நாளந்தா பல்கலை புதிய வளாகம்: பிரதமர் மோடி திறந்து வைத்தார்
நாளாந்தா பல்கலைக்கழகம் கி.மு. 3-ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 13-ஆம் நூற்றாண்டு வரை துறவிகளுக்குரிய மடாலயமாகவும், மாணவர்களுக்கு கல்வி அறிவை புகட்டும் பல்கலைக்கழகமாகவும் இருந்தது. இங்கு, கோயில்கள், ஸ்தூபிகள், கட்டடங்கள் (தங்குமிடம், கல்விக்கூடம்), அழகுக் கலைச் சிற்பங்கள் ஆகியவை இருந்தன. இப் பல்கலைக்கழகத்துக்காக மாபெரும் கட்டடம் 6-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. குப்தர்கள் ஆட்சிக் காலத்தில் இப்பல்கலைக்கழகம் சிறப்பு வாய்ந்ததாக இருந்தது. உலகம் முழுவதிலும் இருந்து பல்வேறு துறையைச் சார்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் இந்த பல்கலைக்கழகத்தில் இணைந்து படித்தனர். நாளந்தா பல்கலைக்கழகம்தான் இந்தியாவின் முதல் பல்கலைக்கழகம் என்பது மட்டுமல்லாமல், மாணவர்கள் தங்கி, படித்த முதல் பல்கலைக்கழகம் என்ற பெருமையையும் பெற்றிருந்தது.
அதன் பிறகு, பல்வேறு நாட்டினர் படையெடுப்புகளால் அவ்வப்போது சீர்குலைந்தது. கி.பி. 455- ல், ஸ்கந்தகுப்தா ஆட்சிக் காலத்தில், மிஹிரக்குலா தலைமையில் ஹன்ஸ் படையெடுப்பின்போது தாக்கப்பட்ட நாளந்தா பல்கலைக்கழகம், பின்னர் ஸ்கந்த வாரிசுகளால் மறுசீரமைக்கப்பட்டு, பல காலம் கல்வி சேவை ஆற்றியது. பின்னர், 7- ஆம் நூற்றாண்டில் ஹர்ஷவர்தன ஆட்சியின்போது, இரண்டாவது முறையாக கவுடர்களால் தாக்குதலுக்குள்ளாகி மீண்டும் புத்த பல்கலைக்கழகத்தால் மறுசீரமைக்கப்பட்டது.
சுமார் 800 ஆண்டுகள் பன்னாட்டு அறிஞர்களின் நூல்கள், ஆய்வுகளோடு சிறப்பாக செயல்பட்ட நாளந்தா பல்கலைக்கழகம் 12 ஆம் நூற்றாண்டு படையெடுப்போடு அழிக்கப்பட்டது. கல்விமுறையில் எத்தனையோ தொழில்நுட்ப மாற்றங்கள் ஏற்பட்டாலும் பல நூற்றாண்டுகளைக் கண்ட இந்த பழமைவாய்ந்த பல்கலைக்கழகம் மீண்டும் செயல்பட வேண்டும் என்பது பல சமூக மற்றும் வரலாற்று ஆர்வலர்களின் விருப்பமாக இருந்தது. அவர்களது ஆவல் இப்போது நிறைவேறியுள்ளது.
ஆம்.. 1600 ஆண்டுகள் பழமையான இந்த நாளந்தா பல்கலைக்கழகம் தற்போது புதியதாக கட்டப்பட்டு இன்று திறக்கப்பட்டது.
இந்த புதிய வளாகம் நாளந்தாவின் பழங்கால இடிபாடுகள் உள்ள இடத்துக்கு அருகில் அமைந்துள்ளது. இந்த புதிய வளாகத்துக்கு உள்ளே சோலார் மின் உற்பத்தி, குடிநீர் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டு பசுமை வளாகமாக அமைக்கப்பட்டுள்ளது. நாளந்தா பல்கலைக்கழகத்தின் புதிய வளாகத்தின் மதிப்பு ரூ.1700 கோடி ஆகும். இந்த நாளந்தா பல்கலைக்கழகமானது இந்தியா உட்பட, ஆஸ்திரேலியா, வங்கதேசம், பூடான், புருனே தருஸ்ஸலாம், கம்போடியா, சீனா, இந்தோனேஷியா, லாவோஸ், மொரீஷியஸ், மியான்மர், நியூசிலாந்து, போர்ச்சுகல், சிங்கப்பூர், தென் கொரியா, இலங்கை, தாய்லாந்து என 17 நாடுகளின் பங்களிப்பை கொண்டுள்ளது.
கட்டுமான பணிகள் தொடங்கும் முன்னரே கடந்த 2014ஆம் ஆண்டு முதல் நாளந்தா பல்கலைக்கழத்தில் தற்காலிக கட்டிடத்தில் மாணவர்கள் பயில ஆரம்பித்து விட்டனர். அதன் பின்னர் கடந்த 2017இல் நாளந்தா பல்கலைக்கழக புதிய கட்டடத்தின் கட்டுமான பணிகள் துவங்கப்பட்டது. தற்போது இந்த நாளந்தா பல்கலைக்கழத்தில் அர்ஜென்டினா, பங்களாதேஷ், பூட்டான், கம்போடியா, கானா, இந்தோனேசியா, கென்யா, லாவோஸ், லைபீரியா, மியான்மர் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் அடங்குவர். , மொசாம்பிக், நேபாளம், நைஜீரியா, காங்கோ குடியரசு, தெற்கு சூடான், இலங்கை, செர்பியா, சியரா லியோன், தாய்லாந்து, துருக்கியே, உகாண்டா, அமெரிக்கா, வியட்நாம் மற்றும் ஜிம்பாப்வே உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
முன்னதாக நாளந்தா பல்கலைக்கழ புதிய வளாகம் திறப்பு குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில், “ நமது கல்வித் துறைக்கு இது மிகவும் சிறப்பான நாள். நாளந்தா பல்கலைக்கழகம் நமது புகழ்பெற்ற கடந்த காலத்துடன் வலுவான தொடர்பைக் கொண்டுள்ளது. இளைஞர்களின் கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் இந்தப் பல்கலைக்கழகம் நிச்சயமாக நீண்ட தூரம் செல்லும்” எனப் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்க்து .