தேசிய அரவணைப்பு அல்லது கட்டிப்பிடி தினம்!
யார் ஒருவர் எதிர்கொள்ளும் எல்லா விதமான பிரச்சனைகளுக்கும் அணைத்துக்கொள்வது இறுதி தீர்வு என்கிறார்கள். எவரும் விரும்புவது அவர்களின் துயரங்களைப் போக்க தங்கள் அன்புக்குரியவர்களின் இறுக்கமான அரவணைப்பும் ஒன்று. மற்ற எல்லா உணர்வுகளையும் போலவே அதற்கென்று ஒரு நாள் ஒதுக்கப்பட்டுள்ளது. அணைப்புகளுக்கும் ஒன்று உண்டு. இது தேசிய அரவணைப்பு தினம் அல்லது தேசிய கட்டிப்பிடி தினம் என அழைக்கப்படுகிறது, இது ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 21 அன்று கொண்டாடப்படுகிறது. ஆம்.. அணைப்பு என்றால், அன்பின் வெளிப்பாடாக நிகழும் அணைப்பு. 'எது வந்தாலும் போனாலும், எந்தச் சூழ்நிலையிலும் நான் இருக்கிறேன் உனக்கு. என் தோள்கள் உன் மகிழ்ச்சிகள் சாய்வதற்கு மட்டுமல்ல; உன் துக்கங்கள் கண்ணீர் சிந்துவதற்கும்' என்று சொல்லாமல் சொல்வதற்கான ஒரு நாள்தான் 'ஹக் டே.'
வசூல் ராஜா படத்தில் கமலஹாசன் சொல்லித் தரும் கட்டிப்பிடி வைத்தியத்தைப் பார்த்திருப்பீர்கள். உண்மையிலேயே இதை அன்றாட வாழ்க்கையில் ஓர் அங்கமாகவே செய்து வந்தவர் 92 வயதான அன்னா செப்ரிங் என்ற பெண்மணி. மக்களை அணைப்பது இவருக்கு மிகவும் பிடிக்கும். இவர் ஒரு காலத்தில் மலையேறுபவராகவும் புகைப்படக்காரராகவும் இருந்தவர். ஜனங்களை நேசிப்பவராகவும் நேர்மறைச் சிந்தனைகள் நிரம்பியவராகவும் இவர் இருந்தார். புன்னைகையுடன் மக்களை அணைப்பது இவரது ஸ்பெஷாலிடி!
சிலி நாட்டின் வடக்குப் பகுதியில் இருக்கும் அடகாமா பாலைவனத்தின் தாமிரச் சுரங்கம் ஒன்றில் , 5.8.2010 அன்று தரைக்குக் கீழே 700 மீட்டர் ஆழத்தில் 33 சுரங்கத் தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். 69 நாட்கள் அவர்களை ஒருவாறு மீட்டுத் தரைப்பகுதிக்குக் கொண்டு வந்தார்கள். இவர்கள்தான் உலகத்திலேயே அதிகம் பேரால் அணைக்கப்பட்டவர்களாம்!
மனதுக்குப் பிடித்தவரை மிக நீண்ட நேரம் அணைத்துக் கொண்டிருக்கும் போது மூளையில் இருக்கிற ஆக்ஸிடோசின் ஹார்மோன் வெளியேறி மனதை மகிழ்ச்சிப் படுத்தும்.அந்த மகிழ்ச்சி ஸ்ட்ரெஸ்ஸை விரட்டும். அணைப்பு உடனடி மகிழ்ச்சி தருகிற ஓர் உளவியல் மருந்து என்கிறது அறிவியல். ஓர் அழுத்தமான அணைப்பு இருவரின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்கும் என்கின்றன சில ரிலேஷன்ஷிப் ஆய்வு முடிவுகள்.கோபத்தில் இருப்பவர், அச்சத்தில் இருப்பவர், அழுகிற குழந்தை என எவரையும் ஓர் அணைப்பின் மூலம் ஆசுவாசப்படுத்திவிடலாம். இந்த நாளில், இந்த நேரத்தில் எனத் திட்டமிட்டு `ஹக்' செய்யவேண்டியதில்லை. ஒருவருக்கொருவர் அணைத்துக்கொள்ள உள்ளத்தில் உணர்வு தோன்றும்.அந்தத் தருணங்களின் இயல்பான அணைப்புகள் இருவருக்குமிடையே உள்ள உறவுப் பிணைப்பை இன்னும் வலுவாக்கும். இருவருக்குள் ஒரு கம்ஃபர்ட் வட்டத்தை உருவாக்கிக்கொள்ள அணைப்பு எப்போதும் கைகொடுக்கும்.
குறிப்பாக உறவுகளுக்கு மத்தியில் பிணைப்பை வலுப்படுத்த கட்டிப்பிடிப்பது முக்கிய பங்கு வகிக்கிறது. கட்டிப்பிடிப்பதால் இருவருக்கு மத்தியில் நம்பிக்கை, நெருக்கம் மற்றும் உணர்ச்சி ரீதியான தொடர்பு அதிகரிக்கிறது. குடும்ப உறுப்பினர்கள் நண்பர்கள் அல்லது காதலர்கள் போன்ற அன்பானவர்களை கட்டிப்பிடிப்பதால் உங்களது உறவு மேலும் ஆழமாகும். கட்டிப்பிடிக்கும் செயல்முறையானது உடலில் சில நேர்மறையான தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக கட்டிப்பிடிப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மேலும் வெள்ளை ரத்த அணுக்களின் உற்பத்தி அதிகமாகி நோய் தொற்றுக்களை எதிர்த்து போராடும் உடலின் திறன் மேம்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இதை எல்லாம் கவனத்தில் கொண்டே 1986 ஜனவரி 21 முதல் இந்தக் ’கட்டிப்பிடி, அணைத்தல் நாள்’ அனுசரிக்கப்பட்டு வருகிறது. அமெரிக்காவில் இது அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட நாளாகும். பின்னர் இந்நாள் கனடா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஜெர்மனி, போலந்து போன்ற நாடுகளுக்கும் பரவியது!
தமிழ் செல்வி