நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன!.
இளநிலை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு (தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு) நாடு முழுவதும் 571 நகரங்களில் அமைக்கப்பட்டிருந்த 4,750 தேர்வு மையங்களிலும் வெளிநாடுகளில் 14 நகரங்களில் அமைக்கப்பட்டிருந்த மையங்களிலும் கடந்த மே 5-ஆம் தேதி நடைபெற்றது. இத்தேர்வை 23.33 லட்சம் மாணவர்கள் எழுதினர்.இந்நிலையில், வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பது குறித்த செய்திகள் வெளியாகின. தேர்வு தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக பீகார், உத்தரப் பிரதேசத்தில் உள்ள தேர்வு மையங்களில் வினாத்தாள் கசிந்து பெரும் சர்ச்சையானது.
ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட தேதிக்கு முன்பாக இத்தேர்வு முடிவுகள் மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான ஜூன் 4-ஆம் தேதி வெளியிடப்பட்டதும், குறிப்பிட்ட சில தேர்வர்களுக்கு மட்டும் கருணை மதிப்பெண் என்ற அடிப்படையில் எந்தவொரு தெளிவான நடைமுறைகளையும் பின்பற்றாமல் கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்டதும் மிகப்பெரிய சர்ச்சையானது.
இந்த முறைகேடு புகார்கள் தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. அதே நேரம், நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்யவேண்டும், மறு தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும், நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 40-க்கும் மேற்பட்ட மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது.இந்த மனுக்கள் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜெ.பி. பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வில் ஜூலை 19 அன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரும் அல்லது மறு தேர்வு நடத்தக் கோரும் மனுதாரர்கள், வினாத்தாள் கசிவு ஒட்டுமொத்த நீட் தேர்வையும் பாதித்தது என்பதற்கான ஆதாரத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.மேலும், தேர்வு முறைகேடுகள் பரவலாக நடைபெறவில்லை என்பதை உறுதிப்படுத்தும் வகையில், நீட் தேர்வு முடிவுகளைத் தேர்வு மையம் மற்றும் நகர வாரியாக சனிக்கிழமை (ஜூலை 20) பகல் 12 மணிக்குள் வெளியிட வேண்டும். அவ்வாறு முடிவுகளை வெளியிடும்போது, தேர்வர்களின் அடையாளங்களை மறைத்து வெளியிட வேண்டும்.வினாத்தாள் கசிவுக்கும் தேர்வுகள் தொடங்கியதற்கும் உள்ள இடைவெளியைத் தெளிவாகக் கணக்கிட விசாரணை விவரங்களைத் தாக்கல் செய்ய வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது.
இதை அடுத்து, நீட் தேர்வு முடிவு வெளியாகியுள்ளது. இதில் நகரங்கள், தேர்வு மையங்கள் வாரியாக ஒவ்வொரு மாணவர் பெற்ற மதிப்பெண்ணும் வெளியிடப்பட்டுள்ளது.