்கள் ! “அவர்களுக்கு அதிர்ஷ்டம்” என்று விடையைச் சுருக்கிக்கொள்ளாதீர். அவர்கள் செய்த ஏதோ ஒன்றை நீங்கள் செய்யவில்லை. அதுதான் உண்மை. உங்களால் செய்ய முடியாததை, உங்களால் இயலாததை, உங்களுக்கு வாராததை அவர்கள் முயன்று கைப்பற்றினார்கள். அதனால் வென்றார்கள். நீங்கள் முயலவில்லை, நீங்கள் முயற்சியில் கடுமையாயில்லை, முயன்று பயின்று கைப்பற்றத் தெரியாமல் நின்றீர்கள். அவர்கள் வென்றுவிட்டார்கள். நீங்கள் தூங்கிக்கொண்டிருந்தீர்கள், அவர்கள் செயல்பட்டுக்கொண்டிருந்தார்கள். விழித்துப் பார்த்தபோது அவர்கள் மேலே போய்விட்டார்கள். உண்மையில் அவர்கள் உங்களுக்கு வழிகாட்டிவிட்டுப் போயிருக்கிறார்கள். இனியாவது அவ்வழியில் செல்லத் துணியுங்களேன்.
OO

🏃🏃‍♀️(4). “அட விடிவதுதான் தெரிகிறது, பார்த்தால் நாள் முடிந்து விடுகிறது” என்று உணர்ந்திருப்பீர்கள். அதுதான் உண்மையும்கூட. அதனைத் தொட்டு இதனைத் தொட்டு அங்கே திரும்பி இங்கே நகர்ந்து முடிப்பதற்குள் நாள் முடிந்துவிடுகிறது. இருட்டிவிடுகிறது. உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள காலத்தின் ஒரு துண்டுதான் ஒரு நாள் என்பது. அவ்வொருநாள் எவ்வளவு விரைவில் தீர்ந்துவிடுகிறது பாருங்கள். அப்படியென்றால் உங்கள் முன்னேயுள்ள காலத்தின் ஒரு துண்டு காற்றில் கரைகிறது. உங்கள் நாள்கள் போய்க்கொண்டிருக்கின்றன. அன்றைக்கு உருப்படியாய் ஒன்றையுமே செய்ய முடியாதபடி நாள் நம் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு நகர்கிறது. எனில் நீங்கள் எவ்வளவு விழிப்போடு இருக்கவேண்டும் ? எவ்வளவு கறாராக இருக்கவேண்டும் ? உங்களுக்கும் வாரன் பபெட்டுக்கும் எலான் மஸ்க்குக்கும் நாள் என்பது ஒன்றுதான். அவர்கட்கு ஒரு நாள் என்பது பல மில்லியன் டாலர்கள் வருமானமாய் வளர்ந்து நிற்கும் காலத்துண்டு. நமக்கு ஒரு நாள் என்பது நம்மை அறியாமல், செய்வதறியாமல் இழந்து நிற்கும் காலப்பொழுது.
OO

🏃🏃‍♀️(5). செயல்பட்டுக்கொண்டேயிருக்கவேண்டும். இந்தச் சொற்றொடர் எவ்வாறு இவ்வளவு நீளமானதாக இருக்கிறதோ அவ்வளவு நீண்டதாய் உங்கள் செயலாற்றல் இருக்கட்டும். உங்களால் ஒரு செயலை மணிக்கணக்கில் செய்ய முடியுமெனில் நீங்கள் வெற்றி பெற்றுவிடலாம். ஒரு வேலையை அரை மணி நேரம் செய்துவிட்டு எழுந்துவிடுகிறீர்களா, நீங்கள் வெற்றி பெறுவது குதிரைக்கொம்பே. ஒரு வேலையை நில்லாமல் தள்ளாமல் அங்கிங்கு திரும்பாமல் இடையிடையே பேசாமல் மணிக்கணக்கில் செய்தால்தான் வெற்றிக்கோட்டைத் தொடமுடியும். நாற்று நடுகிறீர்களா, மணிக்கணக்கில் குனிந்து நிமிர்ந்து நடவேண்டும். ஓட்டுநராக இருக்கிறீர்களா, மணிக்கணக்கில் வண்டியோட்டினால்தான் சேருமிடம் சேரமுடியும். அப்போதுதான் அவ்வேலைகளை முடிக்கமுடியும். எல்லாச் செயல்களும் மணிக்கணக்கில் செயல்படக் கோருகின்றன. அப்போதுதான் நிறைவு நிலைக்குப் போகமுடியும். மனத்தில் மலைபோல் நோக்கங்களை வைத்துக்கொண்டு அரை மணி நேரம், ஒரு மணி நேரம் என்றா முயல்வீர்கள் ? அரைமணி நேரம் செய்தாயிற்று, மீதத்தை நாளை செய்யலாமே என்று எழுவீர்களா ? ஏழெட்டு மணி நேரம் செயல்பட்டாகவேண்டும். எடிசன் போல இருபத்து நான்கு மணிநேரமும் தன்னையிழந்து வினைபுரியவேண்டும். செயல்படுவதிலுள்ள இவ்வேறுபாட்டினை உணர்ந்துவிட்டீர்கள் எனில் அவ்வாறே கண் துஞ்சாது பசி நோக்காது முயல்வீர்கள், வெல்வீர்கள். இதற்கு இதுதான் விளைவு என்பது முன்பே சமன்பாடுபோல் வரையறுக்கப்பட்டுள்ளது. நெடுநேரத்துக் கடுமையான உழைப்பிற்கு வெற்றியே விளைவு. வெற்றி பெற்றவர்கள் எல்லாருமே மணிக்கணக்கில் நாட்கணக்கில் வேலை பார்ப்பதில், அவற்றை முடித்து முற்றும் போடுவதில் விற்பன்னர்கள்.
OO

🏃🏃‍♀️(6). சரி, இனியாவது என்ன செய்யட்டும் நான் ? முதலில் விடிகாலையில் துயிலெழுங்கள். வைகறைத் துயிலெழு ! ஆறு மணிக்கு முன்னதாக எழுந்தேயாகவேண்டும். அது 5 : 55 ஆக இருந்தாலும் நன்றே. எழுந்துவிட்டால் உங்களுக்கு ஒரு நாள் என்பது கூடுதலாக மூன்று மணி நேரத்தைத் தருவதாகும். அந்த மூன்று மணி நேர முயற்சிகளே, செயல்பாடுகளே வெற்றிக்கான வழி. அன்றைய நாள் முழுவதும் செய்ய நினைத்த எதனையும் விட்டுவைக்கமாட்டீர்கள். எவ்விடத்திற்கும் காலத்தாழ்ச்சியாய்ச் செல்லமாட்டீர்கள். கூடுதலாக நேரம் கிடைப்பதால் முயற்சியோடு முயற்சியாய் மேலும் ஒன்றைச் சேர்த்துச் செய்வீர்கள். காலையில் உடற்பயிற்சி செய்வதாகவோ, ஓட்டம்/நடை என்பதாகவோ இருக்கட்டுமே, அதுவே உங்கள் செயலாற்றலைப் பன்மடங்கு கூட்டும். உடற்பயிற்சியோடு உள்ளவர்களின் செயலாற்றல் மின்சாரம் போன்றது என்பதனை உணருங்கள். உடலெங்கும் குருதியோட்டம் மிக்குற்று மூளையாற்றல் கூர்மைபெற்றவராய் விளங்குவார்கள். விடிகாலைத் துயிலெழுச்சியினை முதற்பழக்கமாய்க் கொள்ளுங்கள். முந்திய நாள் நள்ளிரவு இரண்டு மணி தாண்டியும் பணி என்றால் அவ்வொருநாள் விலக்கு. மீண்டும் மறுநாள் காலைப்பறவைகள் ஆகவேண்டும் நீங்கள்.
OO

🏃🏃‍♀️(7). புதிது புதிதாக ஒன்றைக் கற்றுக்கொண்டேயிருங்கள். புதிய முறையில் ஒன்றைச் செய்து பாருங்கள். இன்றைக்கு எல்லாமே கைக்கெட்டும் தொலைவில் வந்து நிற்கின்றன. வாழ்க்கை வெறுமையாக இருக்கிறது என்றால் அவ்வெறுமையைப் போக்க எதனைக்கொண்டு நிரப்ப முயன்றீர்கள் ? நீங்கள் எதனை அடையவேண்டும் என்று விரும்புகிறீர்களோ, எவ்வாறு இருக்கவேண்டும் என்று விரும்புகிறீர்களோ – அதற்குத் துணைசெய்யும் ஒன்றைப் புதிதாகக் கற்றுக்கொண்டேயாகவேண்டும். கற்றுக்கொள்ளாதவர்கள் காலத்தின் புத்தொளியின்முன்னம் மங்கிவிடுகிறார்கள். இவ்வாண்டு வண்டியோட்டப் பழகி ஓட்டுநர் உரிமம் பெறுங்கள், நீச்சல் கற்றுக்கொள்ளுங்கள், கடவுச்சீட்டு எடுங்கள், ஏதேனும் ஆறு திங்கள்களில் நடக்கும் பட்டயப் பாடத்தில் சேருங்கள், வீட்டிற்கு நிறப்பூச்சு செய்யப் பழகுங்கள், உலகின் தலைசிறந்த பத்து நூல்களைப் படித்து முடியுங்கள், புதிது புதிதாகப் பழகிக்கொண்டே வாருங்கள். ‘எதுவும் வீண்போகாது’ என்பதுதான் நான் வாழ்க்கையில் கற்றுக்கொண்ட மிகப்பெரிய பாடம்.
OO

🏃🏃‍♀️(8 ). உங்களிடமுள்ள தீய பழக்கங்கள் எவையெவை என்று அடையாளம் காணுங்கள். உடல்நலம், மனநலம், நல்லெதிர்காலம், நோக்கத்தை அடைவது – ஆகிய அனைத்திற்குமான இடையூறாவதைத்தான் தீய பழக்கங்கள் என்கிறேன். பழக்கம் எனப்படுவதால் அது அன்றாடமோ அடிக்கடியோ தொடர்கின்ற செயலுமாகிறது. அத்தீய பழக்கங்களுக்கு நவீன இலக்கியங்கள் துணை நிற்கலாம். மாற்றுச் சிந்தனையாளர்கள் தோதாகப் பேசலாம். அவற்றைப் பொருட்படுத்தினால் உங்களை யாரும் காப்பாற்ற இயலாது. அத்தீய பழக்கங்கள் மது அருந்துவதாகவோ, புகை பிடிப்பதாகவோ, விட்டேற்றியாக இருப்பதாகவோ, உடலின்பச் செய்கையாகவோ, தன்னலத்திற்காக ஒன்றைச் செய்வதாகவோ, திரைப்படங்கள் / வலைத்தொடர்களை ஒன்றுவிடாமல் பார்ப்பதாகவோ, பயணங்களைத் தள்ளிப் போடுவதாகவோ, அரசியல் பேசும் வலைக்காணொளி அடிமைத்தனமாகவோ – என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இவற்றால் நமக்குச் சிறிதும் நன்மையில்லை, நம் நோக்கத்திற்குத் தடை, நேரக்கொல்லி என்று உணர்ந்தீர்களானால் இந்நொடியிலேயே விட்டு விலகுங்கள்.
OO

🏃🏃‍♀️(9). எல்லாவற்றிலும் நேர்மறையாக விளங்குங்கள். இதன் ஈர்ப்பாற்றல் யார்க்கும் தெரிவதில்லை. தோல்வியிலிருந்து மீண்டெழுவதற்கு ஒரேயொரு மனப்பான்மை உதவும் என்றால் அது நேர்மறை மனப்பான்மைதான். நேர்மறையாக இருக்கும்போதுதான் ஒன்றைப் பகுத்தாராய்ந்து பார்ப்பீர்கள். ‘அட இதனால்தான் இப்படியாயிற்றா’ என்று விளங்கிக்கொள்வீர்கள். அடுத்து மீண்டு வருவீர்கள். நேர்மறையாளர்கள் உலகத்தின் கண்களுக்கு உடனே தென்படமாட்டார்கள். ஆனால், அவர்கள் உலகத்தின் பார்வையை மாற்றுபவர்கள். உங்களைச் சுற்றியுள்ள யாரேனும் எதிர்மறை மனப்பாங்கு உள்ளவரெனில் உடனே அவர்கள் தொடர்பினைத் துண்டியுங்கள். என் முகநூல் நட்பில் நூற்றுக்கணக்கான எதிர்மறையாளர்களைத் தூக்கி எறிந்தேன். உடலெங்கும் எதிர்மறையாய் நிரம்பியவர்கள். எள்ளலின் வள்ளல்கள். சொல்வதெல்லாம் மிதநச்சு. இவர்கட்கு எல்லாமே நகைச்சுவை. இவர்கட்குக் காணுமனைத்திலும் ‘எதிர்மறை விமர்சனம்.’ கலகத்தைத் தூண்டுவது, குட்டையைக் குழப்புவது என்றிருப்பவர்களோடு உங்களுக்கென்ன உறவு ? உலகமாவது ஆயிரக்கணக்கான போக்கினர்களின் திரள்நகர்வு. இவர்களோடு சேர்ந்து ‘கிகிகி’ என்று சிரித்துக்கொண்டு நிற்பதற்கு நீங்கள் வேடிக்கை விரும்பிகளா ? செயல்வலிமை மிக்கவர்கள். உங்களுக்கு வேலை இருக்கிறது. இம்மலிவு மக்கட்கு மனத்தைப் பறிகொடுக்காமல் உயர்வினும் உயர்வு தேடுபவர்களாக விளங்குங்கள்.

OO

🏃🏃‍♀️(10). உடல்நலம், மனநலம், பொருள்வளம், பணிமேன்மை, உறவுநலம், பொன்னொளிமிக்க எதிர்காலம், செல்வம், கல்வி, பேரறிவு, சான்றாண்மை, வாய்மை, வளமை, ஆக்கவினைகள், கலைச்செழுமை, மதிப்பான குமுகாயப் பங்களிப்பு – இவற்றுக்குள்ளாகத்தான் உங்கள் நோக்கங்கள் அமையும். இவற்றில் மேன்மையான இடங்களை அடைவதுதான் நோக்கமாகவும் இருக்கும். தொடர்ச்சியான முயற்சியாலும் பயிற்சியாலும் இவற்றை அடைவது எளிதுதான். இவற்றை நோக்கிய பயணத்தில் இடைப்படுவனவற்றை விலக்கத் தெரிந்தால், தேங்காது நகர்ந்தால் யாவும் கைக்கெட்டும். எண்ணித் துணியுங்கள், எல்லாவற்றையும் அடையுங்கள், இந்த வாழ்க்கை உங்களுக்கானது, இன்னொருவரால் முடிந்தது உங்களாலும் முடியும். எந்தத் தேக்கமும் மறுநாள் தொடராது. எவ்வளவு தாழ்விலிருந்தும் மீண்டெழலாம். வினைசெயல் வகை தெரிந்தவர்களால் வெற்றியைத் தழுவமுடியும். தொடர்ந்து செயலாற்றுங்கள். முன்னிலும் அழுத்தமாய் முயலுங்கள். எதிர்காலத்தை வெல்வதுபோன்ற பெரிய உலகக்கோப்பை இன்னொன்று கிடையாது. அதனைக் கைப்பற்றுங்கள். உங்கள் முயற்சிகளும் செயல்பாடுகளும் வெற்றிபெற நானும் மனமார்ந்து வாழ்த்துகிறேன், என்னையும் மனமார்ந்து வாழ்த்துங்கள் !

- ✍️©️®️கவிஞர் மகுடேசுவரன்

Tags :
Advertisement