சுப்ரீம் கோர்ட்டின் புதிய தலைமை நீதிபதி பதவியேற்பு-யார் இந்த சஞ்சீவ் கன்னா?
சுப்ரீம் கோர்ட்டின் 51-வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா இன்று (நவ.11) பதவியேற்றார். அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பரில் பதவியேற்றார். சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளுக்கான ஓய்வு வயது 65 ஆகும். அதன்படி, தலைமை நீதிபதியாக இருந்த சந்திரசூட் நேற்று (நவம்பர் 10-ம் தேதி) ஓய்வு பெற்றார்.முன்னதாக, சுப்ரீம் கோர்ட்டின் அடுத்த தலைமை நீதிபதியை பரிந்துரை செய்யுமாறு மத்திய சட்ட அமைச்சகம் சந்திரசூட்டுக்கு கடிதம் அனுப்பியது. தனக்கு அடுத்ததாக தலைமை நீதிபதி பொறுப்புக்கு நீதிபதி சஞ்சீவ் கண்ணாவின் பெயரை சந்திரசூட் பரிந்துரை செய்திருந்தார்.
அந்தப் பரிந்துரை ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையில், சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா இன்று (நவ.11) பதவியேற்றார். அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 51-வது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற சஞ்சீவ் கண்ணா வரும் 2025 மே 13 வரை 6 மாதத்துக்கு தலைமை நீதிபதியாக செயல்படுவார்.
சஞ்சீவ் கண்ணா கடந்த1960-ம் ஆண்டு டெல்லியில் பிறந்தவர். 1980-ம் ஆண்டு டெல்லி ஸ்டீபன் கல்லூரியில் சட்டம் பயின்றார். 2016-ம்ஆண்டில் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாகவும், 2019-ம்ஆண்டில் உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார். உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சந்திரசூட்டுக்கு அடுத்த நிலையில் மூத்த நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா இருந்தார். தேர்தல்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்த தடை விதிக்க மறுப்பு சொன்னதுடன் தேர்தல் பத்திர நடைமுறையை ரத்து செய்த ஐந்து நீதிபதி அமர்வில் சஞ்சீவ் கண்ணாவும் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.