நீட் மறுதேர்வு முடிவுகள்- தேசிய தேர்வுகள் முகமை வெளியிட்டுள்ளது.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட இளநிலை மருத்துவப்படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த மே 5ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை நாடு முழுவதும் சுமார் 25 லட்சம் மாணவர்கள் எழுதினார்கள். நீட் தேர்வு முடிவுகள் கடந்த மாதம் 4ம் தேதி வெளியானது. இதனிடையே, நீட் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. சில தேர்வு மையங்களில் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் 6 தேர்வு மையங்களில் நீட் தேர்வுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தை விட குறைவான நேரமே ஒதுக்கப்பட்டதாக கூறி 1,563 மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்பட்டது.
அப்படி 1,563 மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்டதை ரத்து செய்த மறுதேர்வு நடத்த உத்தரவிட்டது.அதன்படி, கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்ட 1,563 மாணவர்களுக்கும் கடந்த மாதம் 23ம் தேதி நீட் மறுதேர்வு நடத்தப்பட்டது. மறுதேர்வில் 813 மாணவர்கள் மட்டுமே பங்கேற்றனர். எஞ்சிய 750 பேர் தேர்வு எழுதவில்லை.
இந்நிலையில், நீட் மறுதேர்வு முடிகளை தேசிய தேர்வுகள் முகமை இன்று வெளியிடப்பட்டது. நீட் மறுதேர்வு முடிவுகளை exams.nta.ac.in/NEET என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மறுதேர்வு முடிவுகள் காரணமாக ஒட்டுமொத்தமாக தரவரிசை பட்டியலையும் மதிப்பெண் மாற்றி வெளியிட்டுள்ளது. மறுதேர்வில் பங்கேற்காத மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் இல்லாமல் முன்பு எடுத்த மதிப்பெண் அடிப்படையில் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.