இந்தியாவில் சிம் கார்டு விற்பனை மற்றும் வாங்க புதிய கட்டுப்பாடுகள் அமல்!
அண்மைக் காலமாக நாடெங்கும் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. சைபர் குற்றங்களில் முதலில், வங்கியில் இருந்து பேசுவதைப் போல டெபிட் கார்டு எண்களைப் பெற்று வங்கிக் கணக்கில் பணம் திருடும் மோசடிகள் நடைபெற்று வந்தன. அடுத்து இன்னும் நூதனமாக, வங்கிக்கணக்கு Block செய்யப்படும் என்றோ, மின் இணைப்பு ரத்து செய்யப்படும் என்றோ குறுஞ்செய்திகள் அனுப்பி, அதிலுள்ள இணையதள லிங்கை கிளிக் செய்தால் பணம் பறிபோகும் வகையிலான மோசடிகள் அரங்கேறின. தற்போது இன்னும் ஒரு படி மேலே சென்று, அமேசான் போன்ற நிறுவனங்களில் இருந்து கிஃப்ட் கூப்பன் வந்திருப்பதாகக் கூறி சில கும்பல்கள் மோசடியில் ஈடுபடுகின்றனர். இந்த சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வின்றி இருந்தாலோ, கவனக்குறைவுடன் இருந்தாலோ நமது பணம் பறிபோகும் சூழல் நிலவி வருகிறது. இத்தகைய நூதன குற்றங்களைத் தடுக்க மத்திய அரசு மற்றும்காவல்துறை சார்பிலும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.' அந்த வகையில் நம் நாட்டில் சிம் கார்டு வாங்குவதற்கும் விற்பதற்கும் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட உள்ளன.
இணைய குற்றங்களை தடுக்கும் நோக்கில் மொபைல் சிம் கார்டு விற்பனையில் மத்திய அரசு புதிய விதிமுறைகளை ஆகஸ்ட் மாதமே அறிமுகப்படுத்தியது. அந்த புதிய விதிமுறைகள் நாளை முதல் நடைமுறைப் படுத்தப்படுகிறது. இது டிசம்பர் 1ஆம் தேதி அதாவது நாளை முதல் அமலுக்கு வருகிறது.
நாளை டிசம்பர் 1 ந்தேதி முதல் சிம்கார்டு வாங்குவதற்கும் விற்பதற்கும் புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. ஒன்றிய அரசின் புதிய முடிவு, சிம் கார்டுகள் மூலம் நடக்கும் மோசடிகளை தடுக்க உதவும் எனக் கூறப்படுகிறது. அதன்படி டிசம்பர் 1 முதல் அனைத்து சிம் கார்டு விற்பனையாளர்களுக்கும் போலீஸ் சரிபார்ப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சிம் விற்பனைக்கு தேவையான பதிவுக்கு போலீஸ் சரிபார்ப்பு தேவை.
மொத்தமாக வாங்க தடை
இது போன்ற விதிமுறைகளை மீறும் வியாபாரிகளுக்கு 10 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் மொத்தமாக சிம் கார்டுகளை வாங்குவதற்கு தடை செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் வணிக இணைப்புகள் மூலமாக மட்டுமே சிம் கார்டுகளை மொத்தமாக வாங்க முடியும்.
பயனர்கள் முன்பு போலவே ஒரு ஆவணம் மூலமாக ஒன்பது சிம் கார்டுகள் வரை பெறலாம். சிம் கார்டுகளை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஆதார் ஸ்கேன் மற்றும் ஆவண தரவு சேகரிப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பழைய சிம் கார்டு தொலைந்துவிட்டால் சிம் கார்டை செயலிழக்க செய்த 90 நாட்களுக்கு பிறகு தான் அந்த எண்ணை நீங்கள் திரும்பப் பெற முடியும் என்பது உள்ளிட்ட விதிமுறைகள் நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது.