நீட்:ரத்துமில்லை,மறு தேர்வும் கிடையாது:சுப்ரீம் கோர்ட்!
இந்தாண்டு நடத்தப்பட்ட நீட் இளநிலை நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்துள்ள சுப்ரீம் கோர்ட் அவ்வாறு ஒட்டுமொத்த தேர்வையும் ரத்து செய்வது நியாயமாக இருக்காது எனவும் தமது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.நாடு முழுவதும் 24 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்துவிட்டு, மீண்டும் மறுதேர்வு நடத்த உத்தரவிட்டால், அது கடுமையான தொடர் விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.
கடந்த மே மாதம் நடைபெற்ற நீட் இளநிலை நுழைவுத் தேர்வு வினாத்தாள் கசிந்ததாகவும், இத்தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும் புகார் எழுப்பிய பல்வேறு போட்டியாளர்கள், இத்தேர்வை ரத்து செய்துவிட்டு, மறுதேர்வு நடத்த தேசிய தேர்வு முகமைக்கு (NTA) உத்தரவிட கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்நிலையில் மிகவும் தீவிரமான பிரச்சினையாக நீட் முறைகேடு மாறிய நிலையில், வழக்கை சிபிஐக்கு மாற்றி மத்திய அரசு உத்தரவிட்டது. நீட் முறைகேடு தொடர்பாக சிபிஐ, 6 விசாரணை அறிக்கைகளைத் தாக்கல் செய்தது.
ஒருவழியாக வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் ,''நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானது அல்ல. நீட் தேர்வு முழுவதிலும் முறைகேடுகள் கண்டுபிடிக்கப்படவில்லை. கருணை மதிப்பெண்களால் பாதிப்பட்டிருந்தால் அருகிலுள்ள நீதிமன்றங்களை நாடலாம்.ஹசாரிபாக், பாட்னா ஆகிய இடங்களில் சுமார் 155 பேர் பயன் அடைந்ததாகத் தெரிய வந்துள்ளது. அதற்காக 23 லட்சம் பேர் எழுதிய தேர்வை ரத்து செய்ய முடியாது. மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கையில் கடும் பாதிப்பு ஏற்படும்'' என்று தெரிவித்துள்ளது.