For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

தேசிய நூலகர் தினம்!

05:50 AM Aug 12, 2024 IST | admin
தேசிய நூலகர் தினம்
Advertisement

ந்திய நூலகத்தின் தந்தை என அழைக்கப்படும் எஸ்.ஆர். ரங்கநாதனின் பிறந்த நாளான ஆகஸ்டு 12-ம் தேதி தேசிய நூலகர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. சென்னை பல்கலைக்கழகத்தின் முதல் நூலகரான இவர் இங்கிலாந்து சென்று நூலக அறிவியலில் புதுமையைக் கற்றார்.அக்காலத்தில் தமிழக நூலகங்களில் புத்தகங்களை பராமரிக்கும் ஒழுங்கமைப்போ போதிய ஊழியர்களோ இல்லை. இந்நிலையில், புத்தகங்களைப் பொருள் வாரியாக அடுக்குவதற்காக "கோலன் பகுப்பு முறை" என்ற முறையை ரங்கநாதன் கண்டுபிடித்தார். இந்த முறை நூலகங்களில் பின்பற்றப்பட்டு வருகிறது. நூலகவியலுக்கு இவர் ஆற்றிய பங்களிப்புக்காக இந்திய அரசு இவருக்கு பத்ம விருது வழங்கி கவுரவித்தது. தவிர இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள பல்வேறு நூலகவியல் சார்ந்த உயர்தொழிற்கழகங்களில் உறுப்பினராக இருந்து உயர் பதவிகளையும் வகித்தார்.

Advertisement

பண்டைக்காலத்தில் கல்வியறிவு பெற்றோரின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. அரண்மனைகளிலும் கோவில்களிலும் பெரும்பாலும் படிக்கும் நோக்கமின்றி பெருமைக்காக மட்டுமே நூல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. பிற்காலத்தில் நூல்கள் படிப்பதற்கே என்ற எண்ணம் தோன்றி நூலகங்கள் உருப்பெற்றன. 'கண்டதைப் படிப்பவன் பண்டிதன் ஆவான்' என்பது பழமொழி. எதுவும் தெரியாமல் பிறந்த நாம் அறிஞனாக நூலகப் படிப்பு அவசியம். அத்தகைய தேசிய நூலக தினம்தான் இன்று கொண்டாடப்படுகிறது. அதற்கு காரணம், தமிழகத்தை சேர்ந்த சீர்காழி ராமாமிருதம் ரங்கநாதன்தான். 

Advertisement

இந்நாளில்  இரண்டு புதிய நூலகம் குறித்து அறிந்துக் கொள்வோமா?

இந்திய தேசிய நூலகம்

1836ம் ஆண்டு மார்ச் 21ம் தேதி துவக்கப்பட்ட இந்த இந்திய நூலகத்திற்கு என்று சில விசேஷ சிறப்புகள் உள்ளன. அவை இந்திய நாட்டின் முக்கியமான ஆவணங்களின் நகல்களை பாதுகாக்கும் பொறுப்பை பெற்ற ஒரே இந்திய நூலகம் இது. வருடத்தில் 362 நாட்கள் திறந்திருக்கும். மூன்றே மூன்று நாட்கள் மட்டுமே மூடி இருக்கும் நூலகம். நூலகத்தின் பிரதான ஹாலில் வாசகர்கள் படிப்பதற்கு சிறப்பு அனுமதி சீட்டு வாங்க வேண்டும். புத்தக விநியோகச் சட்டத்தின் கீழ், நாட்டில் வெளியிடப்படும் ஒவ்வொரு வெளியீட்டின் ஒரு பிரதியைப் பெற இந்த தேசிய நூலகத்திற்கு உரிமை உண்டு. சிறப்பு அம்சங்கள் பொருந்திய முக்கியமான ஆவணங்களை தேவையான நேரத்தில் கொடுத்து உதவும் நூலகம். அயல்நாட்டு மொழிகளின் வளர்ச்சியில் உதவி புரியும் நூலகம். அயல்நாட்டு மொழிகளின் இலக்கியங்களை தருவித்து தரும் பொறுப்பு இந்த நூலகத்தையே சாரும். இத்தனை பெருமைகளுக்கும் சொந்தமானதுதான். இந்திய தேசிய நூலகம்.

இந்தியாவின் தேசிய நூலகம் கொல்கத்தா மாநிலம், அலிப்பூரில் உள்ள பெல்வெடேர் என்ற இடத்தில் 1893ல் கட்டப்பட்டது. இதுவே இந்தியாவின் மிகப்பெரிய நூலகம் ஆகும். கொல்கத்தாவில் அமைந்துள்ள இந்திய தேசிய நூலகத்தின் பரப்பளவு 30 ஏக்கர் நிலப்பரப்பு ஆகும். இந்தியாவில் காணப்படுகின்ற சேகரிப்பு நூலகங்களில் தேசிய நூலகமும் ஒன்று. பொதுமக்களின் நலனுக்காக தேசிய நூலகம் 1953ல் பிப்ரவரி மாதம் திறந்து வைக்கப்பட்டது. 1990ம் ஆண்டு வரை இங்கு 15 லட்சம் நூல்கள் இருந்தன. தற்போது 22 லட்சம் நூல்கள் மற்றும் கையெழுத்துப் பிரதிகளுடன் நூலகம் செயல்பட்டு வருகிறது. இந்திய தேசிய நூலகத்தில் சுமார் 2.2 மில்லியனுக்கும் அதிகமான நூல்கள் காணப்படுகின்றன.

ஆரம்பத்தில் நேஷனல் நூலகம் கல்கத்தாவில் 1836ம் ஆண்டு மார்ச் 21ம் தேதி எஸ்பிளான்டோ பகுதியில் பொதுமக்களுக்காக திறக்கப்பட்டது. அப்போது அதன் பெயர், ‘கல்கத்தா பொது நூலகம்.’ இதனை அரசின் எந்தவொரு உதவியுமின்றி தனியாக நடத்தியவர் ஜே.ஹெச்.ஸ்டாக்ளியர். இவர் இங்கிலிஷ் மெயில் பத்திரிகை ஆசிரியர். இவர்தான் பொதுமக்கள் பயன்பெற ஒரு நூலகம் வேண்டும் என்று வற்புறுத்தி வந்தவர். இதனை ஒரு பொதுக்கூட்டத்தில் அறிவித்தார். அன்றே ஏகப்பட்ட சந்தா வசூலானது. 6500 புத்தகங்கள் நன்கொடையாக வந்தன.

டாக்டர் எப்.பி.ஸ்ட்ராங் தன்னுடைய நிலத்தை நூலகம் அமைக்கக் கொடுத்தார். ஸ்டாக்ளியர் நூலக செயலாளராகவும், ஸ்டேசி என்பவர் முதல் நூலகராகவும் பணியாற்றினார்கள். கல்கத்தா நூலகம் ஆரம்பத்தில் அச்சிடப்பட்ட விஷயங்களைப் பராமரிப்பதற்காக உருவாக்கப்பட்டது. பின்னர் இம்பீரியல் நூலகத்துடன் கொல்கத்தா நூலகம் இணைத்து ஒருமித்த நூலகமாக1891ம் ஆண்டு மாற்றப்பட்டதே இன்றைய தேசிய நூலகம் ஆகும். ஆரம்பத்தில் தனியாருடைய நூலகமாகவே இயங்கி வந்தது. பொது மக்கள் அனுமதிக்கப்படாமல் இருந்தனர். பின்னர் கர்ஷன் பிரபு காலத்திலேயே இந்த நூலகம் அரசுடைமையாக்கப்பட்டது. அதன் பின்னர்தான் அனைத்துத் தரப்பு மக்களும் நூலகம் சென்று படிக்கும் படியாக 1902ம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது. அதன்படி இந்தியாவில் துவக்கப்படும் எந்த நூலகமானலும் அதை யாரும் சென்று படிக்கலாம், நூல்களை எடுக்கலாம் என்ற நிலை மாறியது.

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு இந்திய அரசு இம்பீரியல் நூலகத்தின் பெயரை மாற்றி, ‘தேசிய நூலகம்’ என்று பெயரிட்டது. பிப்ரவரி 1, 1953 அன்று கொல்கத்தாவில் உள்ள தேசிய நூலகம் மௌலானா அபுல் கலாம் ஆசாத்தால் திறந்து வைக்கப்பட்டது. கொல்கத்தா தேசிய நூலகத்தின் முதல் நூலகராக பி.எஸ்.கேசவன் நியமிக்கப்பட்டார். இந்த நூலகத்தில் இந்தியாவில் பேசப்படும் மற்றும் புழக்கத்தில் உள்ள அனைத்து மொழிகளிலும் வெளியாகின்ற நூல்கள் மற்றும் செய்தித்தாள்கள் இங்கு காணப்படுகின்றன. அதுமட்டுமல்லாது, ஹிந்தி மொழியில் வெளியிடப்பட்ட பல நூல்கள் மற்றும் கையெழுத்துப் பிரதிகளும், வரைபடங்களும் இந்த நூலகத்தில் உள்ளன.

இந்த நூலகம் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் வார இறுதி நாட்களில் காலை 9.30 முதல் மாலை 6 மணி வரையிலும் திறந்திருக்கும். இவை தவிர இந்தியாவின் பொது விடுமுறை நாட்களான காந்தி ஜயந்தி மற்றும் சுதந்திர தினம் போன்ற தினங்களில் மூடப்பட்டும் இருக்கும். இந்திய தேசிய நூலகமானது இந்திய நாட்டின் அரசாங்கத்தின் சுற்றுலாத்துறை மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சகத்தின் கண்காணிப்பின் கீழ் பராமரிக்கப்பட்டும் பாதுகாக்கப்பட்டும் வருகின்றது. இங்கு வங்காளம், இந்தி, தமிழ், ரஷ்ய, அரபிய, பிரெஞ்சு போன்ற மொழிகளிலான சேகரிப்புக்கள் மற்றும் நூல்கள், பத்திரிகைகள் போன்ற பல வெளியீடுகள் காணப்படுகின்றன. அதுமட்டுமல்லாது தொன்மை வாய்ந்த மொழியாகக் கருதப்படும் தமிழ் மொழியின் பண்டைய காலத்தில் பயன்படுத்தப்பட்ட அரிச்சுவடிகளும் இந்திய தேசிய நூலகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. முக்கியமாக, நாட்டின் அரசு ஆவணங்கள் உட்பட ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பிற முக்கியமான நாட்டு ஆவணங்கள் தேசிய நூலகத்தில் சேகரிக்கப்பட்டு வைக்கப்படுகின்றது. அது மட்டுமல்லாது, கல்வி, கலை, கலாசாரம், பண்பாடு, இலக்கணம், அறிவியல், விஞ்ஞானம், நவீனம், தொழில்நுட்பம் போன்ற அனைத்து துறை சார்ந்த நூல்களும் இங்கு உள்ளன.

எதிர்கால ரகசிய நூலகம்

ஆற்றல்மிக்க மனிதக்குல அறிவின் ஒட்டுமொத்த சேகரமாக நூலகங்கள் விளங்குகின்றன. வரலாறு தொடங்கிய காலம் தொட்டு, இன்றுவரை மனிதச் சமூகங்களுக்கு நூலகம் ஒரு பண்பாட்டு அடையாளமாகத் திகழ்கிறது. மனிதர்கள் தங்கள் முன்னோர்களின் அறிவைப் பாதுகாத்து, அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்க, தான் கண்டறிந்தவற்றைத் தொகுத்து ஆவணப்படுத்தும் முதன்மை இடமாக நூலகங்கள் விளங்குகின்றன. அலெக்ஸாண்ட்ரியா நூலகம் தொடங்கி அண்ணா நூற்றாண்டு நூலகம் வரை வரலாற்றுச் சிறப்புமிக்க ஏராளமான நூலகங்கள் இன்றைக்கு உலகில் உண்டு. உள்ளூர் நூலகம் தொடங்கி சர்வதேச நூலகம் வரை அனைத்து நூலகங்களுக்கும் பொதுவான ஒன்று - நூல்களை வாசித்தல்; இதுதான் நூலகச் செயல்பாட்டின் அடிப்படை அம்சமும்கூட. ஆனால், நார்வேயில் புதிதாகத் தொடங்கப்பட்டிருக்கும் ஒரு நூலகத்திலுள்ள நூல்களை வாசிக்க நீங்கள் 2114 வரை காத்திருக்க வேண்டும்.

ஸ்கேண்டிநேவிய நாடுகளில் ஒன்று நார்வே. இதன் தலைநகர் ஆஸ்லோவுக்கு வடக்கே உள்ள நோர்ட்மார்கா பகுதியில் ஸ்ப்ரூஸ், பிர்ச், பைன் மரங்கள் செழித்து வளர்கின்றன. நகரமயமாக்கல் அச்சுறுத்தலால், இப்பகுதி நகர நிர்வாகத்தால் பாதுகாக்கப்பட்ட பகுதியாக உள்ளது. நகர்ப்புற சுற்றுச்சூழல் முகமையின் கானகவியலாளர்கள் இந்த நிலத்தை 100 ஆண்டுகளுக்கு நகர நிர்வாகத்துக்கு வழங்கியிருக்கின்றனர். இந்த இடத்தில் தான் கடந்த 2014-ம் ஆண்டு, ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டு ‘எதிர்கால நூலகம்’ ஒன்று தொடங்கப்பட்டிருக்கிறது. மரங்களின் வளையங்களையும், நூலொன்றின் அத்தியாயங்களையும் தொடர்புப்படுத்தி, ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஓவியக் கலைஞர் கேட்டி பேட்டர்சன் இத்திட்டத்தை உருவாக்கியிருக்கிறார். இந்த ‘ரகசிய நூலக’த் திட்டம், நகர்ப்புற கட்டிட உருவாக்கத்தை நிர்வகிக்கும் Bjørvika Utvikling-ன் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

2014-ம் ஆண்டு தொடங்கி 2114-ம் ஆண்டுவரை ஒவ்வோர் ஆண்டும், உலகின் மிகச் சிறந்த எழுத்தாளர்களிடம் படைப்புகளைப் பெற்று, அப்படைப்பின் கையெழுத்துப் பிரதி இந்த நூலகத்தில் பாதுகாக்கப்படும். நூறு ஆண்டுகளின் முடிவில், 2115-ம் ஆண்டு இத்திட்டத்துக்காகச் சமர்ப்பிக்கப்பட்ட முதல் படைப்பு அச்சு நூலாக வெளிவரும். இப்படியாக ஒவ்வொரு நூலிலும் 3,000 பிரதிகள் வீதம் 3,00,000 பிரதிகள் அச்சிடுவதற்கான பொருள்கள் நோர்ட்மார்காவில் வளர்க்கப்பட்ட 1,000 மரங்களிலிருந்து பெறப்படும். இலக்கியம் அல்லது கவிதைக்கு மிகச்சிறப்பாகப் பங்களித்த, நடப்பு மற்றும் எதிர்கால தலைமுறைகளின் கற்பனையைப் படம்பிடிக்கும் திறனுள்ள படைப்புகளை வழங்கும் எழுத்தாளர்கள் இந்தத் திட்டத்துக்காகப் படைப்புகளை வழங்கக் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இதுதான் இத்திட்டத்தின் அடிப்படை இயங்கு முறை.

ஒவ்வோர் ஆண்டும், இந்த அமைப்பின் உறுப்பினர்கள் கூடி புதிய எழுத்தாளரைத் தேர்வு செய்து கையால் எழுதிய கடிதம் ஒன்றின் மூலம் இந்தத் திட்டத்துக்குப் பங்களிக்கக் கேட்டுக் கொள்ளப்படுவர். இதற்கு இரண்டே விதிகள் தான்: அந்தப் படைப்பு புதிய, வெளிவராத ஒன்றாக இருக்க வேண்டும், அதில் படங்கள் இருக்கக் கூடாது. இவற்றைத் தவிர்த்து எழுத்தாளர்கள் என்ன வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளலாம். வார்த்தை அளவுகோல் கிடையாது, அவர்கள் விரும்பும், தேர்ந்தெடுக்கும் எதைக் குறித்தும் அவர்கள் எழுதலாம். இந்தக் காடு முழுவதுமாக வளர்ந்து முடியும் வரை அவற்றை யாரும் வாசிக்கவோ, எடிட் செய்யவோ மாட்டார்கள். படைப்புகளுக்கு எந்த நிதியும் பெற்றுக் கொள்ளாமல், படைப்புகளை அவர்கள் தானமாகவே வழங்குவார்கள். புத்தகத்தின் தலைப்பைத் தவிர வேறு எதையும் அவர்கள் வெளியிடக் கூடாது. ‘உலகின் மிக ரகசியமான நூலகம்’ என்று தி கார்டியன் நாளிதழ் இதை அழைக்கிறது.இப்படியான பின்னணியில் இயங்கிக் கொண்டிருக்கும் இத்திட்டத்துக்கு இதுவரை மார்கரெட் அட்வுட், டேவிட் மிட்செல், எலீஃப் ஷஃபக், கார்ல் ஊவ் நாஸ்ஹார்ட், ஓஷன் யூங் போன்ற எழுத்தாளர்கள் படைப்புகளை வழங்கியுள்ளனர். இந்தப் படைப்புகளின் கையெழுத்துப் பிரதிகளை நாம் இப்போது பார்ப்பதற்கு மட்டுமே வாய்ப்பிருக்கிறது; எழுதியவரைத் தவிர வேறு யாரும் இதை வாசிக்க வேண்டுமென்றால் அவர்கள் 2115-ல் உயிரோடு இருக்க வேண்டும், அவ்வளவே!

வாத்தீ அகஸ்தீஸ்வரன்

Tags :
Advertisement