தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

நாவலர் நெடுஞ்செழியன் என்கிற நெம்பர் டூ...!

04:58 PM Jul 11, 2021 IST | admin
Advertisement

எம்எல்ஏக்களால் நிரம்புவற்கு முன் எம்ஏ (M.A,)க்களால் நிறைந்து கிடந்த வித்தியாசமான கட்சி திமுக. அப்படிப் பட்ட எம்ஏக்கள் தலைவர்களின் தலைவனான அறிஞர் அண்ணாவாலேயே, நடமாடும் பல்கலைக்கழகம் என்று போற்றப்பட்டவர் நாவலர் நெடுஞ்செழியன். அதேநேரத்தில் எப்படி இருந்த நான் இப்படி ஆகிவிட்டேன் என்று, பின்னடைவுக்காக அரசியலில் ஒருவரை சொல்லவேண்டுமென்றால் நிச்சயம் நாவலரைச் சொல்லலாம். அண்ணாவால் கொண்டாடப்பட்டவர், பின்னாளில் என் உதிர்ந்த ரோமம் என்று ஜெயலலிதாவால் சிறுமைபடுத்தப்பட்டார். ஒரு சட்டமன்ற தேர்தலில் நானூறு சொச்சம் ஒட்டுக்களை மட்டுமே வாங்கி, அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியவர்.அருமையான, தள்ளாட்டமான, அமைதியான என மூன்று வகை கொண்டது நாவலரின் வாழ்க்கை.

Advertisement

நாவலர் என்று போற்றப்பட்டவருக்கு சிறுவயதில் பேச்சுக்கோளாறு. உச்சரிப்பு அவ்வளவு சுத்தமாக வராது என்பதுதான் அதிர்ச்சிகரமான விஷயம்… ங என்ற எழுத்து வரவேமாட்டேன் என்று அடம்பிடிக்கும். அந்த பலவீனத்தையே தன் பலமாக, பேச்சின் அடையாளமாக மாற்றிக்கொண்டவர் நெடுஞ்செழியன். சினிமாவில் பாதி வசனத்தை பேசிவிட்டு மீதியை எதிராளிகளே புரிந்துகொண்டு சிரிக்கட்டும் என்று கேப் விடும் பாணியை முதன் முதலில் மேடையில் கொண்டுவந்தவர் நெடுஞ்செழியன்தான்..விறுவிறுப்பாய் பேசிக்கொண்டே போவார்.. பட்டென நிறுத்தி அமைதியாகி அவருக்கு உச்சரிப்பில் ஒத்துழைப்பு தராத ‘ங’ மேல் புள்ளியை வைத்து ங்…… என ஒரு ஸ்டைலாக இழுப்பார்.. அதிலேயே மேற்கொண்டு அவர் யாரை என்ன சொல்ல வருகிறார் என்பது மேடைக்கு எதிரே உள்ளவர்களுக்கு புரிந்துபோய், கைத்தட்டல் நீண்டநேரம் விண்ணை பிளக்கும்..

Advertisement

ஒருபேச்சுக்கு சொன்னால், பிற்காலத்தில் நடிகர் விஜயகாந்த் தனது பல படங்களில் இத்தகைய ‘’ங்’’ இழுப்பு ஸ்டைலை வெளிப்படுத்தினார் பட்டுக்கோட்டைக்கு அருகே உள்ள திருக்கண்ணபுரம்தான் பிறந்த ஊர். நாராயணசாமி என்று பெற்றோரால் பெயரிடப்பட்டு பின்னாளில் நெடுஞ்செழியன் என்று பெயரை மாற்றிக்கொண்டவர். சீனுவாசன் என்ற இவரது தம்பியும் இரா.செழியன் என மாற்றிக்கொண்டது இன்னொரு ஆச்சர்யம். நீதிக்கட்சி மற்றும் திராவிட இயக்கத்தால் ஈர்க்கப்பட்ட குடும்பத்தின் பின்னணியே இதற்கு காரணம்.. இரா.செழியன், மிகச்சிறந்த நாடாளுமன்றவாதி என புகழ்பெற்றவர்.

திராவிட இயக்கத்தின் தலைவராக மின்னுவதற்கு முன் நாவலரின் இளமைப்பருவத்தை உற்று நோக்கினால், துடுக்குத்தனம் நிறைந்த படிப்பாளி என்ற பிம்பமே பெரியதாக தெரியவரும். அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தில் அவர் படித்தபோது, வகுப்பு தவிர்த்தநேரங்களில் கல்லூரி மாணவர்களுக்கே உண்டான இளம்பெண்கள் மீதான எதிர்ப்பாலின ஈர்ப்பு விஷயத்தைவிட மொழியறிவை வைத்து நையாண்டித்த னமும், போதிக்கும் குணமுமே மேலோங்கிக்கிடந்தன. தமிழிலக்கணத்தில் வல்லவரான அவர், இலக்கியம், வரலாறு, அரசியல் அறிவியல் என எந்த சப்ஜெக்ட்டில் கேள்வியைக் கேட்டாலும் அருவி போல் கொட்டி பிரசங்கமே செய்வார். பாட புத்தகங்களையும் தாண்டி எண்ணற்ற நூல்களை படிக்க ஆரம்பித்ததன் விளைவு அது..

நாத்திகரான நாவலர், ராமாயணம், மகாபாரதம், பெரியபுராணம் போன்றவற்றை திட்டமிட்டே கரைத்துக் குடித்திருந்தார். காரணம், வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அவற்றிலிருந்து மேற்கொள்காட்டி ஆத்தீகத்தின் ஆதிக்கப்போக்கை வெளுக்கத்தான் என்பதைத்தவிர வேறு காரணம் என்ன இருக்கப்போகிறது. இத்தகைய தீவிரமான நாத்திகப்போக்கு தந்தை பெரியாரிடம் நாவலரை நெருக்கமாக கொண்டு சென்றதில் ஆச்சர்யமே இல்லை.. 24 வயதில் பெரியாரின் திராவிடர் கழகத்தில் தொண்டனாக குறுந்தாடி இளைஞனான நாவலர் சேர்ந்தபோது முன்னோடியாக அண்ணாவும் கிளாஸ்மெட்டுகள் போல கலைஞர், பேராசிரியர், அன்பழகன் போன்றோரும் அமைந்தனர்.

மேடைப்பேச்சு கேட்கவந்தவர்களை உற்சாகத்தில் கரைபுரளச்செய்வார். எந்த நேரத்தில் அவர் வாயில் என்ன வார்த்தை மாட்டிக்கொண்டு படாதபாடு படும் என்பது அவருக்கே தெரியாத ஒன்று. சும்மா என்று ஒரு வார்த்தை வந்திருக்கும்.. ஆமாய்யா இந்த சும்மா என்ற வார்த்தை இருக்கிறதே என்று ஆரம்பிப்பார். சும்மாத்தான் இருக்கேன்னு ஆம்பளை ஒருத்தன் சொன்னா அந்த சும்மாவுக்கு வேலைவெட்டிக்கு போகலைன்னு அர்த்தம். உன் மருமவ சும்மாவா இருக்கான்னு ஒருத்தி கேட்டா, அந்த சும்மாவுக்கு இன்னும் கர்ப்பம் அடையலான்னு அர்த்தம். சும்மா இந்த பக்கம் வந்தேன்னு ஒருத்திகிட்டே இன்னொருத்தி சொன்னா, தற்செயலா ஆனா வேவு பாக்க வந்தேன் அர்த்தம்..இப்படி ஒரு சும்மா வார்த்தைக்கு சும்மா சும்மா அர்த்தம் சொல்லிக்கொண்டே அரட்டைக்கச்சேரியாக மாற்றிவிடும் ஆற்றல் நாவலரிடம் உண்டு.

படிப்பாற்றல் மேடைப்பேச்சு, கடுமையான கட்சிப் பணி என உழைத்தவரிடம் இருந்த மிகப்பெரிய குறைபாடு, முன்னிலை படுத்திக்கொண்டு தலைமை பீடத்தை நோக்கி பயணிக்காமல் சார்ந்து இருந்தலே பாதுகாப்பானது என்றெடுத்த நிலைப்பாடு தான். இந்த போக்கிலேயே ஊறிப்போய்விட்டதால் பின்னாளில் அவர் ஒரு தலைமையாய் தலைதூக்க முயற்சித்தபோது எதுவும் கைகூடவில்லை.

பெரியாரைவிட்டு அண்ணா பிரிந்துவந்து 1949ல் திமுகவை ஆரம்பித்தபோது, நாவலரும் வெளியே வந்து திமுகவின் துணைப்பொதுச்செயலாளரானார். ஆறு ஆண்டுகளுக்கு பிறகு பதவி உயர்வு பெற்று பொதுச்செயலாளராகவும் ஆனார். 1962ல் பொதுத்தேர்தல் முடிந்து சட்டமன்றத்தில் திமுக எதிர்க்கட்சியாக அமர்ந்தது. காஞ்சிபுரத்தில் தோல்வியுற்ற அண்ணா மாநிலங்களவை உறுப்பினராக போய்விட்டதால் அடுத்த இடத்தில் இருந்த நாவலர் நெடுஞ்செழியன்தான் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரானார்..!

இப்படி நெம்பர் டூவாக இருந்த நாவலர். 1967-ல் திமுக வெற்றிபெற்று அண்ணா ஆட்சி அமைத்தபோது அவரது அமைச்சரவையில் நெம்பர் டூ. 1969-ல் முதலமைச்சர் அண்ணா மறைந்தபோது, நெடுஞ்செழியன் இடைக்கால முதலமைச்சர் ஆனார்.நெம்பர் டூ என்ற அடையாளம் அழிந்து முதலமைச்சராய் நெம்பர் ஒன்னாய் நாவலர் வருவார் என அரசியல் உலகமே எதிர்பார்த்தது. ஆனால் கலைஞருக்கும் அப்போது திமுகவில் மிகப்பெரிய சக்தியாக திகழ்ந்த எம்ஜிஆருக்கும் இடையில் இருந்துவந்த 23 ஆண்டுகால நட்பு, நாவலரின் கனவை தகர்ந்தெறிந்துவிட்டது..எம்ஜிஆரின் ஆதரவோடு கலைஞர் முதலமைச்சராகிவிட, கொஞ்ச காலம் ஊடல், அது முடிந்து சமரசமாகி கலைஞரது அமைச்சரவையில் நெடுஞ்செழியன் நெம்பர் டூ..

1969-ல் கலைஞர் முதலமைச்சர் ஆவதற்கு முன்னின்று உதவிய எம்ஜிஆரை, பின்னாளி ஒரு சம்பவத்தில் நாவலர் வெச்சி செஞ்சார். 1972-ல் எம்ஜிஆரை திமுகவில் இருந்து நீக்குவது என்று கட்சி தீர்மானித்துவிட்டது. ஆனால் முறைப்படி அறிவிக்க கலைஞர் யோசித்து கொண்டிருந்த நேரம். திடுதிப்பென்று, தீர்மானத்தை பிடிஐ செய்தியாளர் வெங்கட்ராமனிடம் நாவலர் சொல்லிவிட்டார். உடனே அது டெல்லி அலுவலகத்திற்கு பாஸாகி நாடு முழுக்க செய்தியாகிவிட்டது என்று ஊடக சீனியர்கள் சொல்வார்கள்.1976-ல் கலைஞர் ஆட்சி டிஸ்மிஸ் ஆகும் வரை அப்படியே அமைச்சரவையில் நெம்பர் டூவாக பயணம். திமுக ஆட்சி போனபின், கட்சியிலிருந்து வெளியேறி மக்கள் திமுக என ஆரம்பித்தார்.

ஆட்சியில் இல்லாத கலைஞரையும், அதிமுக என்ற கட்சியை ஆரம்பித்து ஆட்சியை கைப்பற்ற போராடி வரும் எம்ஜிஆர்.. இவர்களுக்கு இடையே, வெகு சீனியரான தன்னால் எளிதில் முன்னேறி முதலமைச்சர் கட்டிலில் அமர்ந்துவிட என நினைத்தார். ஆனால் அது நடந்தேறவில்லை. ‘’மக்கள் திமுக’’ மக்கள் மத்தியில் மட்டுமல்ல, நெடுஞ்செழியன்மேல் பெருமதிப்பு வைத்து கூடவே இருந்தவர்கள் மத்தியிலும்கூட எடுபடவில்லை. கடைசியில், 1977-ல் வெற்றிபெற்று ஆட்சி அமைத்த அதிமுகவுக்குள் மக்கள் திமுகவை ஐக்கியம் செய்தார் நெடுஞ்செழியன்.

ஆனால் இம்முறை, நெம்பர் டூ என்ற இடத்திற்கே சத்திய சோதனை.. எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்த ஓராண்டில் திமுகவை விட்டு வெளியேறி அதிமுகவில் ஐக்கியமானார் நாஞ்சில் கே.மனேகரன். அதனால் எம்ஜிஆரின் முதல் அமைச்சரவையில் நாஞ்சிலார்தான் நெம்பர் டூ.1980ல் நாஞ்சிலார் அதிமுகவைவிட்டு திமுகவுக்கு மீண்டும் சென்றபிறகே, எம்ஜிஆரின் அமைச்சரவையில் நாவலர் நெம்பர் டூ இடத்தை பிடிக்கமுடிந்தது.

எம்ஜிஆர் மறைந்தபோது இரண்டாவது முறை இடைக்கால முதலமைச்சரானார் நாவலர். ஆனால் எம்ஜிஆரின் மனைவி விஎன் ஜானகி குறுக்கே கேட் போட்டதில் மறுபடியும் முதலமைச்சர் இருக்கையை நாவலரால் எட்டிப்பிடிக்க முடியவில்லை. அடுத்து, அரசியல் களத்தில் ஜெயலலிதாவுடன் இணைந்தும் பின்னர் நால்வர் அணி என்ற பெயரில் தனிப்படையாக ஜெயலலிதாவுக்கு எதிராகவும் வாள் சுற்றினார். ஆனால் வாள் வீச்சு வெற்றியை தராததால் பல பின்னடைவுகளை சந்ததித்தார்.

கடைசியில் நாவலரின் ஆரம்பகால அரசியல் அனுபவங்களை பயன்படுத்திக்கொள்ள நினைத்தார் ஜெயலலிதா. அதிமுகவில் இணைத்துக்கொண்ட நாவலரை 1991ல் ஆட்சி அமைத்தபோது நிதியமைச்சராக்கினார்..அண்ணா,கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது அமைச்சரவையில் நெம்பர் டூ என இப்படித்தான் நாவலர் நெடுஞ்செழியனின் நெம்பர் டூ என்ற இடம் அவருக்கு நிரந்தமாகிப்போய்விட்டிருந்தது.

பெரியாரிடம் தொடங்கி அண்ணா, கலைஞர் எம்ஜிஆர் என பயணித்த அரசியல் பயணம், ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவில் இருந்தபோது, கடந்த 2000 ஜனவரி 12ந்தேதி இந்த உலகில் நிறைவுக்கு வந்தது.. இன்னும் ஓராண்டு வாழ்ந்திருப்பாரேயானால், 2001ல் ஜெயலலிதா மறுபடியும் அமைத்த ஆட்சியில் நிதியமைச்சர் பதவி பெற்று அவருக்கே உண்டான நிரந்தர நெம்பர் டூ பதவியில் இருந்தபடியே மறைந்துபோயிக்க வாய்ப்பிருந்திருக்கும். சிந்திக்க மறுப்பவன், அஞ்சுபவன் தனக்குத் தானே துரோகியாகி மூடநம்பிக்கையின் அடிமையாகிறான் என்று பொட்டில் அறைந்தார்போல சொன்ன டாக்டர் நாவலர் நெடுஞ்செழியனின் 101வது பிறந்த நாள் இன்று

ஏழுமலை வெங்கடேசன்

Tags :
ADMKdmkera. nedunchezhiyano 2tamilnadu ministerநாவலர்நெடுஞ்செழியன்
Advertisement
Next Article