நீயா?நானா?டீமுக்கு கூடுதல் கவனம் தேவை!
நீயா? நானா? நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களில் சிலர் சமூக வலைத்தளங்களில் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகிறார்கள். இந்த எதிர்மறை விமர்சனங்கள் (Trolls) அவர்களிடம் ஏற்படுத்தும் பாதிப்புகள் என்னவாக இருக்கும்? இது குறித்து இது வரை எவரும் பேசியதில்லை என நினைக்கிறேன். குறைந்தபட்சம் பத்து நிமிடம் பிரபலமாக இருக்கலாம், என்கிற ஆசைதான் கலந்து கொள்வோரை ஈர்க்கிறது. ஆனால் சில நேரம் கணவன்-மனைவி, தந்தை-மகள், மாமியார் - மருமகள் என எதிர்எதிரே உறவுகள் அமர வைக்கப்படும்போது எதிர்பாராத தர்மசங்கடமான சூழலுக்குத் தள்ளப்படுகிறார்கள். தம்மையும் அறியாமல் கோபிநாத் என்கிற மூன்றாவது நபரை தங்கள் குடும்பப் பிரச்சனைகளை அலசுகிற ஒருவராக அனுமதிக்கிறார்கள்.
அவர் பிரச்சனைகளை பெரிதாக்குகிறாரா? சிறிதாக்குகிறாரா என்பதை அறியாமல் அவர் தங்களை என்ன வேண்டுமானாலும் கேட்கலாம் , நாம் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும் என்கிற பலவீனமான மனநிலைக்கு தள்ளப்படுகிறார்கள். அந்த பலவீனம் அது ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி என்பதை மறக்கடித்துவிடுகிறது. அதனால் வெகுளியாக வெளிப்படுகிறார்கள் அல்லது உறவுச்சிக்கல்களை உருவாக்கும் வார்த்தைகளை பேசிவிடுகிறார்கள்.
நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் நினைத்தால் அவற்றை ஒளிபரப்பாமல் இருக்கலாம். ஆனால் பொது வெளியில் இரசிக்கப்படுகிறது என்பதால் பங்கேற்றவர்களின் மனத் தடுமாற்றம் அல்லது உளறல் அப்படியே ஒளிபரப்பாகிறது. மிக மிக முக்கியமாக சமூக வலைத்தளங்களில் குட்டிக் குட்டி நறுக்குகளாக (Reels, Shorts) பரவவிடப்படுகின்றன. இதனால் பங்கேற்பாளர்கள் கோமாளிகளாக சித்தரிக்கப்பட்டு மீம்ஸ்களில் வறுத்தெடுக்கப்படுகிறார்கள். பங்கேற்பாளர்கள் ஸ்க்ரீன் ஸ்பேஸ் கிடைக்கும் என்பதால் வேண்டுமென்றே கூட நிகழ்ச்சியில் நடித்திருக்கலாம். ஆனால் சமூக வலைத்தளங்களில் அவர்கள் விமர்சிக்கப்படும்போது, அவை அப்படியே டிஜிட்டல் பதிவுகளாக தங்கிவிடும். அவர்களது முகங்கள் அவர்களுக்கு தொடர்பே இல்லாத வேறொரு கேலி கிண்டலுக்கு பயன்படுத்தப்படும். இது அவர்களை தற்போதும், எதிர்காலத்திலும் எப்படி பாதிக்கும் என்பதை என்னால் கணிக்க இயலவில்லை.
கடந்த 2017ஆம் ஆண்டில் தமிழ் – கேரளா பெண்கள் இருவருக்கு இடையிலான விவாத நிகழ்ச்சியும் கடுமையான சர்ச்சைக்கு வித்திட்டது. நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியானதும், மகளிர் அமைப்புகள் இந்த நிகழ்ச்சி, பெண்களை அழகுப் பொருளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தன. எதிர்ப்பு வலுத்ததால் அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகாமலேயே நிறுத்தி வைக்கப்பட்டதெல்லாம் வரலாறு..
நீயா நானா வடிவத்தில் நானும் ஓரிரு நிகழ்ச்சிகளை இயக்கியிருக்கிறேன். அப்போது சமூக வலைத்தளங்கள் இந்த அளவுக்கு பயமுறுத்துபவையாக இருக்கவில்லை. ஆனாலும் இயன்றவரை எவருக்கும் மனதளவில் பாதிப்பை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்திருக்கிறோம். நீயா? நானா? நிகழ்ச்சியின் சட்டதிட்டங்கள் என்ன, அவர்கள் எந்த அளவுக்கு பொறுப்பாக ஒளிபரப்புகிறார்கள் என்பது பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் இந்நிகழ்சியை பெரும்பாலான மக்கள் குடும்பமாக அமர்ந்து பார்க்கின்றனர் என்பதால் அவர்கள் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும் என்பது என் எண்ணம்.
அதே போல பங்கேற்றவர்களும், தாங்கள் கவனமின்றிப் பேசிவிட்டதாக நினைத்தால், நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் முன்பே அவற்றை ஒளிபரப்ப வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளலாம். அதையும் மீறி எல்லாம் நடந்துவிட்டால், சமூக வலைத்தளங்களின் தான்தோன்றித்தனத்துக்கு அஞ்சாமல் நம் வேலையைப் பார்க்கலாம்.